கவிஞர் இரா இரவியின் 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு" நூலிற்கு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் வழங்கி உள்ள அணிந்துரை .




கவிஞர் இரா இரவியின் 15 வது நூலான "ஹைக்கூ முதற்றே உலகு"  நூலிற்கு தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் வழங்கி உள்ள அணிந்துரை .

புகழ்பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வர உள்ளது .வெளியீட்டு விழா நாள் .27.12.2015 .

இரவியின் நெஞ்சம் திறப்பார் ஹைக்கூவைக் காண்பரே!’’
முனைவர் இரா. மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 625 021
*****
       ஆற்றல்சால் ஆளுமையாளர் முதுமுனைவர்
வெ.இறையன்பு அவர்களால், ‘புலிப்பால் இரவி எனச் செல்லமாக அழைக்கப்பெறுபவர் ‘ஹைக்கூ திலகம் கவிஞர் இரவி.  ‘எம் நெஞ்சம் திறப்பார் நிற்காண்குவரே!என்பது சங்கத் தலைவி, தன் தலைவனிடம் உரைக்கும் அன்புமொழி.  இதனைச் சற்றே மாற்றி நண்பர் இரவிக்கு நாம் இப்படிச் சொல்லலாம் ; ‘அவர் நெஞ்சம் திறப்பார் அங்கே ஹைக்கூ கவிதை கொலுவிருக்கக் காணலாம்.  இல்லாவிட்டால், ‘ஆதிபகவன் முதற்றே உலகு என்னும் வள்ளுவர் வாக்கினை அடியொற்றி அவர், ‘ஹைக்கூ முதற்றே உலகு எனச் சொல்லத் துணிவாரா என்ன?

“மூன்று வரிகளில் முத்தாய்ப்பாகச் சொல்ல வந்த கருத்தை ‘வெட்டு ஒன்று ; துண்டு இரண்டுஎன்ற விதமாக வடிப்பதற்கு ஹைக்கூ வடிவம் எனக்கு மிகவும் பிடித்த வடிவம்.  அதனால் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி வருகிறேன் என்னும் அவரது ஒப்புதல் வாக்குமூலம் இங்கே மனங்கொளத்தக்கது.

       ‘ஹைக்கூ முதற்றே உலகு என்பது கவிஞர் இரவியின் 15-ஆவது நூல்.  இதுவரை ‘விழிகளில், ‘உள்ளத்தில், ‘நெஞ்சத்தில், ‘மனதில், ஹைக்கூவுக்கு உணர்ச்சிமிகு இடத்தினைத் தந்திருந்த கவிஞர், இப்போது ‘உலக அளவில் ஹைக்கூவை உயர்த்திப் பிடித்திருப்ப்து குறிப்பிடத்தக்கது.  ‘கவிதைச் சாரலில் 1992-ஆம் ஆண்டில் தொடங்கிய அவரது எழுத்துப்பயணம் 24-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதும் வரவேற்கத்தக்க இனிய நிகழ்வு ஆகும்.

       ‘இனியவை நாற்பது, ‘கார் நாற்பது, ‘களவழி நாற்பது என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் ; இலக்கிய வரலாற்றில் படித்தும் இருக்கிறோம் ; கவிஞர் இரவி புதிதாகக் ‘கலாம் நாற்பது படைத்துள்ளார் ; பாரத மணித்திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் குறித்து நாற்பது ஹைக்கூ கவிதைகளைப் புனைத்துள்ளார்.  பதச் சோறாக, படித்த உடன் உள்ளத்தில் இடம் பிடித்து விடும் ஹைக்கூ ஒன்று இதோ :

              “திருமணம் விரும்பாத
              திரு மனம் பெற்றவர்
              கலாம்!
       திருமணம், ஒருகால் தமது அறிவியல் மற்றும் ஆய்வுப் பணிகளுக்குத் தடையாக அமைந்து விடலாம் என்பதற்காகக் கலாம் அவர்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை.  இதனை அவரே தம் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.  ‘ஆயிரம் காலத்துப் பயிர் என நடைமுறை வழக்கில் குறிப்பிடப் பெறும் திருமணத்தையே ஒருவர் விரும்பவில்லை என்றால்...?
‘திரு மனம் பெற்றவர்
என அவரை உயர்வாகக் குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது! 

       “திருவென்பது, பொருளுடைமையும், பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி.  அது வினையுள்ளுடைமையெனவும் படும்  (தொல்காப்பியம் : பொருளதிகாரம், பேராசிரியம், ப. 52) என்னும் பேராசிரியரின் உரை விளக்கம் இங்கே நினைவுகூறத் தக்கது.

       இவர் போல யாரு?
       என்று பேச வைத்தவர்
       கலாம்?

எனப் பழகுதமிழில் கவிஞர் இரவி கலாம் அவர்களுக்கு சூட்டியுள்ள புகழாரமும் நயமானது.

       “முடியுமா என்பது மூடத்தனம்
       முடியாது என்பது மடத்தனம்
       முடியும் என்பது மூலதனம்
என்பது மதுரை மாநகரின் ‘ஆட்டோ ஒன்றின் முதுகில் எழுதப் பெற்றிருந்த மணிமொழி.  இங்ஙனம் படிப்பவர் நெஞ்சில் தன்னம்பிக்கையை விதைக்கவல்ல அருமையான ஹைக்கூ கவிதைகளை இரவி இத்தொகுப்பில் படைத்துள்ளார்.
       “ஈடுபாடு
       உடன்பாடு
       மேம்பாடு
என மூன்றே சொற்களில் அமைந்த ஹைக்கூ கவிதை இவ்வகையில் சிறப்பாக்க் குறிப்பிடத்தக்கது.  ஒருவர் மனத்தளவில் ஈடுபாடும், அணுகுமுறையில் – சிந்தனையில் – உடன்பாடும் கொண்டு இடைவிடாமல் உழைத்து வந்தால், அவர் வாழ்வில் மேம்பாடு அடைவது என்பது உறுதி.  இதுவே இக்கவிதையின் வாயிலாகக் கவிஞர் இளைய தலைமுறைக்கு உணர்த்த விரும்பும் செய்தி.
       “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
       திண்ணியர் ஆகப் பெறின்
                                 (666)
என்னும் திருக்குறளின் ஹைக்கூ வடிவமே இரவியின் பின்வரும் ஹைக்கூ கவிதை.
       “வேண்டும் உறுதி
       முடியும் என்று நம்பு
       முடியும் உன்னால்!
‘கைகள் இன்றியும் வாழலாம், கால்கள் இன்றியும் வாழலாம், தன்னம்பிக்கை இன்றி வாழ இயலாதுஎன உறுதி இட்டு உரைக்கும் கவிஞர், மனிதன்,
       “முடியாது என்று
       நினைக்கும் போது
       தொடங்கும் தோல்வி!
என்கிறார்.  
       “தோல்வியே, நீ எங்கே பிறக்கிறாய்?
       ‘வெற்றி அடைய வேண்டுமேன்ற உறுதி எங்கு
       தளிர்கிறதோ! அங்கு நான் பிறக்கிறேன்
                                                       (பட்டிப் பறவைகள், ப. 42)
என்றும், கவிஞர் பெ. தூரனின் சிந்தனை இங்கே கருத்தில் கொள்ளத் தக்கது.
       விதி மீது பழி போடுவதில் இரவிக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.  ‘விதி என்று, ஒன்று இல்லவே இல்லை என அடித்துப் பேசும் அவர், ‘மதியால் வெற்றிமாலை தோள் மீது வந்து சேரும் என உறுதியாக நம்புகின்றார்.  ‘சோகம் வேண்டாம் இனி எனச் சொல்லி, ‘சோர்வைக் கொஞ்சம் தள்ளி வை! என அறிவுறுத்தி, ‘இன்பமே எந்நாளும் இனி என அப்பரின் அருந்தமிழினை நினைவூட்டி, படிப்பவர் நெஞ்சில் தன்னம்பிக்கையை விதைக்கின்றார் இரவி.
       “நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள் ;
       நல்லழகு வசப்பட்டால் துன்பம் இல்லை!
எனப் பறைசாற்றுவார் பாவேந்தர் பாரதிதாசன்.  அவரது அடிச்சுவட்டில் நடை பயிலும் கவிஞர் இரவி, வாழ்வில் எங்கும் – இயற்கையில் எதிலும் – அழகின் சிரிப்பையே பார்க்கின்றார் ; பதிவு செய்கின்றார்.
