‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: திருச்சி சந்தர்

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: திருச்சி சந்தர், நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை,
பதிவு எண் : 999, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை – 625 002.

வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

*****
விமர்சனமல்ல – நிதர்சனமான உண்மை
*****
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” - அறிஞர் அண்ணாவின் அறிவு சார்ந்த பொன்மொழிக்கேற்ப, ஒரு முன்னணி எழுத்தாளர், எவரையும் பின்னணி எழுத்தாளர் என்ற எண்ணம் தவிர்த்து, நல்ல எழுத்தாளர்களின் படைப்புக்களை தேர்ந்தெடுத்து, சத்துள்ள பகுதிகளை முத்துக் கோர்த்தாற் போல் விமர்சித்து அதனை நூலாக வெளியிடுவதற்கு தன்னலமற்ற பண்புள்ளம் வேண்டும்.
நூலகங்கள், நூல் விற்பனை நிலையங்கள், புத்தகக் காட்சியென சுற்றிச் சுற்றி வந்து, நல்ல நூல்களை பொருள் கொடுத்து வாங்கி, முழுவதும் படித்து, அறிந்து, ஆராய்ந்து, விமர்சன நூலாக வெளியிடும் ஆற்றலும், ஆவலும் உள்ளதால் தான் கவிஞர் இரா. இரவி சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறாரோ என்னவோ!
இந்த விமர்சன நூலில் மொத்தம் 50 படைப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.  50 பேரை விமர்சிப்பதற்கு குறைந்தபட்சம் 100 நூலகளாவது படித்திருக்க வேண்டும்  எனவே இவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, நல்ல படிப்பாளியும் கூட.  50 பேரில் இரா. இரவிக்கு சிலர் நேரிடையாக, நெருக்கமாகத் தெரிந்தவர்கள், சிலர் பற்றி சுருக்கமாகத் தெரிந்தவர்கள்.  ஆனால் பலரின் படைப்புகளின் சிறப்பை கேள்விப்பட்டு அல்லது படித்துணர்ந்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளார் என நினைக்கிறேன். நம்புகிறேன்.
மறைந்தும் நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகள், இன்றைய அநாகரீக எழுத்துக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள மனமின்றி தன்னை மறைத்துக் கொண்டு அவர்களது அறிவு சார்ந்த இலக்கியங்களை முறையாக நமக்கு மறையோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், இப்படி சிறந்தவர்களின் படைப்புக்களை தேடிப்பிடித்து, படித்து, விமர்சன நூலாக்கித் தந்துள்ளார் கவிஞர் இரா. இரவி.
புத்தக அட்டையில் திருவள்ளுவரின் படம் போடப்பட்டுள்ளது.  படம் போட்ட தங்க நிகர் குறள் வழியில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. 
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.            குறள் 423
இக்குறளின் விளக்கமாக இந்த விமர்சன நூல் அமைந்திருப்பதைப் பாராட்டுகிறேன்.
கீழே இரா. இரவியின் புகைப்படமும் பிரசுரமாகி உள்ளது பெருமை.  இரா. இரவி! உன் வழி தனி வழி!
தான் படைத்த நூலுக்கு விழா எடுத்து விளம்பரம் தேடிக் கொள்ளும் சுயநல காலக்கட்டத்தில், பிறர் நூலுக்கு விமர்சனம் எழுதி, தொகுப்பாக்கி அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பதற்கு துணிச்சல் மட்டும் போதாது.  தூய மனமும் வேண்டும்.  இரா. இரவியே!  தங்கள் மனிதநேயம் பாராட்டுக்குரியது.
இரா. இரவியின் நூல்களில் ஒரு சில பல்கலைக்கழகங்களின் பாடநூலாக இடம் பெற்றுள்ளன.  அதை வைத்தே படம் காட்டிக் கொண்டிராமல், நான் இன்னமும் புடம் போட்ட தங்கம் போன்ற நூல்களை எழுத வேண்டுமென்ற இவரது அடக்கமான ஆவலைப் பாராட்டுகிறேன்.
“ஓ! புரிகிறது
       இரா. இரவி,
       ஒரு புத்தகமல்ல
       புத்தக சாலை!”    
(மு. மேத்தா)
உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை     
                                         (முனைவர் இளசை சுந்தரம்)
“நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை”    
(கவிஞர் அறிவுமதி)
“எங்கே போய்  விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழ வைக்கும்”    
(திரு. இந்திரா சௌந்தர்ராஜன்)
“படுத்துக் கிடப்பது ஒரு சுகம்
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்”
(நீதியரசர் மு. கற்பக விநாயகம்)
“அறியாமை உனக்குள்ளே நூறுபடி
அதைப்போக்க அன்றாடம் நூலைப்படி
தொடங்கையில் தோன்றுவது வருந்தும்படி
தொடர்ந்துபடி இனிக்கும்படி ஊன்றிப்படி”    
(இனியவன்)
“எடுக்கவா...! கோர்க்கவா!” எல்லாமே முத்துச் சிதறல்கள். எதை எடுப்பது, எதைக் கோர்ப்பது என்று புரியாத நிலையில் விமர்சன நூலுக்கான விமர்சனத்தை முடிக்க இயலாமல் முடிக்கிறேன்.
தங்களது மானசீக குரு திரு. இரா. மோகன்.
இந்நூலின் தலைப்பு “புத்தகம் போற்றுதும்” என்பதற்கு பதிலாக “போற்றும் புத்தகம்” என்று இருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
எனக்குப் பெருமை! இரா. இரவி எனது நண்பர் என சொல்லிக் கொள்வதில்.
எழுதி எழுதி மேற்செல்லும் கையாக
வாழ்க வளர்க
நட்புடன்
திருச்சி சந்தர்                                                      


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்