படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

பட்டிமன்றம் பாதைகளும் பயணங்களும் சாலமன் பாப்பையா நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விலை : ரூ. 210 தொடர்புக்கு : 0452 234 4106 "படிப்புக்கும், எங்க குடும்பத்துக்கும் தூரம் ரொம்பவே அதிகம்" என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ள அய்யா அவர்கள் தான் பட்டிமன்றத்திற்கும், பாமர மக்களுக்குமான தூரத்தை குறைக்க முயன்று, அதில் மகத்தான வெற்றியும் அடைந்தார். அய்யாவின் வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த பாராட்டுக்கள் தான் அவரை அடுத்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. வாசிப்புதான் என்னை ஒரு பேச்சாளராக உரம் போட்டு வளர்த்தது என்று வாசிப்பின் மகத்துவத்தை உணர்த்தியுள்ளார். அன்று தான் ஒரே வகுப்பில் ஃபெயிலே ஆகாமல் இரண்டு வருடம் படித்ததை நகைச்சுவையாக கூறுகிறார். ஆனால், இன்று கல்லூரிக்கே செல்லாமல் இல்லாத ஒரு பாடத்தில் எப்படி பட்டம் வாங்குகிறார்களோ?. ஒரு ஆச்சரியமான செய்தி, அன்றைக்கு நூலகத்தில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லையாம்; இன்றைக்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான தனிப்பிரிவு உள்ளது மிகச்சிறப்பு. "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக அய்யாவிற்கு நட்புகள் அமைந்துள்ளன. தான் பெற்ற மகனுக்கு நண்பர்களின் பெயரையே வைத்து, "காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது" என்று தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை நெருக்கிய இக்கட்டான சூழலில் கூட, அவர் படிப்பை கைவிடவில்லை. அதுதான், அவரை என்றும் உச்சியில் இருப்பதற்கு காரணமாக விளங்குகின்றது. 'பட்டிமன்றங்கிற' வார்த்தை திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் முளைத்தது என்றும்; சௌராஷ்டிர மக்கள் மூலம் தான் மதுரைக்குள் பட்டிமன்றம் நுழைந்தது என்றும்; அதன் வரலாற்றை பதிவு செய்துள்ளார். அதில், பேச்சாளர்கள் இரண்டு ரகமாம். ஒன்று ஜெயிக்கிற கட்சியில் மட்டும்தான் இருப்பவர்கள். இரண்டு, தனக்குக் கொடுத்த தலைப்பை நேர்த்தியாகப் பேசுபவர். நல்லவேளை, அங்கு ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறி செல்லும் வழக்கமில்லை. இன்று பட்டிமன்றம் பட்டிதொட்டியெல்லாம் பாமர மக்களை சென்றடைந்ததற்குக் காரணம் அய்யா அவர்கள் என்றால் மிகையில்லை எனலாம். ஆனால், அதில் தன்னுடைய பங்களிப்பு 'ஒரு துளியளவு' இருக்கலாம் என்று சொல்லும் தன்னடக்கம்; பேச்சாளரைத் தாண்டி, அய்யா அவர்களை ஒரு பண்பாளராக மக்களை நேசிக்க வைக்கின்றது. நன்றி. - சீ. தேவராஜபாண்டியன், மதுரை

கருத்துகள்