கவிஞர் இரா.இரவி அவர்களின் 'தீண்டாதே தீயவை' மதிப்புரை: கோ.பத்மாவதி
தீண்டாதே தீயவை! நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி மதிப்புரை: கோ.பத்மாவதி
பக்கங்கள்: 60 விலை: 50 வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை- 600 017. தொடர்பு எண்: 044-24342810/24310769
மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com
சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் இலக்கியம் படைக்கும் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா.இரவி அவர்கள் எழுதிய 'தீண்டாதே தீயவை' என்ற புத்தகமானது மேல்நிலைக் கல்வியின் பாடத்திட்டத்திலும், கல்லூரி பாடத் திட்டத்திலும் இடம் பெற வேண்டிய நூல் என்றால் மிகையில்லை. மதுப்பழக்கம், புகைபிடித்தல், சூதாடுதல் போன்றவை தனி நபரின் வாழ்க்கையை தள்ளாட வைப்பதோடு அந்நபரின் குடும்பத்தாரின் வாழ்க்கையையும், சமுதாயத்தையும் சேர்த்து சீர்குலைக்கிறது என்பதை நன்குணர்ந்து கவிஞர் இரா.இரவி அவர்கள் தமது கவிநடையாலும், மொழி வளமையாலும் மிக அருமையாக 'தீண்டாதே தீயவை' புத்தகத்தை படைத்துள்ளார்.
குடிப்பழக்கம் என்பது நண்பர்கள் கேளிக்கைக்காக ஒருநாள் மட்டும் என்று தொடங்கி வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து தன்னுடைய உடல்நலம் கெட்டு தனது வாழ்க்கைக் கேள்விக்குறியாகப் போவதோடு மட்டுமல்லாமல் மனைவி மகிழ்ச்சியின்றி தினம் தினம் நரக வேதனை அனுபவிப்பதோடு குழந்தைகளின் கல்வி, குடும்ப வாழ்க்கை என்று அனைத்தும் சீரழிந்து வம்சமே வளர்ச்சியின்றி போய்விடும் என்ற உண்மையை உரக்கவும், உருக்கமாகவும் தனது கவிதைகளின் வாயிலாக உணர்த்தியுள்ளார் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அவர்கள். இன்றைய அவல நிலையை கீழ்க்காணும் கவிதையில் மனம் குமுறி கவிஞர் பதிவிட்டுள்ளார். கணவரின் குடியால் பெருகியது மணவிலக்கு தேவை மதுவிலக்கு! பள்ளியின் இருக்கையை விற்றுக் குடித்த மாணவ குடிமகன்கள்! ஆண்களின் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது சில பெண்களுக்கும்! குடிபோதையில் பெற்ற தாயைக்கொன்ற குடிமகன்! போதை மறுவாழ்வு மையங்களுக்குச் சென்று பார்த்தால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உள் நோயாளிகளாக இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது.
'தீண்டாதே தீயவை' என்னும் புத்தகத்தில் புகைப் பிடிக்கும் பழக்கத்தால் உயிரைக் கொல்லும் நோய்க்கு ஆளாகி மடிந்து விடும் நிலையை தமது கவிதைகளின் வாயிலாக இளைஞர்களை எச்சரித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். புகைப்பவரை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அந்தப் புகையை சுவாசிக்கும் அனைவருக்குமே பெரும் பாதிப்பைத் தரும் என்பதையும் அறிவுறுத்தியுள்ளார்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்! என்பது அன்று சொன்ன பழமொழி! புகையிலைப் பழக்கம் விரைவில் உன்னை சுடுகாட்டுக்கு அனுப்பும் இது புதுமொழி! கையால் தொடாதே புகையிலை! 'சூதாட்டத்திற்கு இரையாகாதே' என்னும் தலைப்பில் கவிஞர் இரா.இரவி அவர்கள் இன்றைய இளைய தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ள இணைய வழி சூதாட்டத்திலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியை எடுத்துள்ளார் என்று சொல்லலாம்.
ஆரம்பத்தில் பணம் வருவது போல் தோன்றும். ஆனால் அது கானல் நீர் போன்றது. விளையாட விளையாட சூதாட்டமானது பெரிய அடிமையாக்கி கையிலுள்ள பணத்தையும், கஷ்டப்பட்டு உழைக்கும் அன்றாட வருவாயையும் சேர்த்து அடித்துச் செல்லும் காற்றாட்டு வெள்ளமே இணைய வழி சூதாட்டம். இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையான சிறுவர்கள்களை மீட்டெடுப்பதற்காகவே மனநல மருத்துவரை அனுகுவோர் அதிகமாக இருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.
கோடி கோடியாக கொள்ளையடிக்கின்ற்ன நிறுவனங்கள்! கோமாளித்தனமாக சூதாடுவதை உடன் நிறுத்திடுக! பணத்தாசை வெற்றி ஆசை காட்டி ஈர்ப்பார்கள்! பணத்தை இழந்து பிச்சைக்காரனாக மாற்றும்! திருக்குறளின் கள்ளுண்ணாமை, சூது போன்ற அதிகாரங்களோடு 'தீண்டாதே தீயவை' புத்தகத்தை ஒப்பிட்டு கட்டுரை எழுதினால் மிகவும் அருமையாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதோடு மட்டுமல்லாமல் கவிஞர் இரா.இரவி குளிர்பானம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்ற பேருண்மையைக் கூறி இளநீர், மோர், பதநீர் பருகுமாறு கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தில் மனிதர்கள் கடைபிடிக்கக் கூடாதப் பழக்கங்களை எடுத்துக் கூறி, அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கிக் கூறி, அதிலிருந்து தப்பிக்கும் வழிகளையும் உணர்த்தியுள்ளார் கவிஞர். ஆகவே இன்றைய இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம் 'தீண்டாதே தீயவை' ஆகும். சமுதாயத்தை சீர்படுத்தும் உயரிய நோக்கில் மிக அருமையான 'தீண்டாதே தீயவை' படைத்த கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு வணக்கங்கள், நன்றிகள்!!
--

கருத்துகள்
கருத்துரையிடுக