கவியமுதம் நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி மதிப்புரை: கோ.பத்மாவதி

கவியமுதம் நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி மதிப்புரை: கோ.பத்மாவதி பக்கங்கள்: 172 விலை: ரூ.100 வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசனாரின் கூற்றிற்கிணங்க தமிழே அமுதம். அத்தகைய அமுதமாகிய தமிழில் கவிதைகளை வடித்து கவிஞர் இரா.இரவி அவர்கள் 'கவியமுதம்' என்னும் அருமையான புத்தகத்தைப் படைத்தளித்துள்ளார். 'மண்ணில் உள்ளது சொர்க்கம்' என்னும் தலைப்பில் நாம் வாழும் வாழ்க்கையை எவ்வாறு சொர்க்கமாக மாற்றுவது என்பதற்கு வழிகளாக முயற்சி, தன்னம்பிக்கை, திட்டமிடுதல், பெரியவர்களை மதித்தல், வாய்ப்புகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குறித்து கவிதை வடிவில் இளைஞர்களுக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார். பிறந்தோம் என்பதற்காக வாழாதே! பிறந்தது சாதிப்பதற்கு என உணர்ந்திடு! (ப.15) 'தேடிச் சோறு நிதம் தின்று' என்ற மகாகவி பாரதியாரின் வைரவரிகளை அடியொற்றி கவிஞர் இரா.இரவி அவர்கள் கீழ்க்காணும் கவிதையை வரைந்துள்ளார். வெந்த சோறு தின்று விதி வந்தால் சாவேன் என்று சொல்வதை நிறுத்து! மதியால் சாதித்து வாழ்! மண்ணுலகம் போற்றிட வாழ்! வாழ்க்கையின் முன்னேற வேண்டுமானால் உலகில் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதன் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் பெற்ற வேதனைகளையும், சோதனைகளையும் அறிந்து கொள்ள முடியும். அத்தகைய வேதனைகளையும், சோதனைகளையும் எவ்வாறு சாதனைகளாக மாற்றி தலைவர்களாக மாறினார்கள் என்பதைப் புத்தகங்கள் உணர்த்துகின்றன. அதனால் இளைஞர்களுக்கு நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து ஊக்கம் ஏற்படும் என்பதை தனது கவிதையின் வாயிலாக கவிஞர் இரா.இரவி உணர்த்தியுள்ளார். வென்றவர்களின் வரலாறு படித்திடு! வென்று நீயும் வரலாறு படைத்திடு! சாதித்தவர்களின் சாதனை அறிந்திடு! சாதித்துச் சாதனை புரிந்திடு! (ப.22) கவிஞர் இரா.இரவி தனது கவித்திறமையால் இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் புகுந்து விளையாடியுள்ளார் என்றே கூற வேண்டும். 'தமிழர் நலம்' என்னும் தலைப்பில் தமிழின் தொன்மையையும், இனிமையையும், வளமையையும், இலக்கியச் செழுமையையும், இலக்கண வரம்பமைப்புகளையும் 250 பக்கக் கட்டுரைகளாக எழுத வேண்டியவற்றை 25 பக்கங்களில் மிகவும் நேர்த்தியான கவிதைகளாக தீட்டியுள்ளார். உலகின் முதல் மொழி நம் தமிழ்மொழி! உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி! (ப.26) இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ்! எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ்! (ப.29) பல சிறப்புகளை உடைய தமிழில் ஆ,ஈ,தீ போன்ற பல ஓரெழுத்துப் பொருள் தரும் சொற்கள் பரவிக் காணப்படுகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் I என்ற ஒரே ஒரு ஓரெழுத்துப் பொருள் தரும் சொல் மட்டுமே உள்ளது. இவற்றையெல்லாம் படித்துணர்ந்து கவிஞர் இரா.இரவி அவர்கள் தமிழ் மொழியின் வளமையை எடுத்துக் கூறி 'என்ன வளம் இல்லை தமிழ் சொற்களில்?, ஒப்பற்றத் தமிழுக்குப் பிறமொழிக் கலப்பு நஞ்சு!, தமிழை நினைக்காதவன் தமிழனா?, தமிழா நீ பேசுவது தமிழா?' போன்ற பல தலைப்புகளில் தமிழோடு பிற மொழிக் கலந்து எழுதுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். திருக்குறளின் பெருமைகளை சிறப்பாக எடுத்துரைக்கும் நூலான திருவள்ளுவமாலை என்ற நூலானது 53 புலவர்கள் ஒன்றிணைந்து எழுதினர். ஆனால் கவிஞர் இரா.இரவி அவர்கள் தனது 'கவியமுதம்' என்ற இந்த புத்தகத்தில் திருக்குறளின் பெருமைகளை பல இடங்களிலும் பரவ விட்டுள்ளார் என்பதே உண்மையாகும். 'சான்றோர் திறம்' என்னும் தலைப்பில் தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தில்லையாடி வள்ளியம்மை போன்ற பலரின் தியாகங்களையும், வரலாற்றையும் உணர்த்தும் விதமாக மிக மிக அருமையான கவிதைகளைப் படைத்துள்ளார். சுண்டக் காய்ச்சியப் பாலில் தேன் கலந்த சுவையுடன் 'கவியமுதம்' அளித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். இயற்கையைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். ஆனால் 'கவியமுதம்' என்ற இந்த புத்தகமானது பாவேந்தர் பாரதிதாசனாரின் 'அழகின் சிரிப்பை' நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இயற்கையைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும் என்பதை வலியுறுத்தும் விதமாக மிக அருமையான கவிதைகளை கவிஞர் இரா.இரவி அவர்கள் 'கவியமுதம்' என்ற புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். சமூக மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு கவிதைப் படைப்பதில் வல்லவரான கவிஞர் இரா.இரவி அவர்கள் சாதி வேற்றுமையை எதிர்த்தும், புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் போன்றவற்றின் தீமைகளை உணர்த்தியும் மிக அருமையான கவிதைகளை கவியமுத்தில் அளித்துள்ளார். குழந்தைகள் மனத்தைக் கெடுக்கும் ஆபாச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வாரப் பத்திரிக்கைகள் போன்றவற்றை வேரறுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு 'கவியமுதம்' புத்தகத்தின் 140 ஆம் பக்கத்தில் ஆகச் சிறந்த அருமையான கவிதையைப் படைத்துள்ளார் கவிஞர் இரா.இரவி. அன்பு செலுத்துவது மனிதன் குணம்! வம்பு செய்வது விலங்குகள் குணம்! உன்னுயிர் போல மற்ற உயிரை நேசி! உயிரைப் பறிப்பது மடமை நீ யோசி! (கவியமுதம், ப.136) 'கவியமுதம்' என்ற புத்தகத்தின் வாயிலாக கவிஞர் இரா.இரவி அவர்கள் பல்வேறு தலைப்புகளில் அமுதமாகிய கவிதைகளைப் படைத்து விருந்து அளித்துள்ளார் என்பதே உண்மையாகும்.

கருத்துகள்