படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! பூர்ண சந்திரா ஜீவா ! சிந்துவெளித் தமிழ நாகரிகமும் மைய இந்தியத் தமிழரான கோண்டு மக்களும் . சிந்து நாகரிக கால கோண்டுகள் கோண்டுப் பகுதியில் தமிழ்ச் சிந்து . சிந்து எழுத்தையே பயன்படுத்திய கோண்டுவானா தமிழ் மக்கள் . சிந்து நகர நாகரிகம் சிறப்புடன் விளங்கிய கிமு 2600 -- கிமு 1700 அளவிலேயே அது மேற்கே இந்து குஷ் -- சுலைமான் மலைப்பகுதியில் இருந்து , கிழக்கே யமுனை ஆற்றுச் சமவெளிவரையும் , வடக்கே இமய மலைச்சாரலில் இருந்து தெற்கே மகாராஷ்டிரம் வரையிலுமான ஒரு பெரிய நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்தது . அப்போது கங்கைச் சமவெளி மக்கள் வாழத் தகுதியற்ற கொடிய காட்டுப் பகுதியாக இருந்ததால் மக்கள் அங்கு வாழவே இயலாமல் இருந்தது என்பதை அப்பகுதித் தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன . கங்கைச் சமவெளிக்குத் தெற்கே விந்திய -- சாத்பூரா மலைத் தொடர் களின் தெற்கே அம்மலைகளின் தெற்குச் சாரலில் இருந்தே தொல் மனித வாழ்வின் எச்சங்கள் நம்மால் காண முடிகிறது . இப்பகுதியில்தான் ஒரு இலட்சம் ஆண்டுகள் தொன்மை யான ஆதி மனித வாழ்க்கையைக் கொண்ட பிம்பெட்கா குகைகளும் அமைந்துள்ளன . இவ்விடமும் தென் னிந்திய மனித வாழ்க்கையின் ஒரு பகுதியே . இதற்குத் தெற்கில் தென் இந்திய நிலப்பரப்பில் பண்டைத் தமிழகம் அமைந்திருந்தது . தமிழகம் என்றதும் இன்றைய தமிழ் நாட்டை , அல்லது சங்க காலத் தமிழகத்தை நினைவில் கொள்ளக் கூடாது . பண்டைத்தமிழகம் அன்று இந்திய நிலப்பரப்பு மொத்தமும் பரந்து விரிந் திருந்தாலும் , முதிர் சிந்து நாகரிகம் நிலவிய மகாராஷ்டிரம் தைமாபாத் பகுதி வரையில் அந்நாகரிகத்தைத் தொட்டுக் கொண்டு , அதன் தெற்கு எல்லைவரை பழந்தமிழகம் என்பது இருந்தது . இன்றைய ஆய்வுகளின் ஒளியில் தொல்லியலார் கருத்தின் அடிப்படையில் சிந்து நாகரிகத்தின் தொடர்ச்சியாக அதே தைமாபாத் பகுதி முதல் தமிழகத்தின் காவிரி ஆறறுப் படுகைவரையில் ( மைசூர் ) சாவல்டா பண்பாடு எனப்படும் செம்புக் கற்கால நாகரிகத்தின் தொடர்ச்சி ஏறத்தாழ 800 கிமீ தொலைவிற்கு விரிந்திருந்தது . காவிரிப் படுகை மைசூர் என்பது கிமு 300 சங்க காலம் வரையிலும்கூட தமிழகம்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் . அதுமட்டும் அல்ல சாவல்டா மட்கலப் பண்பாடு இன்னும் தெற்கே தமிழ் நாடுவரை நிலவியதை தொல்லியல் ஆய்வுகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுவர் மதுரை அருகே டி கல்லுப்பட்டி அகழ் வாழ்வில் கிடைத்த வண்ணம் தீட்டப் பட்ட மட்பாண்டங்கள் இச்சாவல்டா பண்பாட்டிற் குரியன என்பது என் ஆய்வுக் கருத்து ஆகும் . கிமு 2600 அளவில் சிந்துவெளி நாகரிகம் நிலவியபோதே , மேலே குறிப்பிட்ட பகுதிகளில் கிருஷ்ணா நதியின் கிளை நதியான பீமா நதி முதல் தமிழ் நாட்டின் காவிரிக்கரை வரையில் சங்கனகல்லு , ஹல்லூர் பிரம்மகிரி மாஸ்கி உட்நூர் பாலவாய் கொடேகல் , பையம்பள்ளி , அப்புக்கல் போன்ற இடங்களில் செம்பு உலோகப் பயன்பாட்டை அறிந்த