கவிஞர் இரா இரவியின் 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு" நூலில் இடம் பெற்றுள்ள தோரண வாயில் படித்து மகிழுங்கள் .





கவிஞர் இரா இரவியின் 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு" நூலில் இடம் பெற்றுள்ள தோரண  வாயில்  படித்து மகிழுங்கள் .

புகழ்பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வர உள்ளது .வெளியீட்டு விழா நாள் .27.12.2015 .


தோரண வாயில்
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
*****
       மதுரை மாநகரில் எனக்குப் பழக நேரமும், தொடர்ந்து உறவை வடிவமைக்கவும் அவகாசம் கிடைத்தது. என்னுடைய வாழ்க்கையை எனக்காக நான் வாழ்ந்தது மதுரையில் தான்.

       நான் சுற்றுலா இயக்குநராக இருந்த போது, 1999ஆம் ஆண்டு ஒரு தனிப்பட்ட கடிதம் வந்திருந்தது.  அதே துறையைச் சாரந்த இரவி என்பவர் – திருமலை நாயக்கர் அரண்மனையில் பணியாற்றியவர் – எழுதியிருந்தார்.  நான் எழுதிய ‘ஆத்தங்கரையோரம்’ நாவலை தமிழில் முக்கிய ஐந்து நாவல்களில் ஒன்றாக மலேசியப் பத்திரிகை தமிழ்நேசனில் கைலாசபதி என்பவர் எழுதியிருந்தார்.  அந்தப் பிரதியை எனக்கு அந்தப் பணியாளர் அனுப்பியிருந்தார் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.  நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தேன்.

       மதுரையில் பணிக்குச் சென்றபோது கவிஞர் இரா. இரவி என்னை வந்து சாதித்தார்.  அவருடைய வட்டம் பெரியது என எனக்குப் புரிந்தது.  பேராசிரியர் கு.ஞா., இரா. மோகன், இளசை, சாலமன் பாப்பையா போன்ற பேச்சாளர்கள் பலரும் அத்துப்படி. பலரும் அத்துப்படியாக இருந்தாலும், அவர் ஒரு நாளும் அத்து மீறாதவர்.  அவருக்கு மதுரை புனித மரியன்னைப் பள்ளியின் தமிழாசிரியர் சந்திரனும் நண்பர்.

       இரவி நிறைய ஹைக்கூ எழுதுவார்.  முற்போக்குச் சிந்தனையாளர். சுறுசுறுப்பாக இயங்குவார்.  அவர் ஒரு நாள் எனக்குப் பிரபல எழுத்தாளர். இந்திரா சௌந்தரராஜன் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.

       இரவியைப் பொருத்தவரை அவர் சொன்ன செயலைச் செய்து முடிப்பவர். என் ஆய்விற்க்கு ஷேக்ஸ்பியரையும், திருவள்ளுவரையும் ஒப்பிடுவதற்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.

       ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் வளர்ச்சிக்க்கு பைபிளுக்கு அடுத்தபடியாக அரும்பணியாற்றியவர் என்பதை விளக்கும் புத்தகம் ஒன்று எனக்குக் கிடைத்தது.  திருவள்ளுவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புப் பற்றியும் எழுதினால் மட்டுமே ஒப்பாய்வு முழுமை பெறும்.  அதுகுறித்து என்னிடம் தகவல்கள் இல்லை.  மதுரையில் அறை எடுத்துத் தங்கி ஆய்வை மேற்கொண்டேன்.  நான் சொல்லச் சொல்ல ஜெயபாலன் – அப்போது அவர் ஓய்வு பெற்றிருந்தார் – தட்டச்சைக் கணினியில் செய்வார்.  ‘இது தொடர்பாகத் தகவல்கள் கிடைக்குமா’ என நான் இரவியைக் கேட்டேன்.

       மாலையில் சுப்ரமணியன் என்பவர் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையுடன் வந்து நின்றார். அதில் அரிய தகவல்கள் கிடைத்தன.  திருவள்ளுவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தமிழ்ச் சொற்களையும், பதங்களையும் உருவாக்கி இருக்கிறார். ஊருணி, கட்டளைக் கல் என்பவை அவராக உருவாக்கிய சொற்கள்.  அந்தக் கட்டுரை என் ஆய்வேட்டைச் செழுமைப்படுத்தியது.

       நான் இரவியை ‘புலிப்பால் ரவி’ என்று அழைக்கத் தொடங்கினேன்.
       அன்று நான் மதுரையிலிருக்கும் தகவலை வேறொருவரிடம் சொல்ல, அவர் பகல் நேரத்தில் வந்து என் பொழுதை வீணாக்கினார்.  மாலையில் பேராசிரியர் பெர்னார்ட் ஷா இருக்கும்போது இரவி வந்தார்.

       “ஏன் இப்படி நான் இருப்பதை எல்லோரிடமும் சொல்லி நேரத்தை வீணடித்திருக்கிறீர்கள்” என இரவியிடம் வினவினேன்.  சிரித்து, மழுப்பி, சமாளித்தார்.

       உடனே பெர்னார்ட்ஷா, “புலி நேற்று ஒரு நல்லது செய்திருக்கிறது, இன்று ஒரு கெட்டது செய்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.  நாங்கள் சிரித்தோம்.

       சுற்றுலாவில் பணியாற்றிய சுப்ரமணியன் என்ற துணை இயக்குநர் எங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி வருகிறார்.  அவர் நல்ல புகைப்படக் கலைஞர் என்பதாலும், வீடியோ விற்பன்னர் என்பதாலும் அவற்றை யூ ட்யூபில் ஏற்றி இணையத்தில் ஏற்றி விடுவார். இத் தகவல்களை எல்லாம் எனக்குத் தெரிவிப்பவர் புலிப்பால்.  என்னுடைய கட்டுரைகளை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றி அவ்வப்போது வாரம் முழுவதும் அதைப் பரப்பிய களிப்பிலும் அவர் திருப்தியடைவார்.

       சென்னையில் என் நூல்களைப் பற்றிய ஆய்வரங்கத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வர சம்மதித்த போது என் புத்தகங்களையும் அவருக்கான நினைவுப்பரிசையும் பத்திரமாக அனுப்பி வைத்தவர் இரவி.  மதுரை திருமலை மன்னர் கல்லூரியில் மேடையிலேயே ‘புலிப்பால்’ என அவரை அறிவித்தேன்.

       நான் ஏற்கனவே சொன்னபடி இவற்றையெல்லாம் என் ஞாபக அடுக்குகளிலிருந்து எடுத்து எழுதுகிறேன்.  எந்த நாட்குறிப்பையும் நான் எழுதி வைக்கவில்லை.  அந்த அளவிற்குப் பெரிய பணிகளிலோ, தொண்டுகளிலோ ஈடுபடவில்லை என்பதும், இவற்றையெல்லாம் ‘பாக்யா’ இதழில் எழுதப்போகிறோம் என்பது தெரியாததும் காரணம்.  இன்னொரு காரணம் சோம்பல்.

       நல்ல நினைவுகளும், நல்ல மனிதர்கள் ஆற்றிய செயல்களும் நாட்குறிப்பு இல்லாமலேயே நெஞ்சில் நெடுநாள் நிலைத்து விடும் என்பதில் எனக்கு ஆழமான நம்பிக்கையுண்டு.

   நன்றி     ‘பாக்யா’ வார இதழ், அக்டோபர் 23-29, 2015, பக். 31-37

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்