இனியநண்பர் கவிஞர் மு.முருகேஸ் அவர்களின் காதல் மனைவி கவிஞர் வெண்ணிலா அவர்களுக்கு இனியநண்பர் சங்கர் இலண்டனில் சிறப்பித்த நிகழ்வு. கவிஞர் இரா.இரவி

கவிஞர் வெண்ணிலாவுடன் இலண்டனில் ஒரு இனிய சந்திப்பு.., பள்ளி ஆசிரியர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர் என பன்முக ஆளுமையாக, தமிழ் இலக்கிய சூழலில் இயங்கி வருகிற அன்பு தோழி அ. வெண்ணிலா தற்போது இங்கிலாந்தில் தனது படைப்புக்கான ஆய்வறிக்கைகளை தேடிக்கொண்டிருக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் சுற்றிப்பார்க்க சுவாரஸ்யமான இடங்கள் பல இருந்தாலும், தான் பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஒருமுகப்படுத்தும் அவரது பயணம் சார்ந்த பாங்கு என்னை வியக்க வைத்தது. இங்கிலாந்து வந்த இந்த அவரது பயணம் கேளிக்கைக்கு மட்டுமாக இருந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். நேற்று அவர்களை சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் அவருக்கு என்னால் இயன்றதை செய்தேன். ஒரு கோப்பை கூழுக்கு, ஒரு சிட்டிகை உப்பாக நானிருந்தேன் என்பது உவப்பை தந்தது. உயிர் எழுத்து ஆசிரியர், என் அன்பிற்கினிய தோழர் சுதீர் செந்தில் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறிமுகமானவர் வெண்ணிலா. பழகுவதற்கும் அணுகுவதற்கும் எளிமையானவர். எந்தவித படோபடமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத பேச்சு. இறுமாப்பு இல்லாத இலக்கியவாதியை இனம் காணுவது அவ்வளவு எளிதல்ல.பண்டைய காலத்தில் இலக்கியவாதிகளை வெகுவாகக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம், தற்போது இலக்கியவாதிகளை குறைவாகக் கொண்டாடி வருகிறது - அறவே அது அவர்களை புறக்கணிக்கிறது என்பதில் உண்மை இல்லை. சில இலக்கியவாதிகள், சமூகத்தில் அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகின்றனர். சில இலக்கியவாதிகள், சமூகத்தில் குறிப்பிட்ட சில பிரிவினரால் மட்டுமே கொண்டாடப்படுகின்றனர். இலக்கியவாதிகள் அரசின் மீதும், சமூகத்தின் மீதும் செலுத்தி வந்த ஆளுமையை சங்க காலம் தொட்டே, வழக்கில் இருந்ததை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த அளவுக்கு ஒரு காலத்தில், இலக்கியவாதிகளைப் போற்றி, கொண்டாடி தீர்த்த சமூகம் நம்முடையது. சில பதிப்பகங்கள் வழியாக வெளிவருகிற படைப்புகள் மட்டுமே உயரிய இலக்கியங்கள், அந்த குறிப்பிட்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர்கள் மட்டுமே உயர்ந்த இலக்கியவாதிகள் என்பதை பொதுப்புத்தியாக்கி விட வேண்டும் என்கிற சிலருடைய குறுகிய மனநிலையை உடைத்து நொறுக்கும் இலக்கியவாதியாக வெண்ணிலாவை பார்க்கிறேன். எல்லா படைப்பாளிகள் மீதான அவரது பார்வை நேர்மையானதாக, நியாயமானதாக இருக்கிறது. ஒரு சிறிய உரையாடல் மூலம் இதை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது.தமிழ்ச் சமூகம் பல படைப்பாளிகளை அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வெகுவாகப் பாராட்டியுள்ளது. அவர்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து வருகிறது. பரிசுகளும், பணமுடிப்பும் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியே. அவற்றையே அளவுகோலாக வைத்து, தமிழ் இலக்கியவாதிகள் கொண்டாடப்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. மக்கள் இலக்கியவாதிகளுக்கும், அவர்களின் படைப்புகளுக்கும் அளிக்கும் அமோக வரவேற்பும், மதிப்பும், ஊக்கமுமே சிறந்த கொண்டாட்டத்தின் வெளிப்பாடுகளாகும். அந்த வகையில் எழுத்தாளர் வெண்ணிலாவிற்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் மகிழ்ந்தது பொன்னான தருணம். தற்போது, வாசகனின் தமிழ் இலக்கிய ஆர்வமும், வகைகளும் குறுகிய பரப்பினுள் அடைபட்டுப்போனதாலும், நிகழ்கால தமிழ் இலக்கியவாதிகள், பலவகையான பேதப் பகுப்புகளுக்கு ஆட்பட்டு, அரசியல் பின்புலம் கொண்டு குறுகிய கண்ணோட்டத்துடன் இயங்குவதாலும், பொதுவெளியில் திறந்த மனதுடன் கொண்டாடப்படுவது என்பது வெகுவாகக் குறைந்து போய் உள்ளது என்பதே உண்மை. இருப்பினும் இதை ஒரு புறம் ஒதுக்கி வைத்து, நிறைவான இலக்கிய நயம் மிக்க நேர்மையான படைப்புகளை தரும், நியாமான எழுத்தாளர்களை எந்தவித தயக்கமும் இன்றி, வாய் திறந்து பாராட்டுவோம். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்