வளர்ச்சியுற்ற புதியகற்கால நாகரிகம் நிலவியது . இவற்றுள் பல இடங்கள் பிற்காலத்தே இரும்பு உலோகப் பயன்பாட்டிற்குரிய பெருங்கற்கால நாகரிகத்திற்கு மாறி விட்டதைக் காண்கிறோம் . இந்திய வரலாற்றில் மகாராஷ்டிரா முதலாக , தமிழ்நாட்டு காவிரிக்கரை வரையில் புதியகற்காலம் போலவே , பெருங்கற் காலமும் இப்பகுதியில் சிறப்புற்று விளங்கியதைத் தொல்லியல் காட்டு கின்றது . சிந்துவெளி நாகரிகத் திற்குப் பிந்திய இந்திய வரலாறு பழந்தமிழகத்தின் இப்பகுதியை மையமாகக் கொண்டு இயங்கியது . சிந்து நாகரிகத்தின் தெற்கத்திய எல்லையான பழந்தமிழகத்தின் இந்தப் பகுதிக்குள் மகாராஷ்டிரம் முதல் தமிழ்நாடுவரையில் சிந்து நாகரிகக் காலத்திற்குப் பிந்திய இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டு வரலாறு மிகச் சிறப்பாகப் புதைந்து போயுள்ளது . சிந்து நாகரிகத்தின் தெற்கு எல்லையில் இருந்த இந்தப் பகுதியில் ஆரியர் வருகைக்குப் பிறகு தமிழ் மொழியும் , இனமும் கலப்படைந்து வடவடுகர் என்று சங்க இலக்கியங்கள் சுட்டும் வடவடுக மொழிகள் கன்னடமும் , தெலுங்கும் தோன்றின . சிந்து நாகரிகம் அழிந்து பன்னூறு ஆண்டுகளுக்கு பின்னரும் அப்பகுதியில் தமிழே நிலவியதாகச் சான்றளிக்கும் குகைக் கல்வெட்டு ஒன்று இப்பகுதியில் கிடைத்துள்ளது கங்கை -- யமுனைச் சமவெளிக்கு அப்பால் தெற்கே இப்போது கன்னட , தெலுங்கு மொழி பேசும் மாநிலங்க ளுக்கு வடக்கே வாழும் கோண்டு மக்கள் தமிழின -- திராவிட மொழி களைப் பேசுவோராவர் . இவர்கள் மகாராஷ்டிர மாநிலம் தொடங்கி , கிழக்கில் ஒரிசா வரையிலும் நான்கு ஐந்து மாநிலங்களில் பரவி வாழ்ந்து வருகின்றனர் . பெரும்பாலும் இவர் கள் மலைக்குன்றுகளில் வாழ்கின்ற னர் . இவர்கள் மேற்குத் தெக்கனத் தில் கோண்டுகள் என்றும் , கிழக்கே குயி என்ற பெயரிலும் அழைக்கப் பெறுகின்றனர் . இன்று இவர்களது மொழி மத்திய திராவிட மொழிகளில் தனிமொழி என்று கூறப்பட்டாலும் தமிழின மொழிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது . கோண்டு என்னும் பெயரே குன்று -- குன்றவர் என்பதன் பலுக்கமேயாகும். இவர்கள் மேலே நாம் குறிப்பிட்டவாறு சிந்துவெளி நாகரிகத்தின் தெற்கு எல்லைப் பகுதி மக்களேயாவர் . சிந்து நாகரிக மக்கள் அந்நாகரிகம் அழிந்த பிறகு முதலில் குஜராத் -- மகாராஷ்டிரம் பகுதிகளிலேயே குடியேறியதாகச் சிந்துத் தொல்லியல் காட்டுகிறது . பின்னர் ஆரியப் பண்பாட்டுத் தாக்கு தலை விரும்பாத மக்களும் இதனை ஒட்டிய மேற்குப் பகுதிகளில் பரவி வாழ்ந்தனர் . இவர்கள் பரவி வாழ்ந்த நிலப் பகுதியே இன்று கோண்டு வனா -- கோண்டுவானா எனப்படுகி றது . சிந்துத் தமிழில் காடு , வனா என்று அழைக்கப்பட்டதை முத்திரைகள் உணர்த்துகின்றன . தமிழகத்துக் காடுறைவாள் கொற்றவை சிந்து முத்திரைகளில் வனா இல்லா / இல்லி எனப்படுகிறாள் . வனத்தை இல்லமாகக் கொண்டவள் என்று இதன் பொருள் .