இலக்கியச் சாளரம் ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மேலூர் மு. வாசுகி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

இலக்கியச் சாளரம் ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் மேலூர் மு. வாசுகி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி வெளியீடு : கவிக்குயில், கோவை. தொலைபேசி எண் : 87548 79990 ****** நூலாசிரியர் கவிஞர் மேலூர் மு. வாசுகி அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டிகளில் வென்று விருதும் பெற்றவர். கவிதைப்போட்டியில் ரூ. 10,000 பரிசு வென்றவர், கவிபாரதி விருது பெற்றவர். தொடர்ந்து கவிதை, கட்டுரை, ஹைக்கூ என பல வடிவங்களில் நூல்கள் எழுதி வருபவர். தனது பெயருடன் மேலூரைச் சேர்த்துக் கொண்டு மேலூருக்கு பெருமை சேர்த்து வருபவர். மேலூரில் விஐயா பதிப்பகம் நடத்திய ‘இறையன்பு பன்முகப் பார்வை’ நூல் அறிமுக விழாவில் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் பேசும்போது மேலூர் மு. வாசுகி எழுதிய ஹைக்கூ என்று சொன்னார்கள். அரங்கம் கைதட்டியது நூலாசிரியர் மு. வாசுகியும் வந்திருந்தார்கள். சொந்த மண்ணிலேயே பாராட்டும் பெற்றார்கள். இந்த நூலை பட்டிமன்ற அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்கள். முத்தையா மோகன் அவர்கள் வரவேற்பு தோரணமாக விரிவான அணிந்துரை நல்கி உள்ளார். கோவை கவிக்குயில் பதிப்பகமும் பதிப்புரை வழங்கி உள்ளார்கள். ‘இலக்கியச் சாளரம்’ என சிறப்பான பெயரை நூலுக்குச் சூட்டி உள்ளார்கள். ஹைக்கூ எழுதுவதில் சிறப்பான பயிற்சி இருப்பதால், கண்ணில் பட்டவற்றை எல்லாம் ஹைக்கூவாக்கி ஹைக்கூ விருந்து வைத்துள்ளார்கள். படைப்பாற்றல் தவிர நூல் மதிப்புரை எழுதுவதிலும் வல்லவர் நூல் ஆசிரியர். என்னுடைய அனைத்து நூல்களுக்கும் மதிப்புரை எழுதி உள்ளார்கள். இணையத்தில் வலைப்பூவில் பதிந்து உள்ளேன். 15 ஆண்டுகளாக எழுத்துலகில் இயங்கி வருபவர் இந்த நூல் 9 ஆவது நூலாகும். குளிரிலுமா இலைகளுக்கு பரு பனித்துளி! பனித்துளிகளை பருக்களாகப் பார்த்த கவிப்பார்வை சிறப்பு. இயற்கையைப் பாடுவதில் ஜப்பானிய கவிஞர்களுக்கு சலித்தவர்கள் அல்ல என்பதை மெய்பிக்கும் ஹைக்கூ நல்ல கற்பனை பாராட்டுகள். சொல்லவும் கேட்கவும் எதுமின்றி நகர்கிறது அறுபதுக்குப்பின் வாழ்வு! உண்மைதான். பல அரசு ஊழியர்கள் அறுபது வயது ஓய்வு பெற்ற பின்பு வெளிஉலகிற்கே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்து வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். அது தவறு. வெளி உலகிற்கு வரவேண்டும், பேச வேண்டும், கேட்க வேண்டும் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ மூன்றெழுத்து அல்ல முப்பது வருட அனுபவம் அப்பா! இன்றைய இளைய தலைமுறை அப்பா என்ற உறவு அவ்வளவாக மதிப்பதே இல்லை, எளிதாக கடந்து சென்று விடுகின்றனர். அப்பா என்பவர் அனுபவம் மிக்கவர், அவர் சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்ற உணர்வைப் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஹைக்கூ நன்று. தேநீரும் மருந்தாகும் மனவலிகளுக்கு! மனம் கவலையில் வாடும்போது நண்பரைச் சந்தித்து உரையாடி தேநீர் அருந்தினால் கவலைகள் காணாமல் போகும். அதனை உணர்ந்து வடித்த ஹைக்கூ நனி நன்று. எல்லாவற்றையும் எழுத வைக்கிறது தனிமை! உண்மைதான் தனிமையில் வாடும்போது எழுத்தே துணையாகின்றது. வடிகாலாக அமைகின்றது. மனதில் பட்டதை பேசமுடியாவிட்டால் எழுதி எழுத்தாக்கி விடுகின்றனர் படைப்பாளிகள். இருக்கிறது என்வீட்டில் மரம் எதிர்வீட்டில் நிழல்! உண்மைதான் சுற்றுச்சுவர் அருகில் மரம் இருக்கும், கிளைகள் அடுத்த மட்டுமல்ல முருங்கை மரம் காய்கள் அடுத்த வீட்டில் தொங்கும். அவர் பறித்தாலும் குற்றம் சொல்ல முடியாது. அவருக்கும் பங்குண்டு, அதைப்போல நிழல் அடுத்த வீட்டிற்கு விழுவதும் இயல்பு தான். அதனை உற்றுநோக்கி வடித்த ஹைக்கூ சிறப்பு. நெருப்பில் வயிற்றை குளிர்வித்தவர் வள்ளலார்! வள்ளலார் மடத்தில் அடுப்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். சமையல் நடந்து கொண்டே இருக்கும். வருவோருக்கு பசியாற்றி மகிழ்கின்றனர். அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. இல்லாத பணம் எல்லாப் பாடமும் கற்பிக்கிறது! பணம் இல்லை என்றால் கிடைக்கும் அவமானம் பல பாடங்களை கற்பிக்கும், இருக்கும் போது கூடி மகிழும் உறவுகள். பணம் இல்லாத போது ஓடிவிடும், தனிமைப்படுத்திவிடும். உணர்ந்து உணர்த்திடும் ஹைக்கூ. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான இடம் அம்மாவின் கருவறை! பெண்களுக்கு சமஉரிமை பெயரளவிலேயே வழங்கப்படுகிறது. இன்னும் பெண்கள் இடஒதுக்கீடு அமலாகவில்லை. பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் ஆட்சியர் அளவில் கூட நடப்பது வேதனை. பெண்ணியம் பேசிடும் ஹைக்கூ நன்று. நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகளால் விருந்து படைத்துள்ளார். ******

கருத்துகள்