இனிவரும் உலகம் நம்ப மறுக்கும்!
கவிஞர் இரா. இரவி.
*****
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப
மறுக்கும் என்று காந்தியடிகளைச் சொன்னார்கள் ; அது மாமனிதர் அப்துல்கலாம் அவர்களுக்கும்
பொருந்தும். இந்தியாவின் பாதத்தில் உள்ள
குட்டித்தீவான இராமேஸ்வரத்தில் பிறந்து இந்தியாவின் தலைநகராம் டெல்லியில்
குடியரசுத் தலைவராக இருந்து பதவிக்கு பெருமை சேர்த்தவர். அவரது இறுதி சடங்கிற்கு இராமேசுவரத்தில் கூடிய
கூட்டம் இதற்கு முன்பும் இராமேசுவரத்தில் கூடியதில்லை.
இனியும் கூடப்போவது இல்லை. ஆத்திகர்களின் புனித இடமான இராமேசுவரத்தை
நாத்திகர்களின் புனித இடமாகவும் ஆக்கி விட்டார் கலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தில் பிறந்து, தினமும் மீன், முட்டை, கறி
சாப்பிட்டு வளர்ந்தவரை, மாணவராக இருந்த போது வறுமையின் காரணமாக சைவ விடுதிக்கு
கட்டணம் குறைவு என்பதால் சேர்த்து விடுகிறார்கள்.
மற்ற மாணவராக இருந்தால், சைவ உணவு பிடிக்கவில்லை என்று படிப்பை பாதியில்
விட்டு இருப்பார். ஆனால் சாதனையாளர் கலாம்
அவர்கள் இன்முகத்துடன் சைவ உணவை விரும்பி உண்டு வந்த நோக்கம் படிப்பதற்கு, அதனை
இனிதே முடித்து, அந்தப் பழக்கமே கடைசி வரையில் அசைவம் சாப்பிடாமல்
சைவ உணவையே சாப்பிட்டார் கலாம்.
நேர்மையின் விளக்கமாக வாழ்ந்தவர் கலாம். அவருக்கு மாவு அரைக்கும்
இயந்திரம்
வழங்கினார்கள். எனக்கு தேவை இருக்கிறந்து, அதற்கான காசோலையை பெற்றுக்
கொண்டால் மாவு
அரைக்கும் இயந்திரத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று காசோலை தந்து பெற்றுக்
கொண்டார்.
காசோலை பெற்றவர், அவரது தமிழில்
உள்ள அழகிய கையொப்பம் கண்டு, அதிசயித்து வங்கியில் காசோலையை போடாமலே
இருந்து
விட்டார். பத்திரமாக வைத்துக் கொண்டார். வங்கிக் கணக்கில் இக்காசோலை
கழிக்காதது கண்டு உடன் காசோலையை வங்கியில் போடுங்கள், இல்லாவிட்டால் மாவு
அரைக்கும் இயந்திரத்தை திருப்பி அனுப்பி விடுவேன் என்றார் கலாம். அதன்பின்
காசோலையை வங்கியில் போட்டார். இப்படி ஒரு நேர்மையான மனிதரை நாம் காண
முடியுமா? நன்கொடையாகவும் இலவசமாகவும்
பெற்றுக் கொள்ளும் பலரை நாம் இன்று கண்முன்னே காண்கிறோம். அவர்களுக்கு
பாடமாக நேர்மையின் சின்னமாக
வாழ்ந்தவர் கலாம்.
குடியரசுத் தலைவராக பதவி ஏற்றவுடன் மாளிகையில் காலுக்கு காலுறை
(சாக்ஸ்) காலணி மாட்டி விட ஒருவர் வருகிறார்.
அவரிடம் வேண்டாம், மனிதனுக்கு மனிதன் இப்பணி செய்தல் கூடாது. என்னால் முடியும், நானே காலுறை அணிந்து கொள்கிறேன்
என்றார் கலாம். இதே இடத்தில் வேறு சராசரி
மனிதராக இருந்திருந்தால் காலுறை மாட்டிட காலை நீட்டி இருப்பார்கள். ஆனால், கலாம் அவர்கள் மனிதாபிமானம் மிக்கவராக
இருந்ததால் இப்படி நடந்து கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உணவு சாப்பிடும் போது அதில் உப்பு கூடுதலாக இருந்து இருக்கிறது. கலாம்
அவர்கள் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுகிறார். உப்பு கூடுதலாக இருந்ததை பின்னர் தான் உணர்கிறார் சமையல்காரர்.
