ெல்லம்மா ரேடியோவிற்கு அளித்த கண்ணீர் பேட்டி – மதுரை ராஜா

செல்லம்மா ரேடியோவிற்கு அளித்த கண்ணீர் பேட்டி – மதுரை ராஜா பாரதி இறந்த பிறகு, நாடு சுதந்திரம் அடைந்தவுடன், சென்னை வானொலி நிலையம், செல்லம்மாளை பேச அழைத்தது. செல்லம்மாளை வானொலியில் அறிமுகப் படுத்தும் போது, “மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் அவர்கள் பேசுவார்” என்று அறிவித்தனர். இந்த அறிவிப்பைக் கேட்டதும், செல்லம்மா தேம்பித் தேம்பி அழத் துவங்கினார். அதைக் கண்டு, ரேடியோ நிகழ்ச்சியின் ஒலிபரப்பாளர் திகைத்துப் போனார். இப்போது உள்ளது போல, விஞ்ஞான நவீனத்துவங்கள் இல்லாத காலம் அது. செல்லம்மாளின் பேட்டி நேரடியாக, ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதனால், செல்லம்மாளின் அழுகையை ரேடியோவில் கேட்ட அனைவரும் திகைத்தனர். பலர், அந்த அழுகைக் குரலில் புதைந்திருந்த சோகத்தை எண்ணி, துக்கம் தாளாமல், தாங்களும் அழுதனர். வெகு நேரமாயிற்று, செல்லம்மாள் தன் அழுகையை நிறுத்த. சில நிமிடங்கள் கழிந்த பிறகே, தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, பேசத் துவங்கினார் செல்லம்மாள். “இன்று…..என்னை மகாகவியின் மனைவி என்று, புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால், நான் என் கணவருடன் வசித்த போது, எங்களது தெருவில் வசித்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லாம், என்னைப் “பைத்தியக்காரனின் மனைவி, அந்தக் கிறுக்கனின் மனைவி” என்று, என் காதுபடவே, நாக் கூசாமல் பேசுவார்கள். அப்போதெல்லாம், நான் வீட்டிற்குப் பின் உள்ள கிணற்றடிக்குச் சென்று குமுறி அழுவேன்…”- இதைச் சொல்லும் போதே, செல்லம்மாளின் குரல் உடைந்து, வெடித்து அழுதார். அவரது, கதறலை வானொலியில் கேட்ட லட்சக் கணக்கானோர், கண்ணீர் சிந்தினார்கள். தொடர்ந்து பேசிய செல்லம்மாள், தன் பேச்சு முடியும் வரை, அழுது கொண்டே, உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். அவர் எத்தகைய துன்பங்களை, மற்றவர்களால், அனுபவி்த்திருப்பார்? என்பதை, அவர் பட்ட துன்பத்தின் ஒரு சதவீதத்தைத் தான், தன் பேச்சால் வெளிப்படுத்தினார், என்று அவரைப் பற்றி அறிந்தவர்கள் கூறினார்கள். பாரதி செல்லம்மா – பாரதியின் மறுபக்கம்…! மதுரை ராஜா -

கருத்துகள்