இதயத்தில் ஹைக்கூ
நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர வாயில்:
அன்னையில் துவங்கி ஆன்மீகத் தந்தையில் நிறைவுறும் இதயத்தில் ஹைக்கூ என்னும் இந்நூல் முழுவதும் மின்மினிப்பூச்சிகள்!அரட்டிப் புரட்டிப் போடும் போலி பொதுநலவாதிகளை தன் மூன்று வரிக் கணைகளால் வீழ்த்துகிறார் கவி இரவி.இந்நூலில் சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் வர்ணனைக்கு மட்டுமல்ல!அறிவுரைக்கும் இலக்கணமாகின்றன. இதயத்தில் ஹைக்கூ எனும் இந்நூலில் ஆன்மீகத்திற்கோ நிறுத்தற்குறி .மூடப்பழக்கத்திற்கோ முற்றுப் புள்ளி. ஐம்பெரும்பூதங்களும் கவியின் கரங்களில் பம்பரம் ஆடுகின்றன.புராணக் கதைகளோ இந்நூலில் பொடித்துகள்களாகின்றன.
புதிரோ புதிர்:
மங்கை பற்றிய கவிதைகள் அனைத்தும் உவமை உடை அணிந்து,உருவக நடை பயின்று வரும் மகத்தான கவிதைகளாக உள்ளன. கரை தாண்டிய சுனாமிக் கவிதைகளோ, கல்நெஞ்சக்காரரையும் கரைய வைக்கின்றன.'பெண்மை'-இது கவி இரவியின் நோக்கில் உயர்வா?தாழ்வா? என கண்டறிய முடியாத புதிராகவே இந்நூலில் உள்ளது.கவி அஃறிணை உயிரின் மீது கொண்ட அக்கறை ஆல்பர்ட் சுவைட்சரை நினைவுப் படுத்துகிறது.
பக்கத்திற்குப் பக்கம்:
அகதிகள் மேல் கவிஞர் கொண்டிருக்கும் ஆதங்கம் அக்கவிதைகளை ஆ! தங்கம் -எனப் பாராட்டத் தோன்றுகிறது.உலக அமைதி கேள்விக்குறி-எனும் வரி ஓர் ஆச்சிரியக்குறி எனலாம்புகைப் படக் கவிதைகள் ஒவ்வொன்றும் புடம் போட்டக் கவிதைகள் எனலாம்.. ‘விதி’- கவி இரவியின் கரங்களுக்குள் சிக்கித் தவிக்கின்றது. ஆன்மீகமோ அக்குவேறு ஆணி வேறாகின்றன. இளமையில் வறுமைப் பயணம் குறித்த கவிதைகள் கண்கலங்க வைக்கும் கண்ணீர்க் கவிதைகளாக இருக்கின்றன.சிறுவனைப் பெரியாராக்கிய கவிதை இந்நூலின் சிறப்புக் கவிதை எனலாம்.அழுகின்ற குழந்தை பற்றி இத்தொகுப்பில் இடம்பெற்ற ஆறு கவிதைகளும் அருமையிலும் அருமை.காவிரித் தண்ணீருக்கான காத்திருப்பு -குறித்த இழைகள் நூலின் முதல்,இடை,கடை என எல்லாப் பக்கங்களிலும் நெசவு செய்யப்பட்டிருக்கின்றன.
ஹைக்கூ கணை:
“ஆறுகால பூசை
ஆலயத்தில் கடவுளுக்கு
பட்டினியில் மனிதன்! ”( ப.45)
வறுமை அரக்கனின் உலா:
“ வயிற்றுக்கு கஞ்சி இல்லை !
ஆடைக்கு கஞ்சி போட்டான்!
சலவைத் தொழிலாளி!.”( ப.9)
இயற்கைச் சீற்றம்:
“ தாய் இருக்க சேய்!
சேய் இருக்க தாய்
சுனாமிக் கொலை!” ( ப.12)
மனதார...
கவிஞர் இரா.இரவியின் இதயத்தில் ஹைக்கூ என்னும் ஏழாவது படைப்பில் இடம்பெற்றிருக்கும் குறுங்கவிதைகள் அனைத்தும் வாசிப்போர் இதயத்தில் தானாகவே வந்து பொருந்திக் கொள்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.இது எனது ஏழாவது நூல்,எட்டாவது நூல் -என எண்ண இயலாத அளவிற்கு எண்ணற்ற நூல் படைக்க கவி இரவிக்கு என்போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.எண்டிசையும் புகழ் பரவி, கவிஞர் ஏற்றமுடன் வாழ எம் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக