எங்கள் காதலுக்குரிய ஏ.வி.பாலம்...சோழ. நாகராஜன்

 



எங்கள் காதலுக்குரிய ஏ.வி.பாலம்...சோழ. நாகராஜன்

------------------------------------------

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலத்திற்கு வயது 134. 

இன்றளவிலும் அழகும், கம்பீரமுமாகக் காட்சியளிக்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம் மதுரையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று. 

பிரிட்டிஷ் ராஜ்யத்தின் ஆளுமைக்குள் வந்தவுடன் மதுரையைச் சுற்றி அரணாக இருந்த கோட்டை 1837 ஆம் ஆண்டு நகரை விரிவாக்க எண்ணி  இடிக்கப்பட்டது. 

விடுதலைப்போர் தீவிரமடைந்தபோது தாம் குடியிருந்த வண்டியூர் தெப்பக்குளம் பகுதியிலிருந்து வைகையின் வடகரைப் பகுதிக்கு ஆங்கிலேயர்கள் இடம்பெயர எண்ணினார்கள். 

அப்போதுதான் வைகையின் குறுக்கே ஒரு பாலத்தின் தேவையை அவர்கள் உணர்ந்தனர்.

வைகையாற்றின் வட - தென் பகுதிகளை இணைக்கும் வண்ணம் சுமார் 300 மீட்டர் நீளத்தில், 16 கருங்கல் தூண்களோடு ஒரு பாலத்தைக் கட்டி அது 1886 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. 

இதைக் கட்டுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்த அப்போதைய மதுரையின் ஆங்கிலேய ஆட்சியர் ஆல்பர்ட் விக்டர் பெயரையே இந்தப் பாலத்துக்குச் சூட்டினர்.

இந்தப் பாலத்தைக் கட்ட அன்றைக்கு ஆனா செலவு எவ்வளவு தெரியுமா? 

2 லட்சத்து 85 ஆயிரத்து 687 ரூபாய்தானாம். அதைவிட வியப்பு என்னவென்றால் திட்ட மதிப்பீட்டைவிடக் குறைவாகவே செலவுசெய்து ஒதுக்கிய நிதியில் மிச்சமும் வைத்தார்களாம். 

('அட, பொழைக்கத் தெரியாதவிங்களா...' - எனும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.) 

தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லுவதன்மூலம் மதுரையின் இரு கரைகளை இணைக்கும் இந்த ஏ.வி. பாலம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட 100 ஆண்டுகளையும் கடந்து, தனது 134 வது வயதிலும் உறுதிப்பாட்டில் குறைவில்லாமல் காலத்தை வென்று நிற்கிறது.

ஒண்ணரை நூற்றாண்டினை நோக்கி பெருமிதத்தோடு நிற்கும் இந்த எழில்மிகு பாலத்தை எங்கள் நகரின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக்கோருகிறார்கள் இந்தப் பாலத்தின் காதலர்களான மதுரையின் மக்கள்! 

கருத்துகள்