       “ரசித்துப் பார்த்தால்
       அழகு தான்
       திருஷ்டி பொம்மை!
என்னும் ஹைக்கூ கவிதை இரவியின் அழகியல் உணர்வுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றந்து.
       “இவ்வளவு அழகாய்
       பவளம் அடுக்கியது யாரோ!
       மாதுளம் பழம்
என்னும் ஹைக்கூ கவிதை இரவியின் ‘கவியுளத்தைத் திறந்து காட்டுகின்றது.
       “என்றும்
       இளமையாக
       நிலா!
என நிலவின் கொள்ளை அழகைச் சித்தரிக்கும் கவிஞர்,
       “வெட்டுதல் முறையோ
       வாழும் வாழையை
       திருமணத்திற்கு!
என இயற்கைக்கு எதிரான மனிதனின் வன்செயலினைத் தம் ஹைக்கூ ஒன்றில் சாடவும் தவறவில்லை.
       “நல்லவை தீயவும் அல்ல குவியுணர்ப்
       புல்லிலே எருக்கம் ஆயினும், உடையவை
       கடவுள் பேணேம் என்ன...
                           (புறநானூறு, 106)
எனப் பாடுவார் சங்கச் சான்றோர் கபிலர்.  கவிஞர் இரவியோ, கபிலரின் அமுதமொழியினை அடியொற்றி,
       “ரசித்துப் பார்த்தால்
       அழகு தான்
       எருக்கம் பூவும்!
என எருக்கம் பூவிலும் அழகைக் காண்கிறார்.
       “அருகே முட்கள்
       ஆனாலும் மகிழ்வாக
       ரோசா!”
என ரோசா மலரிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடத்தினைக் கவிஞர் பிறிதொரு ஹைக்கூ கவிதையில் எடுத்துக்காட்டுகிறார்.  அவரது பார்வைகள் மலர்கள் கற்பிக்கும் பாடம் இதுதான் : “சிரித்துக் கொண்டே இரு, கலங்காதே!”
       எதையும் நீட்டி முழக்கிச் சொல்லாமல், நச்சென்ற மொழியில் நறுக்குத் தறித்தாற் போல் உரைப்பது ஹைக்கூவின் தனிப்பாணி ; திறம்.  ஓர் எடுத்துக்காட்டு :
       “காட்டு விலங்குகள் ஒற்றுமையாய்
       நாட்டு மனிதர்கள் வேற்றுமையாய்
       உயர்திணை யார்?”
கவிக்கோ அப்துல் ரகுமான் நாட்டில் மிருகங்களாக இருந்து வரும் இத்தகைய மனிதர்களை ‘காட்டுமிராண்டிகள்’ (ஆலாபணை, ப. 149), என்னும் புதுச்சொல்லால் சுட்டுவார்.
       “மூன்றாவது கை
       ஏழாம் அறிவு
       நண்பன்!”
என்பது ‘மிகுதிக்கண் மேற்சென்று இடித்துரைக்கும்’ நண்பனைப் பற்றிய இரவியின் இரத்தினச் சுருக்கமான பாராட்டு.
       “தேசமெங்கும் இருப்பதால்
       தேசியப் பறவையோ?
       கொசு!”
என்பது படிப்பவர் இதழ்களில் குமிண் சிரிப்பினைத் தோற்றுவிக்கும் கவிஞரின் ஹைக்கூ.
       “ஓடுவதில்லை மெய்ப்படம்
       ஓடுகிறது பேய்ப்படம்
       திரைப்படம்!”
என்னும் ஹைக்கூ கவிதையில் அங்கதச் சுவை கவிஞரிடம் புரிந்து நிற்கக் காண்கிறோம்.
       “ஆண்களே
       அன்னமாக இருங்கள்
       மனைவி சொல் கேட்பதில்!”
என்னும் ஹைக்கூ கவிதை மெல்லிய நகைச்சுவையும் கவிஞருக்குக் கைவந்த ஒன்றே என்பதைக் காட்டி நிற்கின்றது.
       “பிறப்பு இறப்பு
       இரண்டிலும் ஒரு மெய்
       வாழ்க்கை இரு மெய்”.
என்னும் ஹைக்கூ கவிதையில் வெளிப்படும் தத்துவச் சிந்தனை வித்தியாசமானது.
