படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

இளைய தலைமுறைக்கு அகில இந்திய வானொலியின் வரலாறை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.* இந்திய வானொலி மட்டுமல்ல, உலக அளவிலான வானொலிகள் வரலாறு குறித்த ஆய்வை மேற்கொண்டவர், உலக வானொலிகள், ஹாம் வானொலி ஆகிய நூலின் ஆசிரியரும் பிபிசி உலக சேவையில் பணிபுரிந்தவரும், சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் தங்க. ஜெய்சக்திவேல் *"பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி"* எனும் வரலாற்று நூலினை தொகுத்துள்ளது பேரன்புக்குரியதாகும். 360 பக்கங்கள் கொண்ட இந்த நூல் வானொலியின் வரலாறு குறித்த மிகப்பெரிய ஆவணமாகும். குறிப்பாக "ஊடகவியலாளர்கள் பார்வையில் வானொலி" "நேயர்கள் பார்வையில் வானொலி" "ஆய்வாளர்கள் பார்வையில் வானொலி" எனும் மூன்று பிரிவுகளாக பிரித்து 46 அறிஞர் பெருமக்களிடம் வானொலியின் வரலாறும் அனுபவம் குறித்த கட்டுரைகள் பெற்று இந்நூலை தொகுத்து ஆவணப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். இந்தியா சுதந்திரம் பெற்ற போது மொத்தம் ஆறு வானொலி நிலையங்கள் இருந்துள்ளன. அவற்றில் இரண்டு வானொலி நிலையங்கள் தமிழகத்திலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சிராப்பள்ளியிலிருந்தும் செயல்பட்டு வந்தது. அகில இந்திய வானொலி இந்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் கல்வி, விவசாயம் குறித்தும் முக்கியமாக பிராந்திய மொழியில் செய்திகளை வழங்கி வந்தது. தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் மற்றும் ஒலிம்பிக் போன்ற முக்கியமான நிகழ்வுகளை வானொலி வர்ணனை மூலம் நாமெல்லாம் கேட்டு இருப்போம். ஓரங்க நாடகங்கள் குழு நாடகங்கள் மூலம் விவசாயிகளுக்கான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. இன்று ஒரு தகவல் என்ற நிகழ்வினை தென்கச்சி கோ. சுவாமிநாதன் வழங்கியதை நாமெல்லாம் அறிவோம். அரிய பல தகவல்களை இந்த நிகழ்வில் மக்களுக்கு வழங்கினார். திரைப்பட பாடல்கள் வழங்கிய நிகழ்வுகளும் உண்டு. அதுபோன்று ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது என்றாலே எல்லோருடைய கவனமும் ஒன்றாகிவிடும். செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி என்ற குரல் கேட்ட உடன் அன்றைய முக்கிய செய்திகளை செவிமடுத்து கேட்ட உள்ளங்கள் ஆயிரம் ஆயிரம். வானொலி தான் அன்றைக்கு முக்கியமான ஊடகம் ஆகும். தொடர்ந்து மக்களுக்கான பொழுது போக்கு அம்சங்களான சினிமா பாடல்களை சிற்றலைகள் மூலம் அகில இந்திய வானொலி ஒலிபரப்பு செய்தது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் அகில இந்திய வானொலி நிலையமும் இலங்கை வானொலி நிலையமும் வழங்கிய வர்ணனைகளை பாடல்களை நாமெல்லாம் மிகவும் ரசித்த காலங்கள் உண்டு. அதைத்தொடர்ந்து சீன வானொலி தமிழ் மொழியில் ஒலிபரப்பை தொடங்கியது. தற்போது தனியார் வானொலிகள் உருவாகி பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் கொண்டதாக இயங்கி வருகிறது. தொடர்ந்து வானொலி செயல்பட்டு வருவதில் சுணக்கம் ஏற்பட்டதன் விளைவாக பல வானொலிகள் நிறுத்தப்பட்டு விட்டது. குறிப்பாக கொரோனா நோய் தொற்று காலத்தில் அகில இந்திய வானொலி சிற்றலை ஒலிபரப்பினை முழுமையாக நிறுத்திவிட்டது. தொலைக்காட்சி ஊடகங்கள் வந்த போதிலும் வானொலி ரசிகர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டு தான் சென்றது. மக்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் முயற்சியை அகில இந்திய வானொலி மேற்கொண்டது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நேரடியாக மக்களிடமும் பயனாளிகளிடமும் கொண்டு சென்றதில் அகில இந்திய வானொலியில் பங்கு பிரதானமானது. குறிப்பாக INSAT விண்வெளிக்கு அனுப்பியதும், அறிவியல் மன்றம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம் மூலம் அறிவியல் நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் வழங்கியதில் அகில இந்திய வானொலிபெரும் பங்கு வகித்தது. எஸ் எல் வி போன்ற செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தும் போது நேரடி வர்ணனை செய்து மக்களுக்கு வழங்கியது பேரன்புக்குரிய நிகழ்வாகும். தொலைக்காட்சி மற்றும் பல்வேறு ஊடக வளர்ச்சி அடைந்த போதிலும் நமது இந்திய பிரதமர் இன்றைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை வானொலியில் வழங்கிக் கொண்டிருப்பதை நாமெல்லாம் அறிவோம். அதற்குக் காரணம் இன்றைக்கும் மிக சக்தி வாய்ந்த ஊடகம் வானொலி தான் என்பதை நம் பிரதமரும் அறிவார். பேரிடர் காலங்களில் மின் தடை ஏற்படும் நிலையில் இன்றைய ஊடகங்கள் நமக்கு சரிவரத் தெரியாது. ஆனால் வானொலி மூலம் அரசு வழங்கும் செய்திகள் அறிவிப்புகள் நமக்கு எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதன் மூலம் அனைத்து பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு வானொலி மூலமே கிடைக்கும். இதுபோன்று வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. வானொலி துவங்கப்பட்டதிலிருந்து தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த பின்பு தற்போதைய வானொலி நிலை உட்பட ஏராளமான முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நூலினை மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் கொண்டு சேர்ப்பது அவசியமான பணியாகும் இந்நூலினைத் தொகுத்த நூலாசிரியர், பேராசிரியர் ஜெய்சக்திவேல் மிகவும் போற்றப்பட வேண்டியவர். *"பன்முகப் பார்வையில் அகில இந்திய வானொலி"* பதிப்பாசிரியர் : *தங்க. ஜெய்சக்திவேல்* விலை : ரூபாய் 400/- வெளியீடு : டெஸ்லா பதிப்பகம் சென்னை-600004 தொடர்பு எண்: 9841366086. MJ. பிரபாகர்

கருத்துகள்