கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கொரோனா உலகம் ! நூல் ஆசிரியர் : திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! நூல் வெளியீடு : தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர், மதுரை – 625 014. வடிவமைப்பு : சக்தி கிரியேட்டர்ஸ். பேச : 98410 25280 பக்கங்கள்: 200, விலை: ரூ.150. ***** நாடறிந்த மூத்த எழுத்தாளர், இனிய நண்பர் ப.திருமலை அவர்களின் புதிய நூல். எப்போது நூல் எழுதி வெளிவந்தாலும் உடன் அனுப்பி விடுவார். ‘கொரோனா’ என்ற சொல்லின் அச்சம் 2020 முழுவதும் ஆக்கிரமித்து 2021 தொடக்கத்திலும் தொடர்ந்து வருகின்றது. உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பற்றிய ஆய்வு நூல் கொரோனா உலகம். 27 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. மனித குலத்திற்கு நடந்த மாபெரும் சோகம் கொரோனா அழிவை ஆவணப்படுத்தி உள்ளார். இனிவரும் தலைமுறை அறிந்துகொள்ள உதவிடும் நூல். கொரோனா காலத்திலும் ஓய்வின்றி குறிப்பெடுத்து புள்ளி விபரங்களுடன் எழுதிக்கொண்டே இயங்கிக்கொண்டே இருந்ததன் விளைவு தான் இந்நூல். உலகை அச்சுறுத்திய நோய்களையும் பட்டியலிட்டு எழுதி உள்ளார். இதுவரை வந்த கொடிய நோய்களின் உச்சம் கொரோனா என்றால் மிகையன்று. கொரோனா என்ற சொல் மட்டுமல்ல, ஊரடங்கு என்ற சொல்லும் அச்சத்தை வரவழைத்தது. நோயால் இறந்தவர்களை விட மனபயத்தால் இறந்தவர்கள் தான் அதிகம். மனபயமின்றி தைரியமாக திடமாக இருந்தவர்கள் மட்டும் மிச்சம் இருந்தார்கள். உயிர் வாழ்கிறார்கள். உணவு கிடைக்காமல் மருந்து கிடைக்காமல் வாடி வழங்கினார்கள். துன்பப்பட்டார்கள். சிலர் உதவினார்கள். ஊரடங்கு காரணமாக எல்லோரும் வீட்டிலேயே முடங்கி இருந்த காரணத்தால் வருமானமின்றி செல்வு மட்டுமே இருந்த காரணத்தால் குடும்ப வன்முறை அதிகரித்து விட்டது என்பதை நூலில் விளக்கி உள்ளார். குழந்தைகள் பட்டினி கிடந்து வாடிய அனுபவமும் நூலில் உள்ளது. கொரோனா ஏற்படுத்திய மனஅழுத்தம் பற்றியும் விளக்கி உள்ளார். ஊடகங்கள் ஏற்படுத்திய மனஅழுத்தம் வருமானமின்றி பொருளாதாரம் ஏற்படுத்திய மனஅழுத்தம் பற்றியும் எழுதி உள்ளார். மக்கள் தற்போதுதான் அந்த மனஅழுத்தங்களில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். ஊரடங்கு கால சித்திரவதைக் கொலைகள், நீதிமன்றத்திற்கு வந்த வழக்குகள், காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைகள், காவல் நிலைய மரணம் என பல்வேறு புள்ளிவிவரங்களுடன் கட்டுரைகள் எழுதுவது நூலாசிரியர் ப. திருமலை அவர்களின் தனிச்சிறப்பு. ஆய்வுகள் செய்து தரவுகள் பெற்று முழுமையான கட்டுரை வடிப்பது வழக்கம். பழங்குடி மக்கள் எதிர்கொண்ட கொரோனா பற்றியும் கட்டுரை உள்ளது. சக மனிதர்களின் வேதனைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த தன்னலமிக்க மனிதர்களுக்கு கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளார். கொரோனா காலத்தில் குருதிக்கொடை முகாம்கள் நடக்காத காரணத்தால் ரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் ரத்தத்தின் தேவை மிகுதியாக இருந்தது. கொரோனா காலத்தில் நடந்த அனைத்தையும் உற்றுநோக்கி ஆவணப்படுத்தி கட்டுரைகள் வடித்துள்ளார். மருந்து விலைஏற்றத்தின் காரணமாக மருந்து வாங்க முடியாமல் ஏழைகள் பலர் உயிர்விட்ட அவலமும் கொரோனா காலத்தில் நிகழ்ந்தது. சுற்றுலாத்துறையும் பாதித்தது. சுற்றுலாத்துறையில் இந்திய அளவில் 5.5 கோடி பேர் வேலை செய்கின்றனர். 5 இலட்சம் கோடி பணப்புழக்கம் உள்ள சுற்றுலாத்துறையில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். உளவியல் பிரச்சனை எதிர்கொண்ட சிக்கல் வெளிநாட்டில் வேலை பார்த்த இந்தியர்கள் பலர் வேலையிழந்து இந்தியா திரும்பி வருகின்றனர். பொருளாதார இழப்பு பெருமளவில் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் நலத்திட்ட மேம்பாட்டு நிதியை முடக்கியது கொரோனா. மேம்பாடு செய்ய விடாமல் கைகளைக் கட்டிப்போட்டது என்பதும் உண்மையே. ரூபாய் நோட்டிலும் கொரோனா சிறுதுளி பரவியது என்ற கூற்றும் நூலில் உள்ளது. புதைத்ததைத் தோண்டி எடுங்கள் என்று மனிதாபிமானமற்ற நிகழ்வுகளும் அரங்கேறியது. “சக மனிதனே! இப்போதைக்கு உன்னுள் புதைந்திருக்கும் மனிதநேயத்தை தோண்டியெடு. மரணம் எல்லோருக்குமானது. அதனை மரியாதைக்குரியதாக்கு என கத்த வேண்டும் போலிருக்கிறது” என்ற வைர வரிகளுடன் கட்டுரையை முடித்தது சிறப்பு. துப்புரவுப் பணியாளர்களின் பெயர் தூய்மைப் பணியாளர்கள் என்று மாறியது, பெயர் மாறினால் போதாது, வாழ்க்கை நிலையும் மாற வேண்டும் என்று வலியுறுத்தியது நன்று. பிரச்சனைகளை மட்டும் எழுதாமல் அதற்கான தீர்வுகளையும் எழுதியது சிறப்பு. செய்ய வேண்டியது என்ன? பரிதாபப்படுபவர்களாக இல்லாமல் பங்கேற்பாளராக மாற வேண்டும் என்று அறிவுறுத்தியது நன்று. மனதளவில் இரக்கப்படுவதால் மட்டும் எதுவும் நிகழ்ந்து விடுவதில்லை. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு உதவிடும் உள்ளம் தானாக வரவேண்டும் என்பதையும் வலியுறுத்தியது நன்று. நாட்டில் மதுவிலக்கு வரவேண்டும் என்ற ஆசையையும் எழுதி உள்ளார். செவிலியர்கள் மெரினாவில் திரண்டு போராடிய நிகழ்வும் தற்போது அரங்கேறியது. இவர்களின் குறையை தீர்க்க வேண்டும் என்று அன்றே முன்பே எழுதி உள்ளார். நமக்கு வல்லரசு வேண்டாம், நல்லரசு போதும் என்று வேண்டிஉள்ளார். நமக்கேற்ற உணவு எது? எது சிறந்த உணவு? என்று விளக்கி உள்ளார். காற்று மாசு பற்றிய விழிப்புணர்வும் விதைத்து உள்ளார். தன்னம்பிக்கையோடு வாழ்வோம், புதிய உலகை படைப்போம் என வேண்டி உள்ளார். கொரோனா காலத்து கொடுமைகளை, விளைவுகளை பட்டியலிட்டு இனிவரும் செயல்களையும் செப்பி திறம்பட எழுதி உள்ளார். பாராட்டுகள்.

கருத்துகள்