       அண்மையில் சென்னை மாநகரையே புரட்டிப் போட்ட – ‘தலைநகரைத் தண்ணீர் நகராக்கிய’ – பேய்மழையின் கொடுமையையும், இரவி இத்தொகுப்பில் தம் கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார்.
       “பொய்த்தும் வாட்டியது
       பெய்தும் வாட்டியது
       மழை!”
என்னும் ஹைக்கூ கவிதை, இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் சிறந்த கவிதைகளுள் ஒன்று ஆகும்.
       “கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று அங்கே
       எடுப்பதூஉம் எல்லாம் மழை”  
                                  (15)
என்னும் திருக்குறள் இங்கே ஒப்புநோக்கத்தக்கது.  எப்போதும், எதையும் உடன்பாடாக உரைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்ற வள்ளுவர், இக்குறளை மட்டும் ‘கெடுப்பதும்’ என எதிர்மறைச் சொல்லோடு தொடங்கி இருப்பது நோக்கத்தக்கது.  அவரது கருத்தில், அடாத மழையினால் விளையும் கேடு மிகுதி போலும்!’
       இன்று டாக்டர் கு. சிவராமன் போன்ற அறிஞர்கள் தம் எழுத்தாலும், பேச்சாலும் உணவு பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்டி வருகின்றனர்.  கவிஞர் இரவியும் தம் பங்கிற்குத் துரித உணவினால் (FAST FOOD) நொறுக்குத் தீனிகளால் விளையும் தீங்குகளை எடுத்துக்காட்டி, சிறு தானியங்கள், இளநீர், மிளகு, நீராகாரம் போன்றவற்றை உட்கொள்வதால் விளையும் நன்மைகளை வலியுறுத்தி உள்ளார்.
       “தந்தது பலருக்கு
       துரித சாவு
       துரித உணவு!”
ஆம் ; ‘துரித உணவு’ பலருக்குத் தந்தது ‘துரித சா’வினைத் தானாம்!
       கவிஞர் இரவியின் படைப்பாளுமையில் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தி இருப்பவர்கள் இருவர்.  ஒருவர், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் ; மற்றவர், ‘கனவுகளின் சிற்பி’ மாமனிதர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.  விழிப்புணர்வை விதைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளும் உயரிய வாழ்வியல் சிந்தனைகளும் கவிஞர் இரவியின் ஹைக்கூ கவிதைகளில் போட்டி போட்டுக் கொண்டு கூப்பிட்ட குரலுக்கு எல்லாம் ஓடி வந்து ஏவல் செய்து நிற்கக் காண்கிறோம்.
       “உண்மையில் இல்லை
       கற்பிக்கப்பட்ட கற்பனை
       அதிர்ஷ்டம்”
என்னும் ஹைக்கூ கவிதையில் வெளிப்படும் கவிஞரின் சிந்தனை முற்போக்கானது.  அவரது நோக்கில், ‘கட்ட வேண்டியது, வழிபாட்டுத் தலங்கள் அல்ல’வாம்!  ‘மனித நேய’த்தைத் தானாம்!
       “உங்களிடம் கேளுங்கள், நீங்கள் எதற்காக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?” என்பது டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், நம்மிடம் தொடுக்கும் பொருள் பொதிந்த கேள்விக்கணை.  இதன் தாக்கத்தினை,
       “மூச்சுள்ள வரை இயங்கினால்
       மூச்சு நின்ற பின்னும்
       நினைக்கப்படுவோம்!”
என்னும் இரவியின் ஹைக்கூ கவிதையில் காண முடிகின்றது.
       “தந்தை பெரியாரின்
       கேள்விகள் மலர்வித்தது
       பகுத்தறிவை’