கோண்டு இனமக்கள் சிறப்பாக மகாராஷ்டிரா , சட்டிஸ்கர் , தெலுங்கானா மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர் . தெலுங்கானாவின் வடக்கு எல்லை மாவட்டமான அடிலா பாத்தை மைய மாகக் கொண்டு பரவலாக வாழ்ந்து வருகின்றனர் . நான் ஐதராபாத் , ஆந்திராவில் வாழ்ந்தபோது இவர்களைக்குறித்து நிறைய களப்பணி ஆற்றியுள்ளேன் . கோண்டுகள் தாங்கள் இந்து மக்கள் அல்ல என்றும் , நாங்கள் திராவிட இன மக்கள் என்றும் கூறி , தங்களது அரசன் இராவணன் என்று அவனுக்கு ஆண்டுதோறும் வடநாட்டில் ராம்லீலா கொண்டாடும் போது அடிலாபாத் பகுதியில் இராவண மகோற்சவம் கொண்டாடுகின்றனர் . இவர்கள் சிந்து நாகரிகத்துடன் தொடர்புள்ள மக்களே . இவர்களும் தமிழைப் பேசி வாழ்ந்தவர்கள் என்பதை சிறிது காலத்துக்கு முன்னர் இப்பகுதியில் கிடைத்த சிந்து எழுத்து கொண்ட குகைக் கல்வெட்டு ஒன்று உறுதி செய்கிறது . தெலுங்கான -- கருநாடக எல்லையில் உள்ள புகழ் பெற்ற ஹம்பி என்னும் ஊரருகே மலைப் பகுதியில் ஒரு குகையில் இவ்வெழுத்துகளின் 19 வடிவங்கள் கொண்ட எழுத்துப் பொறிப்புகளாகக் கிடைத்துள்ளன . இக்குகையை இடையர்கள் காட்டில் ஆடு மாடு மேய்த்துவிட்டு இரவில் தங்கும் இடமாகப் பயன்படுத்துகின் றனர் . இக்குகையில் கிடைத்த கல்வெட்டை அவர்கள் கோண்டு மொழியில் எவ்வாறு படித்துள்ளனர் என்று நீங்கள் அறிய அப்போது வந்த இந்து நாளிதழின் ( ஐதராபாத் ) செய்தியினை இத்துடன் இணைத்து தந்துள்ளேன் . அவர்கள் கோண்டு மொழி வேற்சொல் அடிப்படையில் உருவெழுத்துகளாகப் படித்துள்ளனர் . இங்கு அந்த ஆய்வுக்கு நான் செல்ல விரும்பவில்லை . எனது முறைப்படி அதனைப்படித்து விளக்குவது மட்டுமே எனது நோக்கம் . எழுத்துகள் முதற் பார்வையிலேயே எளிமைப்பட்டு எளிய அடிப்படை வடிவங்களாக மாறிவிட்டன என்பதை நன்கறியலாம் . இவற்றைப் படங்கள் என்று சொல்ல இயலாது . மேலும் , சிந்து எழுத்து வடிவ மாற்றமுற்று தமிழி எழுத்தாக மாறும் தெளிவான இயல்புகளை இவற்றில் காணலாம் . எழுத்துகளைத் தமிழி -- தமிழ்ப்படுத்தி இருக்கிறேன் . சிந்து எழுத்து எவ்வாறு தமிழியாக மாறியது என்று இதிலிருந்து உணரலாம் . இனி நாம் கல்லெழுத்தைக் காணலாம் . கல்லெழுத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய மனித உருவம் எழுதப்பட்டு உள்ளது . என் படிப்பில் மனித வடிவம் -- க -- என்று பொருள்படும் . ஆனால் , இது துறவியை உணர்த்த இடப்பட்ட வடிவ மாறலாம் . இவ்வடிவைத் தவிர்த்து பிற வடிவங்கள் வருமாறு :- கோண்டுப் பகுதிச் சிந்து எழுத்து : = இ -- ய -- ன் -- த -- ண -- ற்ற -- ட ' -- ப -- ர -- த -- ர -- த -- வ -- ர -- ம -- ட்ட -- ற = இயன் தடணற்றட ' பரதர தவரமட்டர (ற) இயன் = இயல்பான , இயற்கையான தட -- நல் -- தட = பெருமைக்குரிய நற்பெரியோன் பரதர் -- அ = பரதர் என்போரது பரதர் = ஒரு தொன்மையான காலத்து ஆற்றுப் படுகைகளில் வாழ்த்த மக்கள் . பரதர் > பரதவர் . பிற்காலத்தில் கங்கை -- சத்தியவதி ( மச்சகந்தி ) ; கோதாவரி -- குகன் போன்றதோர் மக்கள் . இங்கு ஹம்பி நிலப்பகுதியில் கோதாவரி . இங்கும் கங்கையில் போல் வற்றாத வளம் தரும் நீரொழுக்கறா ஆறு கோதாவரி . இப்போதும் ஹம்பி பகுதி வளமான நிலப்பகுதியாகும் . அரைவறட்சிப் பகுதியாயினும் நிலத்தடி நீர்வளம் சிறப்பாக