கலாம் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறார்.
ஆனால் கலாம் அவர்கள் இது ஒரு விஷயமே இல்லை, விடுங்கள் என்கிறார். இந்தியாவில் மிக உயர்ந்த பதவியில் இருந்த
போதும் கோபமோ, அதிகார தோரணையோ அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் அவரது மறைவிற்கு இந்தியா
மட்டுமல்ல், உலகமே அழுதது. நேர்மையாகவும், எளிமையாகவும், மனிதாபிமானத்துடனும் வாழ்ந்தால் மக்கள்
மதிப்பார்கள், போற்றுவார்கள் என்பதற்கு கலாம் அவர்கள் எடுத்துக்காட்டு. பல வருடங்களாக சரியாக சமைத்துத் தரும் மனைவி,
ஒரு நாள் உணவில் உப்புப் கூடுதலாக போட்டு விட்டால், கோபத்தில் கத்தும் கணவனை பார்த்து
இருக்கிறோம். அவர்கள் கவனத்தில் கொள்ள
வேண்டிய கருத்து.
அவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்த போது,
உறுதியாக வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தி கவிதையும், என் கவிதை நூலும்
இராமேசுவரத்திற்கு அனுப்பி இருந்தேன்.
அண்ணனை பார்க்க வந்து இருந்த கலாம் அவர்களுக்கு எனது கவிதையும், நூலும்
கிடைக்க, நன்றியும், வாழ்த்தும் மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி
இருந்தார்கள். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து,
அவர் பற்றி சிற்றிதழ்களில் வந்த செய்திகளை சேகரித்து தொடர்ந்து அனுப்பி
வைத்தேன். நன்றி கூறி மடல் அனுப்பி
இருந்தார்கள். பாராளுமன்ற உரையைப் பாராட்டி
மடல் அனுப்பினேன். அதற்கும் நன்றி மடல்
வந்த்து. அவரது கடிதங்கள் பல என்னிடம்
உள்ளன. சந்திக்க அனுமதி கேட்டு மடல்
அனுப்பினேன்.
திருச்சி விருந்தினர்
மாளிகையில் சந்திக்க அனுமதி கிடைத்த்து.
மறக்க முடியாத தருணமாக அமைந்த்து.
குடியரசுத்தலைவர் பதவி முடிந்த பின்பு, மதுரை அரவிந்த மருத்துவமனை
குடியிருப்பில் தங்கி இருந்தார்கள்.
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் சந்தித்து மகிழ்ந்தேன்.
மதுரை
விமான நிலையத்தில் நான், உதவி சுற்றுலா அலுவலராகப் பணிபுரியும் காரணத்தால், கலாம்
அவர்கள் மதுரைக்கு வரும்போது மூன்று முறை சந்தித்தேன். மொத்தம் 5 முறை சந்தித்த அனுபவம் எனக்கு
உண்டு. பசுமையான நினைவுகள். ஒருமுறை அவர் வருவதற்கு 5 நிமிடங்கள்
தாமதமானது. விமானத்தின் மேலாளர்
காத்திருந்து கலாம் அவர்களை ஏற்றிச் சென்றார்.
உள்ளே சென்ற கலாம் அய்யா, விமானத்தின் உள்ளே இருந்த அனைவரிடமும் கைகூப்பி உங்கள் நேரம்
5 நிமிடத்தை எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் என்று
குறிப்பிட்டுள்ளார். அவருடைய உயர்ந்த
பண்பைக் கண்டு விமான நிலையமே வியந்து போனது.
மதுரை விமான நிலையம் வந்து, அறையில் காத்திருக்கும் போது, வண்டி
தள்ளும் கடைநிலை ஊழியர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி வேண்டினார்கள். கலாம்
அவர்கள் மறுப்பு எதுவும் சொல்லாமல்,
அவர்களை வரவழைத்து புன்சிரிப்போடு புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கினார்.