எனத் தம் ஹைக்கூ ஒன்றில் தந்தை பெரியாருக்குப் புகழாரம் சூட்டும் இரவி,
“அவர் மூச்சு மட்டுமே நின்றது
அவர் பற்றி பேச்சு நிற்காது
கலாம்!”
              எனப் பிறிதொரு கவிதையில் மாமனிதர் கலாம் அவர்களுக்குக் கவி மகுடம் சூட்டுகின்றார்.
                    லிமரைக்கூ, பழமொன்ரியு, விபுன் என்னும் புதிய கவிதை வடிவங்களிலும் இத்தொகுப்பில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் இரவி.  இவற்றுள் பழமொன்ரியு வடிவம் இரவிக்கு வசப்பட்டுள்ளது.  தமிழுக்கு முதல் பழமொன்ரியு தொகுப்பினைத் தந்த மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன், “பழமொழிகளுக்க் ஒரு திருப்பம் கொடுத்து, ஒரு சிறு மாற்றம் கொடுத்து, அல்லது ஒரு பார்வைத் திரிபைப் புகுத்தி, அவற்றுக்க்ப் புத்தொளி பற்ற வைக்கும் முயற்சி இந்நூலில் நடந்துள்ளது.  கொஞ்சம் குத்தலாய், கொஞ்சம் குதர்க்கமாய, கொஞ்சம் தர்க்கமாய பழமொழிகளை மாற்றிப் போட்டால் சென்ரியுவாக அவை சிலிர்க்கின்றன ; சிந்திக்க வைக்கின்றன ; சிரிப்பை அள்ளி வீசுகின்றன” (ஒரு கூடைப் பழமொன்ரியு, ப. 9) என மொழிவது மனங்கொளத் தக்கது.  ‘தமிழ்ப் பழமொழியும் ஜப்பானிய சென்ரியுக் கவிதையும் காதல் மணம் புரிந்து பெற்றெடுத்த கவிதைப் பிள்ளை’யான பழமொன்ரியு வடிவினை ஈரோடு தமிழன்பனின் அடிச்சுவட்டில் சிறப்பாகப் படைத்துத் தந்துள்ளார் இரவி.  குத்தலாய், குதர்க்கமாய், தர்க்கமாய், கேலியாய், கிண்டலாய், நக்கல்லாய், நையாண்டியாய், சாட்லாய் அமைந்த அவரது பழமொன்ரியு கவிதைகள் சில வருமாறு :
       “செந்தமிழும் நாப்பழக்கம்
       தமிங்கிலம் பரவுதலும்
       நாப்பழக்கம்!”
                    “மருமகள் உடைத்தால்
                    பொன்குடம் தவறு
                    பொன்குடம் உடையுமா?”
“ஆசைப்படலாம் முடவன்
கொம்புத் தேனுக்கு
கடையில் கிடைக்கும்!”
              “வாத்தியார் பிள்ளை மக்கல்ல
               ஆசிரியர் பிள்ளை
               பேராசிரியர்”
“நாற்பது வயதிற்கு மேல்
நாய்க் குணம் ஆம்
நன்றி குணம்!”
              நொறுங்க உண்டால் ஆயுசு நூறு
              நொறுக்குத் தீனி உண்டால்
              குறையும் ஆயுசு!”
              “தமிழ்ப் பழமொழிகள் போலவே, தமிழ்ச் சொலவடைகளும், விடுகதைகளும் சென்ரியுவாக மாறக் காத்திருக்கின்றன”. (ஒரு கூடைப் பழமொன்ரிட்யு, ப.9) என்னும் மூத்த கவிஞர் தமிழன்பனின் வாக்கினைப் பின்பற்றி இரவி, இத்துறையில் தொடர் ஓட்டம் மேற்கொள்ளலாம்.
              கவிஞர் இரவியின் மொழி கொண்டே இரத்தினச் சுருக்கமாக அவரை மதிப்பீடு செய்வது என்றால், அவரது
       “குருதியோடு
       உறுதியானது
       தமிழ்மொழி!”
       எனலாம்.  இரவியின் குருதியோடு உறுதியாகவும், உயர்வாகவும், உண்மையாகவும் கலந்திருக்கும் தமிழ்மொழி.  அவருக்கு, ‘மலர்களின் சங்கம’மான ‘பூங்கொத்தி’னை நல்கி, மகிழ்வுடன் வரவேற்றுப் போற்றும் நாள் மிக அண்மையிலேயே உள்ளது என்பது என் கணிப்பு.  வேட்கையும் கூட.


.

கருத்துகள்