முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி கவிஞர் இரா .இரவி
தமிழ்த்தேனீ இரா .மோகன்
தகைசால் பேராசிரியர்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் .
இரா .இரவி அன்னைத் தமிழினைத் தம் உயிரினும் மேலாக நேசிப்பவர் .அல்லும் பகலும் இடைவிடாமல் இலக்கியங்களை வாசிப்பவர் .பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் முற்போக்குச் சிந்தனைகளையே தம் மூச்சுக் காற்றாய்ச் சுவாசிப்பவர்.பாரத மணித் திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ .ப .ஜே அப்துல் கலாமின் வழியில் இளைய தலைமுறையினரின் நெஞ்சகளில் விழிப்புணர்வை விதைப்பது பற்றியே தீவிரமாக யோசிப்பவர் .சுருங்கக் கூறின்,முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி என ரவியைச் சுட்டலாம்.அவர் பணியாற்றுவது சுற்றுலாத் துறையில் ,அவர் மிகவும் விரும்புவதோ தமிழ் உலாவை.
கணினியும் ,இணைய தளமும் அவருக்கு இரு கண்கள் ,இலக்கியச் சீரிதழ்களின் செல்லப்பிள்ளை இரா .இரவி.என் மனதில் பட்டதை எவருக்கும் அஞ்சாமல் ஹைக்கூவாக வடித்துள்ளேன் .உள்ளக் குமுறலை ,கோபத்தை ,சமுதாய விழிப்புணர்வை விதைத்துள்ளேன் .(மனதில் ஹைக்கூ ப 8 )என மனதில் ஹைக்கூ தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் இரா .இரவி.
வீரத்தில் சிங்கமாய்
வேகத்தில் சிறுத்தையாய்
எப்போது மனிதனாவாய் ? (விழிகளில் ஹைக்கூ ப 1 8)
என்னும் ஹைக்கூ கவிஞரது உள்ளக் குமுறலின் எதிரொலி ஆகும் .
சிங்கம் ,சிறுத்தை ,சுறா ,நடுநிசி நாய்கள் என்றார் போல் இன்று வெளிவரும் திரைப்படங்களின் பெயர்களைப் பார்த்தாலும் கவிஞரின்
உள்ளக் கருத்து உறுதிப்படும் .
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு ?என்று கேட்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் .அவர்களது அகராதியில் பெண் என்றால் இன்னொரு வீட்டிற்குப் போகப் போகிறவள் .பெண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு நிகரான உயர் கல்வி தேவை இல்லை .
படிப்பு எதற்கு ?
அடுப்பூதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை (நெஞ்சத்தில் ஹைக்கூ ப 5)
. என்னும் ஹைக்கூ கவிஞரது கோபத்தின் வெளிப்பாடு ஆகும் .
இரா .இரவியின் கருத்தியலில் வாழ்க்கை என்பது உண்பது ,உறங்குவது
மட்டும் அன்று .மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதே வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை.
கருவறை கல்லறை
இடைவெளி மட்டுமல்ல
வாழ்க்கை (மனதில் ஹைக்கூ ப 45)
எனத் தம் ஹைக்கூ ஒன்றில் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வைப்
பதிவு செய்துள்ள இரவி .
தமிழக மக்களின் நாவில் பயின்று வரும் பழமொழிகளையும் ,மேலோரின் விழுமிய மேற்கோள்களையும் தமக்கே உரிய பாணியில் பயன்படுத்திக் கொள்வதில் கை தேர்ந்தவர் இரவி.
கோழி மிதித்து குஞ்சுகள் சாகுமா ?என்பது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு பழமொழி ,இதன் அடிப்படையில் இன்றைய சமூக அவலத்தை வெளிப்படுத்தும் அழகிய ஹைக்கூ ஒன்றினைப் புனைந்துள்ளார் இரவி.
குஞ்சுகள் மிதித்து
கோழிகள் காயம்
முதியோர் இல்லம் (மனதில் ஹைக்கூ ப 61)
தமிழன் என்று சொல்லடா - தலை நிமிர்ந்து நில்லடா ! என்பது நாமக்கல் கவிஞரின் எழுச்சிமிகு முழக்கம் .இதனைத் தம் ஹைக்கூ ஒன்றில்
திறம்படக் கையாண்டு ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவோரைக் கடுமையாகச் சாடியுள்ளார் இரவி.
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா !
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா ?
என்னும் கவிஞரின் கேள்வி காரசாரமானது .
இரவியின் படைப்பு ஆளுமையில் நகைச்சுவை என்னும் மெல்லிய பூங்காற்றும் அவ்வப்போது களிநடனம் புரிந்து நிற்கக் காண்கிறோம் .ஓர் எடுத்துக்காட்டு
சுனாமி வருவதாக
மருமகள்கள் பேச்சு
மாமியார் வருகை (இதயத்தில் ஹைக்கூ ப 21 )
தமிழ்நாட்டுக்கே உரிய -அதுவும் தமிழ்நாட்டு பெண்களிடமே சிறப்பாகக் காணப் படுகின்ற மாமியார் -மருமகள் உறவை மையமாகக் கொண்டு இங்கே நகைச்சுவை ததும்பி நிற்கும் ஹைக்கூ படைத்துள்ளார் கவிஞர் .
கவிக்கோ அப்துல் ரகுமான் தொடங்கி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வரையில் படைப்பாளிகள் பலரும் ஹைக்கூ பற்றிய தங்கள் வரைவிலக்கணங்களைச் சுருக்கமாகவும் ,செறிவாகவும் வகுத்து தந்துள்ளனர் இரவியும் தம் பங்கிற்கு
மூன்று வரி
முத்தாய்ப்பு
ஹைக்கூ (மனதில் ஹைக்கூ ப 11)
என ஹைக்கூ குறித்துப் புனைந்துள்ளார் .கணினி யுகத்தின் கற்கண்டு ,தற்கால இலக்கியத்தின் தகதகப்பு ,உருவத்தில் கடுகு ,
உணர்வில் இமயம் ,படித்தால் பரவசம் ,உணர்ந்தால் பழரசம் ,சொற்சிக்கனம் -தேவை இக்கணம் என்னும் அழகிய தொடர்களால் ஹைக்கூ கவிதைக்குப் புகழாரம் சுட்டியுள்ளார் .
ஹைக்கூ என்றதும் இலக்கிய ஆர்வலர்களின் நினைவுக்கு வரும் கவிஞர்களில் ஒருவராக இரவி விளங்குகிறார் .ஹைக்கூ திலகம்
என்றும் அவர் சிறப்பிக்கப் பெறுகின்றார் .இதுவரை பத்து நூல்களைப் படைத்துத் தந்துள்ள கவிஞர் இரா .இரவி
எதிர்காலத்தில் இன்னும் பல நூல்களை வெளியிட்டு எழுத்துத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் .வாழும் படைப்பாளி ஒருவரை வாழும் காலத்திலேயே தாய் மனத்தோடு பாராட்ட முன் வந்து இருக்கும் பொதிகை மின்னல் இதழுக்கு தமிழ் கூறு நல்லுலகின்
நெஞ்சார்ந்த பாராட்டும் வாழ்த்தும் வணக்கமும் உரியனவாகுக !
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
very nice
பதிலளிநீக்குnandri
பதிலளிநீக்கு