தமிழ்நாடு* ‘ *தமிழ்நாடு’தான்* ! - *தி.வரதராசன்*

தமிழ்நாடு* ‘ *தமிழ்நாடு’தான்* ! - *தி.வரதராசன்* . 🔴🏵️🔴🏵️🔴🏵️🔴🏵️ ‘தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்’ என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை செப்பியிருக்கிறார். தமிழ்நாடு என்ற சொல்லில் ‘நாடு’ இருப்பதைப் பார்த்துத்தான் அந்தச் சொல் ஒரு நாடாக-தேசமாக அர்த்தம் தருவதாக கவர்னர் கருதியிருக்கலாம் போலும். அதனால்தான் அவரது ‘தமிழகம்’ யோசனை பிறந்திருக்கிறது. இத்தோடு சேர்த்து மகாராஷ்டிராவுக்கும் சொல்லியிருக்கலாம். மகா என்றால் பெரிய; ராஷ்டிர என்றால் நாடு. இந்த இரண்டையும் சேர்த்தால் பெரிய நாடு என்று அர்த்தம். தமிழ்நாடுக்குள்ளேயே பல ‘நாடுகள்’ உள்ளனவே? வருசநாடு, ஒரத்தநாடு, செட்டி நாடு, கொங்குநாடு... இவையும் கவர்னரின் கவ னத்திற்கு வந்திருந்தால் இவற்றுக்கும் சேர்த்து வருசகம், ஒரத்தகம், செட்டியகம், கொங்ககம் என்று ‘நாடு’ நீக்கி ‘அகம்’ சேர்த்து அபார யோசனை சொல்லியிருப்பார்! தப்பின இந்த ‘நாடு’கள்! அப்புறம் கேரளாவுக்குள் சென்றால் நாடா ளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தி வெற்றி பெற்ற தொகுதியாகிய வயநாடு, கேரளாவில் அதிகமாக நெல் விளையும் மாவட்டமாகிய வய நாடு...இப்படியே யோசித்தால் இம்மாதிரி யான பல நாடுகளை நாம் கண்டுபிடிக்கலாம்! இலக்கியத்தில் நாடுகள் நமது பழந்தமிழ் இலக்கியத்திற்குள் சென்றால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்று பார்க்கலாம். ‘சோழவள நாடு சோறு டைத்து’ என்ற ஒரு பழமொழியும் உண்டு. நாட்டுப்புறம், நாட்டுப்புறப் பாடல், மலை யாளத்தில் நாடன்பாட்டு என்பதும் உண்டு. நாடகம் என்ற சொல்லைப் பிரித்தால் நாடு+அகம் என்று வரும். இந்த நாடு என்பதும் அகம் என்பதும் கலந்துதான் நாடகம் என்ற சொல் கிடைக்கிறது. தமிழுடன் நெருக்கமான மொழியாகிய மலையாளத்தில் நாடு என்பதற்கு சொந்த ஊர் (NATIVE PLACE) என்ற அர்த்தமும் உண்டு. “நிங்ஙளுடெ நாடு எந்தாணு?” என்று ஒரு மலை யாளியைப் பார்த்து மற்றொரு மலையாளி கேட்டால் அவர் தனது சொந்த ஊரைத்தான் சொல்லுவார். இந்தியா என்று சொல்ல மாட்டார். மலையாளத்தில் ‘நாட்டுக்கார்’ என்றால் உள்ளூர்க்காரர்கள் என்று அர்த்தம். இப்படி நாடு என்ற சொல் பலவிதங்களில் உள்ளது. சிற்றூரைக் குறித்த ‘நாடு’ என்ற சொல் அடுத்த கட்டமாக ஒரு விரிந்த நிலப்பரப்பைக் குறிப்பதாக வளர்ந்திருக்கும் - சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு என்று. ‘மலையாளம்’ என்ற மொழிச் சொல் நிலம் சார்ந்ததாகப் பிறந்த தென்றால், மொழி சார்ந்ததாக தமிழ்நாடு பிறந் துள்ளது. திருக்குறளில்கூட ‘நாடு’ வருவதைப் பார்க்க முடியும். “நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்” பாரதி பாடிய தமிழ்நாடு செந்தமிழ் நாடு என்கிற தலைப்பில் ஓர் இனிய பாடலை இயற்றியிருக்கிறார் மகாகவி பாரதியார். “செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”- தமிழ்நாடு எனும் சொல்லிலே மனம் சொக்கிப்போகிறார் மகாகவி. கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல பலவித மாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார மென்றோர்மணி யாரம் படைத்த தமிழ்நாடு -என்று தமிழ்நாட்டின் பெருமையை -–உயர்வைச் சொல்லிக் கொண்டேபோகிறார் மகாகவி. அவரது செந்தமிழ்நாடு பாடலை முழுதும் வாசித்துப் பார்த்தால் தமிழ்நாடு என்ற சொல்லை மட்டும் 14 முறை பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறார் பாரதி! இந்தப் பாடலை கவர்னருக்கே சமர்ப்பிக்கலாம்! பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ்ப் பேறு என்ற கவிதை யில், “இன்னலிலே தமிழ்நாட்டினிலே யுள்ள...” என்று சொல்லுகிறார். சும்மா வந்துவிடவில்லை... சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சும்மா வந்துவிடவில்லை. 