படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

ஒரு சூஃபி ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த இனிய சம்பவம்.... அலுவலக வேலை சம்பந்தமாக, அந்த சூஃபி ஞானியை அடிக்கடி சந்தித்த நபர் அவர். துறவிகளைப் பற்றிய உண்மை புரியாமல் அவர்களைப் பற்றி அவதூறாக எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் குணம் கொண்டவர். சூஃபி ஞானி இவருக்கு தக்கபாடம் புகட்ட நினைத்தார். ஒருநாள் தன்னிடம் இருந்த வைர மோதிரத்தை அந்த நபரிடம் கழட்டித் தந்து, "அந்தக் காய்கறி கடைக்காரரிடம் சென்று இந்த மோதிரம் எவ்வளவு ரூபாய் பெறுமானமுள்ளதாக இருக்கும் என்று விசாரித்து வர முடியுமா?" என்று சூஃபி ஞானி கேட்டுக்கொண்டார். அந்த நபருக்கு ஞானியின் கோரிக்கை விநோதமாய் இருந்தது. "இது வைர மோதிரம். யாருமே பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்வார்கள். இதைப் போய் கேட்கச் சொல்கிறாரே? சரி போய் கேட்போம்" என்று யோசித்தபடி காய்கறிக்காரரிடம் மோதிரத்தைக் காட்டிப் பேசினார். காய்கறிக்காரர், "நல்ல மோதிரமாக இருக்கிறது. எப்படியும் இரண்டாயிரம் ரூபாய் தரலாம்" என்றார். இந்தச் செய்தியைக் கேட்ட சூஃபி ஞானி, அந்த நபரை மீண்டும் அங்கு இருந்த ஒரு பாத்திரக் கடைக்காரரிடம் விசாரிக்கச் சொன்னார். பாத்திரக்கடைக்காரர், “எப்படியும் ஒரு பத்தாயிரம் ரூபாய் தரலாம்” என்றார். கடைசியாக அந்த நபரை ஒரு நகைக் கடைக்காரரிடம் சென்று அந்த மோதிரத்தைப் பற்றி விசாரிக்கச் சொன்னார். மோதிரக்கடைக்காரர், “ஆஹா! விலையுயர்ந்த கல். எப்படியும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறையாமல் போகும்!” என்றார். இந்த மூன்று பதில்களையும் கேட்டுக் குழம்பி போனவரைப் பார்த்து சூஃபி ஞானி சொன்னார், “வைரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் வைர வியாபாரியிடம் தான் சென்று தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீ வைர வியாபாரியாகவேண்டும். துறவிகளைப் பற்றி சரியாய் தெரிந்துகொள். இல்லாவிட்டால் நீ துறவியாகு. சும்மா அவதூறு பேசாதே” என்றார். அதேபோல், நீங்கள் ஒவ்வொருவருமே வைரம்தான். அதைச் சரியான நபர்களிடமிருந்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்" ‘நீங்களும் வைரம்தான்.’ என்பதை உங்களுக்குச் சரியாய் புரியவைக்கும் அந்த நபரைத்தான் குரு என்கிறோம். எப்படி அந்தக் கதையில் வரும் நபர், தனக்கு எந்த லாபமும் இல்லாவிட்டாலும் துறவிகளைத் தூற்றித் திரிந்தாரோ, அப்படித்தான் ‘தான் விலை மதிப்பற்ற வைரம்’ என்பதை உணராதவரின் மனம், வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசும். துறவிகளை அவதூறு பேசுவதினால், ஒருவர் அதிகபட்சமாக ஞானியைத்தான் இழப்பார். ஆனால், “தன் ஆன்மா ஒரு விலைமதிக்க முடியாத வைரம்” என்பது உணரப்படாவிட்டால் வாழ்க்கையையே இழக்க நேரிடும். வாழ்வே சூன்யமாகிவிடும். நீங்கள் வைரம் என்பது புரியாத வரை... மற்றவர்கள் உங்களை மதிப்பதல்ல, நீங்கள் உங்களை மதிப்பதே சாத்தியமில்லை. மற்றவர்கள் உங்களை மதிக்க ஒரே வழி, நீங்களே ஒவ்வொரு நிமிடமும் பார்த்துப் பார்த்து ஆனந்தத்தில் பூத்துப்போகும் ஜீவன் முக்தராகுங்கள். உங்களுக்குள் இருக்கும் விலைமதிக்க முடியாத வைரத்தை கண்டுபிடிப்பதே நிரந்தரமான தீர்வாகும்.

கருத்துகள்