உள்ளதைக் கண்டிருக்கி றேன் . மலைக் குன்றுகள் நிறைந்த நிலப்பகுதி . தவர் -- அமட்டர் -- அ = தவசியாகிய அமட்டர் என்பவரது ( குகை ) அமட்டர் = அமட்டுபவர் , நெறிப்படுத்துபவர் . அமட்டுதல் = அச்சுறுத்தல் , நெறிப்படுத்தல் அமட்டுதல் என்ற சொல்லில் இருந்தே அமைச்சு என்ற சொல் தோன்றி இருக் கும் என்று கருதுகிறேன் . அம > அமை = ஒழுங்காற்று . அமட்டர் என்னும் துறவி வாழ்ந்த குகை . அவர் பரதர் இனத்தவரின் தவசி ; சமய -- ஒழுக்க வாழ்வை ஒழுங்கமைக்கும் நெறியாளர் என்று கருதத் தோன்றுகிறது . இவர் ஓர் அறிவர் என்பது என் முடிவு . இத்தகைய குகைகள் தமிழ் நாட்டி லும் உண்டு . ஆயர்கள் காட்டில் ஆடு மாடு மேய்த்து பாதுகாப்பாக இரவில் தங்கும் குகைகள் பல மலைப்பகுதி களில் உண்டு . விழுப்புரம் மாவட்டடம் செஞ்சி வட்டத்தில் நெகனூர்பட்டி தமிழிக் கல்வெட்டு உள்ள குண்டுப் பாறைக்கு எதிரே பெரிய , அழகிய குகை ஒன்று உள்ளது . ஒழுங்கமைக்கப்பட்ட இக்குகை ஆயர் மக்களின் இராத் தங்குமிடமாக உள்ளதைப் பார்த்திருக்கிறேன் . அழகிய இக்குகை ஆதிமனிதர்கள் வாழிடமாக இருந்து , பின்னர் சீர் திருத்தி சமணத் துறவிகள் வாழும் இடமாக மாற்றப்பட்டு இப்போது இடையர்கள் தங்குமிடமாக உள்ளது . ஹம்பியில் உள்ள குகையும் இத்தகையதே என்றாலும் அங்குள்ள கல்வெட்டு நெகனூர்பட்டியினும் காலத்தால் முந்தியது . இக்கல்வெட்டில் சிந்து எழுத்தின் தன்மையே விஞ்சியுள்ளது . ஆகவே , சிந்து எழுத்து மாற்றங்களின் படிநிலையில் இது கிமு 1500 அளவுக்கு உரிய குஜராத்தின் பேட் - துவாரகைக் கடலடி ஆய்வில் கிடைத்த மணிவரணன் வழிபாட்டுப் பாத்திர எழுத்தைவிட காலத்தால் முந்தியது என்பதில் ஐயமில்லை . இத்தகைய நிலையில் சிந்துவெளி நாகரிகக் காலத்தை ஒட்டி , அதன் அழிவிற்குப் பிந்திய சிந்து எழுத்து வடிவ மாற்றம் அடையத் தொடங்கிய காலத்திற்குரியது என்பது உறுதி . ஒரு நோக்கில் கிமு 1700 என்றும் மதிப்பிடலாம் . இது என்னுடைய கணிப்பீடுதான் . இந்திய நிலப்பரப்பில் இக்கல்வெ டின் காலம் இன்றைய கோண்டுகள் வாழும் பகுதி தூய்மையான தமிழ் இன மொழி வழங்கிய காலம் . தமிழ் அப்போது வட்டார வழக்குகள் பெற்று இருப்பினும் தமது மொழிநிலையில் பொதுத்தன்மைகள் பெற்று இந்தியத் துணைக் கண்ட மக்கள் அனைவரும் உணரத்தக்க திசைமொழி மாற்றங்க ளுடன் ஒப்பற்ற மொழியாக வழங்கியது . திசை வழக்கு என்பதை விளக்கவே தென்தமிழில் பெருவழக்கான காடு ( காடுறைவாள் ) என்பதுடன் , சிந்துத் தமிழின் வனா ( வனா இல்லா ) என்பதையும் எடுத்துக் காட்டினேன் . முன்பொரு நண்பர் வனம் என்பது வடமொழி என்று கூறி வனமகோற்சவம் எடுத்துக்காட்டு என்று கூறினார் . காடு , வனம் முதலான சொற்கள் கடு ( கடுமை ) , வன் ( வன்மை ) என்பன போன்ற பண்புகள் அடிப்படையில் தோன்றிய சொற்களே . இத்தகைய பல இனிய நற்றமிழ்ச் சொற்களை எடுத்தாண்டு இயங்குவதே வடமொழி . சிந்து எழுத்து முத்திரைகளே தூய்மையான தமிழை இனம் பிரித்துக் காட்டும் சான்றாக உள்ளன . கோண்டுவனா பகுதியில் நற்றமிழ் வழங்கியதையே ஹம்பி குகை எழுத்து தெளிவுபெற விளக்குகிறது .

கருத்துகள்