அவர்களிடம் அன்பாக பேசினார் . அதே இடத்தில் வேறு எந்த முக்கிய பிரமுகராக
இருந்தாலும் இப்படி பொறுமையாக பலரும் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி
வழங்கி
இருக்க மாட்டார்கள். கலாம் அவர்களுக்கு
சினம் வந்து யாருமே பார்த்து இருக்க முடியாது.
காரணம் அவர் எப்போதும் எங்கும் சினம் கொள்வதே இல்லை. உலகப்பொதுமறையான
திருக்குறளை அழ்ந்து படித்தது
மட்டுமன்றி அதன் வழி வாழ்ந்த காரணத்தால் தான் இவ்வளவு புகழ் அவருக்கு
சாத்தியமானது.
கலாம் அவர்களிடம் உங்கள் வாழ்வில் மகிழ்வான தருணம் எது? என்று
கேட்ட போது, அவர் சொன்ன பதில் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களை சுமந்து
நடக்க கஷ்டப்படும் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு எடை குறைவாக 300 கிராமில்
செயற்கை கால்கள் செய்து கொடுத்து அவர்கள் எளிதாக நடந்து வரும் காட்சியைக்
கண்டேன். அது தான் மகிழ்வான தருணம்
என்றார். அவர் பொக்ரானில் அணுகுண்டு சோதனை
செய்ததையோ குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றதையோ மகிழ்வான தருணம் என்று
குறிப்பிடவில்லை. காரணம் அவர் சராசரி
மனிதர் அல்ல, சாதனை மனிதர்.
குடியரசுத் தலைவராக கலாம் அவர்கள் மாளிகையில் இருந்த போது
நடைப்பயிற்சி செய்யும் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் குளிரில்
நடுங்குவதைக் கண்டு உடனடியாக அனைத்துக் காவலர்களுக்கும், குளிர் தாங்கும் கம்பளி
உடை வழங்கிட ஆணையிட்டுள்ளார். அதன்
பெயரில் ஆடை பெற்ற திரு. சுரேஸ் என்ற காவலர், தற்போது மதுரை விமான நிலையத்தில்
பணிபுரிந்து வருகிறார்.
பள்ளிக் குழந்தைகள் சந்திப்பின் போது ஒரு குழந்தை குடியரசுத் தலைவர்
மாளிகையில் உள்ள அழகிய தோட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். பார்க்க வேண்டும், அனுமதி தருவீர்களா? என்று
கேட்டு இருக்கிறார். உடன் கலாம் அவர்கள்
உனது பெற்றோருடனோ? அல்லது ஆசிரியருடன் வந்து தோட்டம் ரசிக்கலாம், அனுமதி தருகிறேன்
என்று சொல்லி அனுமதி வழங்கியவர். குழந்தைகளை, மாணவச் செல்வங்களை மிகவும்
நேசித்தவர். அவர் வாழ்நாளில் கோடிக்கும்
அதிகமான மாணவ மாணவியரை சந்தித்து, தன்னம்பிக்கை விதை விதைத்தவர். 10 கட்டளைகள் தந்து கடைபிடிக்க வைத்தவர்
கலாம்.
ஒரு நூல் என்ன செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டு அக்கினி
சிறகுகள் நூலாகும். பல்வேறு பதிப்புகள்
வந்து விட்டன. இன்னும் வரும். அக்கினி
சிறகுகள் நூல் படித்து முடித்தபின், படித்த வாசகர் மனம் மன நிறைவு பெறும். கவலைகள் காணாமல் போகும், அக்கினி சிறகுகள்
படித்து முன்னேறியவர்களில் நானும் ஒருவன்.
நான் மட்டுமல்ல் என் போன்று பலரின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக
இருக்கிறது அக்கினிச் சிறகுகள் நூல்.
கலாம் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால் சோதிட நம்பிக்கை இல்லை. அதனால் தான் அவர் கோடி கோடி மைல்களுக்கு
அப்பால் உள்ள கிரகங்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதை நம்பவில்லை
என்றார். சோதிடம் பார்த்து, நேரத்தையும்,
பணத்தையும் விரையம் செய்பவர்கள் இக்கருத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலக அழகி பட்டம் அவர்களுக்கு கிடைக்க காரணம் என்ன என்று கலாம்
அவர்கள் கேள்வி கேட்ட போது அழகு காரணம் என்றார்கள். அதுமட்டுமல்ல, வேறு என்று கேட்ட போது கடைசியாக
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொன்ன அறிவு என்றனர். அது மட்டுமல்ல இன்னும் சரியான பதில் வரவில்லை
என்று கலாம் சொன்ன போது, ஒரு சிறுமி சொன்னாள்.
