ஹைக்கூ ஆற்றுப்படை நூலாசிரியர் :இரா.இரவி விமர்சனம் :ச.சந்திரா
ஹைக்கூ சாலை :
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறுத்துவதே ஆற்றுப்படை என்பர்.துளிப்பா என்றால் என்னவென்றே அறியாதோரை அறியச் செய்வதோடு அவர்களை ஹைக்கூ சாலையில் நிரந்தரமாக பயணிக்க வைக்கும் வல்லமை இரா.இரவியின் ஹைக்கூ ஆற்றுப்படை எனும் நூலுக்கு உண்டு. எனவே இப்பெயர் இந்நூலுக்குப் பொருத்தமான ஒன்றே !
தமிழன்னைக்கு மாலை :
அமுதபாரதி முதலாக தேவகிமைந்தன் ஈறாக உருவாக்கிய முத்துக்களை , கவிஞர் இரா.இரவி தன் சொல்லிழைகளால் திறனாய்வு மாலையாகத் தொடுத்து தமிழன்னைக்குச் சூட்டி அழகு பார்த்திருக்கிறார்.துளிப்பா என்பது இரா.இரவியின் இரத்தத்தில் கலந்த ஒன்றாக இருக்குமோ என்று எண்ணி அதிசயிக்கும் அளவிற்கு அவர் இந்த மூன்று வரிகளுக்குள் மோகம் வைத்திருப்பதை இந்நூலின் வழி உய்த்துணர முடிகிறது.அவர்தம் இலக்கிய பயணத்தில் அதிகம் பயன்படுத்திய சொல் ஹைக்கூவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் போன்றோரின் கணிப்பு.
நதியோட்டம் :
கோவிலுக்குள் நுழையும் கோபுர வாயிலாய் நூலாசிரியரைப் பற்றியும் ,நூலின் தன்மை குறித்தும் சொல்லிக்கொண்டே ,திறனாய்வுக் கோட்டைக்குள் நுழையும் இலாவகம் கவிஞர் இரா.ரவிக்கே உரியது.இலக்கியம் ந்ன்கு கற்றோர் பயன்படுத்தும் செந்தமிழ் வார்த்தை களை தம் திறனாய்வின்போது அவர் உபயோகிப்படுத்தும்விதம் நம்மையெல்லாம் ஆச்சிரியப்படவைக்கும்.இந்நூலில் வாசித்துணர்ந்த விமர்சனங்கள் ,சுட்டிக்காட்டிய மேற்கோள்கள் திறனாய்வாளரின் சமூக அக்கறையை ,மூட நம்பிக்கை எதிர்ப்பை ,சாதி மத இன மொழி பேத மறுப்பை வெளிப்படுத்தும்விதமாக உள்ளன.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு :
” கொடி கொடுத்தீர் !
குண்டூசி தந்தீர் !
சட்டை ?” (புதுவைத் தமிழ்நெஞ்சன் )
ம.ஞான சேகரன் கவிதை :
” தேள் கொட்டியது
கணியனை
குறி சொன்ன நேரம் !”
தீண்டாமையை மறுக்கும் ஒரு கவிதை :
” தொடருது மனக்கவலை
அறுபதாம் ஆண்டு விடுதலை நாளிலும்
தொங்குவது இரட்டைகுவளை ”
அகலமா ? ஆழமா ?
இலக்கியத்தின் உட்புகுந்து அதனை முழுமையாய் அனுபவிக்கும் உணர்வு உடையவரும் ,நுண்மாண் நுழைபுலம் மிக்கவரும் மட்டுமே ஒரு சிறந்த திறனாய்வாளராக இருக்க முடியும்.மேற்கூறிய கூற்றிற்கு இரா.இரவிபொருத்தமானவர்தான் என்பதை இந்த ஹைக்கூ ஆற்றுப்படை நூல் நன்றாகவே நிரூபணம் செய்கின்றது.சமூக நல்லெண்ணமும் ,அழகியல் உணர்வும் ,மரபு போற்றும் தன்மையும் திறனாய்வாளருக்கு வேண்டிய இன்றியமையாத பண்புகளாகும்.இவையும் இரவி அவர்களுக்கு பொருந்தி வருகிறது.இவரது விமர்சன நோக்கு சமுத்திரம் போல் ஆழ்ந்தும் ,மைதானத்தைப் போல் படர்ந்தும் ,அம்பைப் போல் கூர்மையாகவும் இருப்பதை நூல் முழுமையும் வாசித்துப் பார்த்தால் உணர முடியும்.
அறிவியலா ? இலக்கியமா ?
ரோஜாவை இதழ் இதழாய்ப் பிரித்துப் பார்த்துச் செய்யும் ஆய்விற்கு அறிவியல் ஆராய்ச்சி எனப் பெயர். அதுவே ஒற்றை ரோஜாவை உற்றுநோக்கி அதில் இலயித்து அதனைக் குறித்து உணர்வுப்பூர்வமாக எழுதினால் அதற்கு இலக்கிய ஆராய்ச்சி எனப் பெயர்.ஹைக்கூ குளத்தில் மலர்ந்த தாமரை, அல்லி ,குவளை போன்ற பல்வேறு பூக்களை கவிஞர் இரா.இரவிஉற்றுநோக்கி உணர்ந்ததன் விளைவுதான் இந்த ஆற்றுப்படை நூல் .படைப்பாளி எவ்விதமாக உணர்ந்து எழுதினானோ அது சிதையாமல்,அதன் வெளிப்பாடாக விமர்சனம் இருப்பின் அதுவே சிறந்த திறனாய்வு.இவ்விதமாய் எழுதுவது கவிஞர் இரா.இரவிக்கு கை வந்த கலையாக இருக்கிறது.
அதிசயமும் ஆச்சர்யமும் :
ஒரே வாசிப்பில் ஒப்பற்ற 26 நூல்களின் உணர்வோட்டத்தைச் சொல்லிவிடுகின்றார் இரவி அவர்கள். திறனாய்வின்போது சுட்டிக்காட்டியிருக்கும் ஹைக்கூ கவிதைகளும் ,அவற்றிற்கு அவர் தந்துள்ள விளக்கங்களும் அருமை.சின்னஞ்சிறு வாக்கியங்களாக மொழிநடை இருப்பதனால் வாசிப்போர்க்கு விமர்சனம் எளிதில் புரிந்தும் விடுகிறது.இலக்கியத்தை முழுமையாக கற்றறிந்தவரும் இப்படி திறனாய்வு செய்ய இயலுமா என அதிசயவைக்கிறது இவரது ஜப்பானிய-தமிழ் ஹைக்கூ நூல் விமர்சனம் (முனைவர் பட்ட ஆய்வேடு) மனமார்ந்த வாழ்த்துக்கள்..
இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ஹைக்கூ திலகம் இரா.இரவியின் பத்தாவது மைல்கல்லான ஹைக்கூ ஆற்றுப்படை நூல் அவரை கவிதை உலகிலிருந்து திறனாய்வு உலகத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றது.இந்த மாற்றம் கவிஞர் இரா.இரவி இலக்கிய வானில் மென்மேலும் சுடர்விடுவதற்கு உறுதுணை புரியும்.படிப்பாளியை படைப்பாளியாக்கும் இந்த ஆற்றுப்படை நூல் இன்னும் பல துளிப்பா கவிஞர்களை இலக்கிய உலகிற்கு தரும் என்பதில் எவ்வித ஐயமும் உண்டோ ?கவி சூரியன் இரா.இரவி அவர்களுக்கு என்போன்ற ஹைக்கூ பிரியர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக