மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! கவிஞர் இரா.இரவி!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! கவிஞர் இரா.இரவி! பட்டுக்கோட்டையியில் பிறந்த பாட்டுக்கோட்டை பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம்! மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர் மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர்! சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர்! எளிமையும் இனிமையும் தனி முத்திரை என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர்! அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர் அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர்! கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர்! குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர்! இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில் இரு நூற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர்! மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம் பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம்! பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர் பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர்! இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால் இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள்! சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர் சின்னப் பாப்பாவிற்கு திருடாதே! அறிவுறுத்தியவர்! தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர்! தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர்! துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர்! உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர் இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர் காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர் காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர்! இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில் இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர்! தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில் தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர்! கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம் கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர்! பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர்! எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும் என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர்! நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர் நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர்! பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே! பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள் பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை!

கருத்துகள்