படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

மனிதனின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்ள பெண்களின் (தாய் வழி) மரபணு ஆராய்ச்சியே இன்றியமையாததாகும்.* அமெரிக்க வாழ் தமிழர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளர் *ஜோதி. *எஸ். தேமொழி எழுதியுள்ள *"மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்"* நூலானது 10 அத்தியாயங்களைக் கொண்டதாகும். குறிப்பாக 1) மரபுவழி அறிதலில் தாய்குலத்தின் பங்கு 2) மனித இன பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும் 3) மனித இனத்தினர் எப்பொழுது அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தனர் 4) ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்பு உண்டா? 5) ஸ்டெப்பி மேய்ப்பாளர்கள் இனக்குழுவின் பரவலுக்கு காரணம் 6) நெல் வேளாண்மையும் கோழி வளர்ப்பின் தொடக்கமும் 7) மயிலாடும்பாறை மூத்த தமிழ்குடியின் வாளின் காலம் 😎 நகர விரிவாக்கமும் மார்செட்டி மாறிலி கோட்பாடும் 9) ஏரிகளில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுகள் 10) தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு போன்ற தலைப்புகளில் அறிவியல் கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளார் நூலாசிரியர். உலக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியதாகும். குறிப்பாக அவர்களது திறமைகள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதோடு ஆண்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தொடர்ந்து முற்பட்டு வருகிறார்கள். மனித இனம் தங்கள் வரலாற்றை, பரிணாமிய வளர்ச்சியை பற்றி ஆராய்ச்சி செய்யும் பொழுது அதற்கு பெரிதும் உதவியாய் இருப்பது பெண்கள் தான். பெண்களின் மரபணு அடிப்படையில் தான் பரம்பரை ஆராய்ச்சியே மனித குலத்தின் ஆரம்பகால வாழ்க்கையும் உலகம் முழுவதும் அவர்கள் பரவிய வரலாற்றையும் பறை சாற்றுகிறது. ஆண்களின் மரபணு வழி ஆராய்ச்சியை விட பெண்களின் மரபணு வழி ஆராய்ச்சி முடிவுகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதே விஞ்ஞான பூர்வமான உண்மை. இதன் மூலம் பெண்களின் பங்கு வரலாற்றில் அவர்களுக்கு அசைக்க முடியாத இடமும் முக்கியத்துவமும் உள்ளது என்பதை தெளிவுபட பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். மனித இனம் அமெரிக்க மண்ணில் 24,500 முதல் 22,000 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் ஒரு முறையும், பின்னர் 16,400 முதல் 14,800 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்தில் ஒரு முறையும் என வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பிரிவாக வந்திருக்கக்கூடும் என்று வரலாற்றுச் சான்றுகளோடு பதிவிடுகிறார் நூலாசிரியர். இந்த இரு காலகட்டங்களில் இருந்த தட்பவெட்ப நிலை, சுற்றுச்சூழல் ஆகியவை வெற்றிகரமான புலம் பெயர்வுக்கும் குடியேறுதலுக்கும் உதவியிருக்கக்கூடும் என்பது புவியியல் சார்ந்த அறிவியல் தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. தோற்றத்தில் தென்னிந்திய மக்களை ஒத்திருக்கும் ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் அவர்களது பண்பாடு மொழிக் கூறுகளுடன் தமிழருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற ஒரு அறிவியல் கருத்துக்கள் உள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரே பறவை கோழிதான். சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் பயிரிடுதலின் தொடக்கமே கோழி வளர்த்தலின் தொடக்கமாக இருந்தது. அதற்கு முன்னர் கோழி ஒரு வளர்ப்பு பறவை அல்ல என்பதே பல்வேறு ஆய்வுகளில் கிடைத்திருக்கும் செய்தி. நெல் பயிரிடும் முறை கண்டறியப்படாமல் இருந்தால் கோழி மனிதர்களுக்கு உணவாகும் நிலை ஏற்பட்டிருக்காது. இரை போடும் மனிதருக்கே இரையாவது வெள்ளாடுகளின் நிலை மட்டுமல்ல கோழிகளுக்கும் அதே முடிவு தான் என்பதை மிக அருமையாக நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இரும்பின் பயன்பாடு மனித குல வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு முக்கியமான தொழில் நுட்பக் கண்டுபிடிப்பு ஆகும். இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தான் வேளாண் உற்பத்தி பெருக்கமும் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கத்தையும் நகரமயமாக்கலையும் நாகரீக பண்பாட்டு வளர்ச்சியையும் உருவாக்க முடிந்தது. சுமார் 4200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது என்பது வரலாற்று ஆய்வில் தெரிய வருகிறது. குறிப்பாக மயிலாடும்பாறை பகுதியில் செய்யப்பட்ட ஆய்வு இதனை உறுதிப்படுத்துகிறது. 1850 முதல் 1950 வரையில் நிகழ்ந்த போக்குவரத்து தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்கள் தொகை பெருக்கமும் நகர வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் நேரடியான காரணங்களாக அமைந்தன. 4000 ஆண்டுகளுக்கு முன்பே கற்காலத்தில் மனித குலம் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ளது என்பது அதிசயமிக்க தகவலாகும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒருவரின் வாழ்நாள் காலம் என்பது அதிகரித்து உள்ளதை நாம் அறியலாம். இதன் மூலம் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் என்பது 75 ஆண்டுகள் என உயர்ந்து உள்ளதை பார்க்க முடியும். 1870 களில் மனிதனின் ஆயுட்காலம் சராசரியாக 30 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்தது. இன்றைய அறிவியல் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றின் மூலம் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சி மக்களை இவர்களிடம் இருந்தும் இயற்கை பேரிடர்கள் இருந்தும் காக்கக்கூடிய வசதிகள் ஏற்பட்டதன் காரணமாக மனிதனின் சராசரி வாழ்க்கை என்பது 75 ஆக அதிகரித்துள்ளது. இது போன்ற அறிவியல் தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்துத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் தேமொழி. அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் மாணவர்களும் அனைவரும் இந்த நூலை வாசிப்பது அவசியம். இதன் மூலம் அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் எப்படி ஏற்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும். *"மனித இனத்தின் பரவலும் வளர்ச்சியும்"* (அறிவியல் கட்டுரைகள்) நூலாசிரியர் : *ஜோதி. எஸ். தே மொழி* விலை : ரூபாய் 150/- வெளியீடு : *சந்திரோதயம் பதிப்பகம்* மதுரை- 625018 தொடர்பு எண்: 7010997639 MJ. பிரபாகர்

கருத்துகள்