படித்து வியந்தது !கவிஞர் இரா .இரவி
சோழவந்தான் !
பலரும் அறிந்திடாத பல்வகை சிறப்புகளைப் பெற்ற ஊர்.சோழவந்தான் !
பெருமையுடன் பகிருங்கள்
1868 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் சோழவந்தானில் பிறந்த பெரும்புலவர் #அரசஞ்சண்முகனார்
தெற்கு ரதவீதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோயில் கல்மண்டபத்தில் இருந்த திண்ணைப் பள்ளியில் அழகர்சாமி தேசிகர் என்ற ஆசிரியரிடம் எழுத்திலக்கணம், நிகண்டு, அந்தாதி ஆகியன கற்றுத் தேர்ந்து பின்னர் இங்குள்ள பேட்டை, கிண்ணிமங்கல மடத்திலிருந்த (இன்றைய விவேகானந்தா பள்ளி) சிவப்பிரகாச சுவாமிகளிடம் சங்க நூல்கள், இலக்கண இலக்கியங்கள், தருக்கம், சோதிடம் ஆகியன கற்றுப் புலமை பெற்றார்.
பணி:
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 1890 முதல் 1902 வரை தலைமை தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.
அப்போது ஒருநாள். பள்ளித் தலைமையாசிரியர் மாணவர்க்குரிய பாட அட்டவணையில் ஆங்கிலப்பாட நேரத்தைக் கூட்டித் தமிழ்ப்பாட நேரத்தைக் குறைத்திருந்தார்.
இதற்கு அரசஞ்சண்முகனார், பள்ளி தலைமையாசிரியரிடம் "திடுமென இம்மாற்றம் ஏன்? இப்பாட அட்டவணையைத் திருத்தித் தமிழுக்கு உரிய பாட நேரத்தை ஒதுக்கித்தர வேண்டும்" என்று கேட்டார்
அதற்குத் தலைமையாசிரியரோ புன்சிரிப்புடன், "திருத்த இயலாது; தமிழ்தானே! அதனால் என்ன?" என்று மறுத்துவிட்டார்.
தமிழ்தானே என்ற அலட்சிய பதில் வேதனைப்படுத்தியதால்
'எம்முயிர் மொழிக்கு நேரம் குறைத்த இப்பள்ளியில் இனி யாம் பணி செய்யோம்' என தம் ஆசிரியர் பணியைத் துறந்தார்.
இதற்கு பின் அங்கு தமிழாசிரியராய்
பணியில் சேர்ந்த பாரதியார், தமக்கு முன்பாக அங்கு அரசஞ்சண்முகனார் பணியாற்றியதையும், பணிதுறந்த காரணத்தையும் கேட்டறிந்து திடுக்கிட்டு சோழவந்தான் வந்து அரசஞ்சன்முகனாரிடம் தாம் விபரமறியாது பணியில் சேர்ந்து விட்டதாகவும், தாங்கள் இருந்தயிடத்தில் இருக்க நான் ஈடாகேன் என்றும் வருத்தம் தெரிவித்து தானும் இனி அங்கு பணியாற்றப் போவதில்லையென தெரிவித்தார்.
பின்னர் பாரதியை அமைதியைபடுத்திய புலவர் அரசஞ்சண்முகனார் பாரதியை தொடர்ந்து பணியாற்ற வேண்டியதுடன் சுதந்திர வேட்கை குறித்த அவரது எழுத்தறிவை பாராட்டி ஊக்கமூட்டினார். பின் பாரதி சில காலம் அங்கேயே பணியாற்றினார்.
தம் பதினெட்டாம் வயதிலேயே "மாலை மாற்று மாலை" என்ற நூலைப் பாடி முடித்த அரசஞ்சண்முகனார் தோற்றத்தில் வயல் வேலை செய்யும் விவசாயியை போன்று எளியவர். உடம்பை மறைக்க நான்குமுழம் வேட்டி; மேலே ஒரு துண்டு; தலையிலே சிறு குடுமி; வெற்றிலைக் காவி படிந்த மீசை; அடிக்கடி நோயினால் மெலிந்து காணப்படும் உடம்பு; இறைவனை என்றும் நினைவுபடுத்தும் திருநீறு.
இவர்தம் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்துவிட்டு "இவர்பால் அணுகவும் இயலாதே" என அஞ்சி ஒதுங்கி இருப்பவரெல்லாம், உருவத்தை நேரில் கண்டால் அவர்தாமா என்று எண்ணுமளவிற்குத் தம் புலமைத் திறத்தை வெளிக்காட்டாமல் அடங்கியிருந்தவர்.
இத்தகையாளரைப் புலவர் குழாத்திடை இருக்கச் செய்த பெருமை, வள்ளல் பாண்டித்துரைத் தேவருக்கு உரியது.
ஆசிரியர் பணிதுறந்த பின் 1901 ல் பாண்டித்துரை தேவரால் தொடங்கப்பட்ட மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தின் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையில் 1902 முதல் 1906 வரை அரசஞ்சண்முகனார் பேராசிரியராகப் பணி புரிந்து தமிழ் தொண்டாற்றினார்.
இயற்றிய நூல்கள்:
சோழவந்தான் சிதம்பர விநாயகர் மாலை,
மாலை மாற்று மாலை,
ஏகபாத நூற்றந்தாதி,
இன்னிசை இருநூறு,
மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை,
திருவடிப்பத்து,
நவமணிக்காரிகை நிகண்டு,
வள்ளுவர் நேரிசை, தொல்காப்பியப் பாயிர விருத்தி,
திருக்குறளாராய்ச்சி,
திருக்குறட்சண்முகவிருத்தி, இசை நுணுக்கச் சிற்றுரை எனப் பலவாகும்.
இத்தகு பெரும்புலவர், தம் 47ஆம் வயதில் 1915ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
இவரது தமிழ் தொண்டை போற்றும் வகையில் அன்றைய ஆங்கில அரசால் 1931ல் சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் தொடங்கப்பட்ட பள்ளி இவரது பெயரால் 87 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மேலும் சோழவந்தான் தெற்குதெருவில் இவரது பெயரில் "அரசஞ்சண்முகனார் வாசகசாலை" அமைந்துள்ளது.
தமிழார்வலரான சோழவந்தான் C.கன்னியப்ப முதலியார் மற்றும் பு.அறிவுடைநம்பி ஆகியோர் இவர்குறித்த புத்தகம் எழுதியுள்ளனர்.
நாடு அறிந்த நடுவர் பேச்சாளர் நடிகர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் பிறந்த ஊர் சோழவந்தான் .இவரது முனைவர் பட்ட ஆய்வு சோழவந்தானில் பிறந்த பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் படைப்புகள் பற்றியது .
தன் தமிழ்தொண்டால் நம் சோலை மண்னிற்கு பெருமைசேர்த்த பெரும்புலவர் அரசஞ்சண்முகனாரை போற்றுவது நம் ஒவ்வொருவரது கடமை..
வாழ்க தமிழ்! வளர்க அரசஞ்சண்முகனாரது புகழ்!
--



கருத்துகள்
கருத்துரையிடுக