பழமொன்ரியு 3 ! கவிஞர் இரா .இரவி !

பழமொன்ரியு 3  !    கவிஞர் இரா .இரவி ! 

நெல்லுக்குள்ளே  அரிசி 
சொல்லுக்குள்ளே மொழி 
கண்ணுக்குள்ளே காதல் ! 

துடைப்பக்கட்டைக்கு 
பட்டுக் குஞ்சலம் 
தூய்மை இந்தியா !

துரும்பு தூணாகாது   
தூண் துரும்பாகும்
நில நடுக்கம்  !

தேன் எடுத்தவன் 
புறங்கை நக்கவில்லை 
சர்க்கரை நோயாளி !

தேவையைக் குறைத்தால் 
தேவையில்லை கடன் 
நிரந்தரம் நிம்மதி  !

நல்ல காரியத்துக்கு 
நானூறு  இடைஞ்சல்
சேதுசமுத்திரத் திட்டம் !

எலும்பில்லா நாக்கு எதுவும் பேசும் 
நேர்மைக்கு வேண்டாம்
அச்சம் !

நல்ல மாடு விலை போகவில்லை 
வாங்கப் பணம் இல்லை  
உள்ளூரில் !

நாக்கு புரண்டாலும் 
வாக்குப் புரளாது 
முதியோர் !

தானம் தந்த மாட்டை 
பல் எண்ணிப் பார்க்கும் 
இலங்கை !
.
தாய் எட்டடி 
குட்டி பதினாறடி 
இளைய சமுதாயம் !

தாயும் 
விலைக்கு கிடைக்கும் 
வாடகைத்தாய் !

திறந்த வீட்டில் 
நாய்கள்   நுழைந்தனப்  போல 
பன்னாட்டு நிறுவனங்கள்  !

திறந்த கதவுக்குத் 
திறவுகோல் தேடினான் 
முட்டாள் !

தீராக் கோபம் 
போராய் முடியும் 
காக்க சினம் !

தீய வாழ்க்கை 
மரணம் போல 
சண்டியர் !

உண்மை 
பூச்சி  பறந்தால் 
வரும் மழை !

துணிந்தவர்களுக்கு 
துக்கம் இல்லை 
இலட்சியவாதிகள் !

நார் இல்லாமலும் 
தொடுக்கலாம் மாலை 
உள்ளது நூல்!

பிறப்பும் இறப்பும் 
நீரால் 
உப்பு !



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

கருத்துரையிடுக