நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விழிகள் பதிப்பகம் !8/ எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு ,திருவள்ளுவர நகர் ,திருவான்மியூர் ,சென்னை 41. பேச 94442 65152.
இந்த நூலிற்கு பலர் அணிந்துரை வழங்கி உள்ளனர் .தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ,ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஹைக்கூ ஆய்வாளர் முனைவர் இராம .குருநாதன் ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , உழைப்பால் உயர்ந்த கவிஞர் கவிமுகில், புதுமைத் தேனீ மா .அன்பழகன் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர் கவிதை நதி ந .வி .விசயபாரதி என அனைவரின் அணிந்துரையும் நூலிற்கு அழகுரையாக உள்ளன .
அட்டைப்பட வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் மிக நன்று .வாழ்வில் தேடல் முக்கியம் .தேடல் என்றால் பொருள் தேடல் அன்று அறிவுத் தேடல் மிக முக்கியம் . அறிவுத் தேடல் மூச்சு உள்ளவரை தொடர வேண்டும் என்று வலியுறுத்தும் ஹைக்கூ நன்று.
காடு நமைத்தேடும் வரை
பூமி நமை மூடும் வரை
தேடுவோம் அறிவுச் செல்வம் !
நம் நாட்டில் கோடிகள் குவித்து கும்மாளம் இடுகின்றது ஒரு கூட்டம் . அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய இயலாமல் பசி,பட்டினி வறுமையில் வாடுகின்றது ஒரு கூட்டம் .வறுமையை ஒழிப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் அவர்கள் வறுமையை ஒழித்துக் கொள்கின்றனர்.வளமாகி விடுகின்றனர் . ஏழ்மை பற்றிய மிக நுட்பமான பதிவு மிக நன்று .
எரியவில்லை
வாழ்க்கை விளக்கு
எரிகிறது வயிறு !
கதிரவன் வந்ததும் காணமல் போகும் சந்திரன் பற்றி வித்தியாசமாக வடித்த ஹைக்கூ நன்று .
ஒளிரத் தோடங்கிய நிலா
ஒழியத் தொடங்கியது
சூரியனக் கண்டதும் !
மழை பெய்கின்றது .மழை மலை மீது பெய்கின்றது.இதனைக் கண்டு ரசித்த , நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்கள் ஒரு ஹைக்கூ வடித்து விட்டார் பாருங்கள் .படித்ததும் நம் மனதிற்கு மலையும் மழையும் நினைவிற்கு வரும் .
குளித்துக் குளித்து
அழுக்குப் போகவில்லை மலைக்கு
ஒய்ந்தது மழை !
வணங்கும் கரங்களை விட உதவும் கரங்கள் மேல். என்று ஒரு பொன் மொழி உண்டு .சொல்லும் ,செயலும் , சிந்தனையும் நன்றாக இருந்தால் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் .இவற்றை வழிமொழிந்து பகுத்தறிவு சிந்தனை விதைக்கும் ஹைக்கூ நன்று .
நாளாறு காலமும் தொழுது
கோளறு பதிகம் பாடிப்
பல பெற்றான் கோளாறு !
வெப்பமயமாதல் இன்றைக்கு பெரிய பிரச்சனையாகி வருகின்றது. மரங்களை வெட்ட வெட்ட மழை பொய்த்து பூமி வெப்பமாகி பனிப்பாறைகள் உருகி தட்பவெப்பம் மாறி நோய்கள் பெருகி வருகின்றது .வெப்பமயமாதல் தொடர்பான ஹைக்கூ நன்று .
சூரியன் அலைந்து கொண்டிருக்கிறான்
எரிக்கும் தன் அனலை
இறக்கி வைக்க இடம் தேடி !
முரண் சுவையுடன் எள்ளல் சுவையுடன் மக்களாட்சியை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று .
இருண்மையை ஒழிக்க வந்த
இருட்டுத் தீபம் நம்
மக்களாட்சி !
ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவை கவிஞர் கவிமுகில் அறக்கட்டளையும் விழிகள் பதிப்பகமும் இணைந்து சென்னையில் கோலாகலமாக நடத்தினார்கள் .பதிப்பாளரும் ஹைக்கூ படைப்பாளராகவும் இருப்பது சிறப்பு .பாராட்டுக்கள் .
பொழுது போக்கப் படிக்காமல் ,சமுதாய பழுது நீக்கப் படிப்பவர்களுக்கு சிந்தனை விருந்து .சமுதாய நோய் நீக்கும் மருந்து நூல் ஆசிரியர் கவிஞர் விழிகள் தி .நடராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .


கருத்துகள்
கருத்துரையிடுக