1956 மார்ச் 28,29 தேதிகளில் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் மாநிலச் சீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரை மீதான விவாதத்தில் பேசிய தோழர் ப.ஜீவா னந்தம் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரிட வேண்டுமென்ற கோரிக்கை யை வரலாற்றுப் பார்வையுடன் விளக்கினார். 1960 அக்டோபர் 12 முதல் 16 வரை கோவையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாகாண 6-வது மாநாடு சென்னை மாகாணத் திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றியது. “தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டும் இந்தப் பொதுக்கிளர்ச்சியில் எல்லா கட்சியினரும், கருத்தோட்டக்காரர்களும்- பொதுவாக தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் ஒன்றுபட்ட உணர்ச்சி யுடன், வெற்றிபெறும் வரையில் தொடர்ந்து பங்கு கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.” என்று அந்தத் தீர்மானம் அமைந்திருந்தது. 1961-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றம் செய்ய வேண்டுமென்கிற மசோ தாவை தோழர் பி.ராமமூர்த்தி கொண்டுவந் தார். அந்த மசோதாவை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பூபேஷ்குப்தாவும், திமுக தலைவர் அறிஞர் அண்ணாவும் ஆதரித்து ஆற்றிய உரை வர லாற்றுச் சிறப்புமிக்கது.. சாகும்வரை சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று வலியுறுத்தி விருது நகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27 அன்று சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித் தார். கோரிக்கை நிறைவேறும்வரை பட்டினிப் போர்! கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.ராம மூர்த்தி சங்கரலிங்கனாரைச் சந்தித்துப் பேசி னார். மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டு மென்றும், அந்தச் சக்தியின் முன் அரசாங்கம் பணியும் என்றும், அந்தப் பணியில் ஈடுபட பட்டினிப் போரை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சங்கரலிங்கனார் அதற்குச் சம்மதிக்கவில்லை. அடுத்து அண்ணாவும் அவரைக் காணச் சென்றார். 77 நாட்கள் நீண்ட உண்ணாவிரதத்திற்குப் பிறகு 1956 அக்டோபர் 13 அன்று மதுரை அரசு மருத்துவமனையில் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். அவரது விருப்பப்படி அவரது உடல் கம்யூனிஸ்ட் தோழர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டது. “தமிழ்நாடு” என்று பெயரி டுகிற எளிய கோரிக்கைகூட நிறைவேற்றப் படாமல் சங்கரலிங்கனார் உயிர்நீத்தார்! அறி ஞர் அண்ணா “தம்பிக்கு”உருக்கமாக எழுதிய நீண்ட கடிதத்தில் “வீரத் தியாகி சங்கரலிங்கனா ருக்கு நாம் அனைவரும் நமது நெஞ்சுநெக்கு ருக வணக்கம் கூறுகிறோம்” என்று அஞ்சலி தெரிவித்திருந்தார். 1967 ஜூலை 18 அன்று சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது! கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலை வர்கள் பி.ராமமூர்த்தியும் ஜீவானந்தமும், திமுகவும் அதன் தலைவர் அண்ணாவும், தமி ழரசுக் கழகமும் அதன் தலைவர் ம.பொ.சிவ ஞானமும் மற்றும் தமிழ்ப் பெருமக்களும் கண்ட கனவு நனவாகியது. சங்கரலிங்கனாரின் தியா கம் வீணாகவில்லை. சுதந்திர கீதத்தில் மகாகவி பாரதி, “வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்றார். ஆம்! நாமும் வாராது போல வந்த “தமிழ்நாடு” எனும் திருப்பெயரைத் தோற்க மாட்டோம்! வாழிய செந்தமிழ் நாடு! *தீக்கதிர்* 9.1.2023

கருத்துகள்