உலக அழகிப் போட்டியில் நான் கலந்து கொள்ளாததால்தான் அவர்களுக்கு
அந்தப்பட்டம் கிடைத்த்து என்றாள்.
தன்னம்பிக்கை மிக்க பதில் இது என்று பாராட்டினார் கலாம். இப்படி கேள்விகள் கேட்டு பதில்கள் வாங்கி கோடி
மாணவர்களிடையே ஊக்கம் விதைத்த உன்னத மனிதர் கலாம்.
சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர்,
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புலகம் பற்றி கருத்தரங்கம்
சென்னையில் நடந்த்து. ஒரு வாரம் முன்பாக கலாம் அவர்களிடம் விழாவிற்கு வர இயலுமா?
என்று கேட்டதும் உடன் சம்மதம் தெரிவித்து விழாவிற்கு வருகை தந்து இறையன்பு
அவர்களின் நூல்கள் படித்தால் ஞானியாகலாம் என்று மனம் திறந்து பாராட்டி சென்றார். இதுபோன்ற உயர்ந்த உள்ளம் கலாம் தவிர வேறு
யாருக்கும் வராது.
மதுரை விமான நிலையத்தில் அவர் வருகையை ரசித்தவன். கனத்த மனதுடன் அவரது புகழ்உடல் மதுரை விமான நிலையம் வந்த போதும்
பார்த்தேன். மதுரையிலிருந்து இராமேசுவரத்திற்கு
சென்றது. மதுரையில் பணி இருந்த காரணத்தால் என்னால்
இராமேசுவரம் செல்ல முடியவில்லை. ஆனால்
மனம் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருந்தது.
மதுரை வீதிகளில் கலாம் அவர்களுக்கு அஞ்சலி சுவரொட்டிகள் 60-க்கு மேற்பட்ட
வெவ்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன்.
அவை அனைத்தையும், மதுரை நகர் முழுவதும் நடந்தே சென்று படம் பிடித்து எனது
வலைப்பூவிலும் (www.eraeravi.blogspot.in) ஆவணப்படுத்தினேன்.
மின்னஞ்சல் குழுக்களுக்கும்
அனுப்பி வைத்தேன். கவிதை உறவு மாத இதழ்
ஆசிரியர் ஏர்வாடியார் அவர்களுக்கும் மின் அஞ்சல் அனுப்பினேன். அவரும் அது
பற்றி கவிதை உறவில் பதிவு செய்திருந்தார். என்னால் முடிந்த அஞ்சலியை
இப்படி நிறைவேற்றினேன்.
கலாம் அவர்களின் இறுதி மரியாதைக்கு, இராமேசுவரம் தீவே குலுங்கும்
அளவிற்கு கூட்டம் கூடியது. பிரதம மந்திரி
முதல் பல்வேறு மந்திரிகளும் அண்டை மாநில முதல்வர்கள் மட்டுமன்றி எதிர்க்கட்சித்
தலைவர்களும், பன்னாட்டு தூதுவர்களும் வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அவரது
பெயரில் பல்கலைக்கழகங்கள் உருவாகின.
சிலைகள் நிறுவப்பட்டன.
தெருக்களுக்கு பெயர் சூட்டினார்கள்.
தமிழக அரசு அவர் பெயரில் விருதும் வழங்கியது. இப்படி பல்வேறு சிறப்புகள் கலாம் அவர்களுக்க்கு
கிடைத்த்து. நேர்மையாக வாழ்பவர்களை கேலி பேசிய
உலகம், கலாம் அவர்களின் நேர்மைக்கு கிடைத்த புகழ் கண்டு வியந்தார்கள். மக்கள் மன்ங்களில் கலாம் அவர்களுக்கு கிடைத்த
புகழ், மற்ற நேர்மையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த உரமாக அமைந்தது.
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை இனிவரும் உலகம் நம்ப
மறுக்கும் அளவிற்கு வாழ்ந்தவர் மாமனிதர் கலாம்.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்
கருத்துரையிடுக