நூல் : மாண்புமிகு மனைவி
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிதாயினி சத்யா. ஆசிரியர்
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com
******
மாண்புமிகு மனைவி நூலின் ஆசிரியர் தோழர் இரா.இரவி அவர்களது நூலில் அணிந்துரை கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.
இந்த நூலில் தனது அன்பு மனைவி திருமதி ஜெயசித்ரா அவர்களுக்கு சமர்ப்பணமாக அளித்து அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.
இரா. இரவி தோழர் எனக்கு அறிமுகம் ஆனபிறகு, நான் பார்த்தவரையில் எந்த நிகழ்வாக இருந்தாலும் கண்டிப்பாக அங்கு இருப்பார். மாமதுரை அடையாளமாக அனைவருக்கும் தெரிந்த தோழர், அவரின் மனைவி சித்ரா அவர்கள் இறப்பு செய்தி கேட்டது அதிர்ச்சி. ஏனென்றால் நம்ப முடியவில்லை. அதையும் தாண்டி மனதை திடப்படுத்திக் கொண்டு தோழர் இரா.இரவி அவர்கள், தனக்கும் அன்பு மனைவிக்குமான ஊடல், கூடல், வேறுபாடுகள், சிறப்பு, குணநலன் என ஏராளமான சம்பவங்களை கூறியிருப்பது நெகிழச் செய்கிறது. இல்லற வாழ்க்கையில் எதிரும் புதிருமாக இருந்தாலும் அன்பும், அரவணைப்பும் இருந்ததை மறக்க இயலாது, மறக்க முடியாது என்று கூறியிருப்பது மனைவி மீது கொண்ட அலாதி அன்பை வெளிப்படுத்துகிறது.
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, தோழர் அவர்களின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ளும் நிகழ்வு. அதோடு இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்த நிகழ்வு.
தோழர் இரா.இரவி அவர்கள், மனைவி குறித்து நூல் வெளியீட்டின் போது நினைவுகளை பகிர்ந்து கொண்டது. இந்த நூலில் தனது திருமணம், அதன்பின் நடந்த தன் மகன் மீது பிரியம். தன் மனைவி குடும்பம், தன் பிறந்த வீடு, புகுந்த வீடு, இருவீட்டினரையும் அரவணைத்து செல்லும் போக்கு. திருமண நாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம், சுற்றுலா உதவி அலுவலராக பணியாற்றிய போது ஆளுமைகளிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும். தன் மனைவி இலக்கியம், தமிழ்ப் பணி இவைகளுக்கு உத்வேகம் கொடுத்தது, மறுப்பு தெரிவிக்காமல் உறுதுணையாக இருந்த நிகழ்வுகளை கூறியிருப்பது சிறப்பு. பலகாரங்கள் செய்து பிறருக்கு கொடுத்துதவும் அன்புக்கு சொந்தக்காரர் மனைவி ஜெயசித்ரா. மகன் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்றது. மகன்கள் இருவர் மீதும் பற்றும் பாசமும் கொண்டிருப்பவர். மருமகள்கள் மீதும் பாசம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்தது.
பல்வேறு இடங்களில், சில நேரங்களில் தோழர் அவர்கள் தான் விட்டுக் கொடுத்ததையும், மனைவி விட்டுக் கொடுத்ததையும் குறிப்பிட்டிருப்பது உண்மையில் இருவரும் சிறந்த தம்பதிகள் என்பதை பார்க்கும் (வாசிக்கும்) அனைவரும் தெரிந்து கொள்ள முடிகிறது.
சாமி பக்தி அதிகம், அதற்கு நேர்எதிர் தோழர் இரா.இரவி அவர்கள். தனக்கு உடல்நிலை சரியில்லாத நேரங்களில் தன்னை நன்றாக கவனித்துக் கொண்டார் துணைவி என்பதைக் கூறி. மருமகள்கள் இருவரையும் ஜெயசித்ரா அவர்கள் மகள்களாகவே பாவித்து பார்த்துக் கொண்டார், அவர்களும் நன்றாக கவனித்துக் கொண்டனர். தன் வீட்டிற்கு வந்தவர்களிடம் மனம் கோணாமல் நடந்து கொண்டார்.
நாட்கள் சென்றது, திடீரென ஒருநாள் அதிர்ச்சி செய்தி. அகால மரணம் இரா. இரவி அவர்களின் துணைவி இறப்பு செய்தி. அவரது வீட்டினர் அனைவரும் துடிதுடித்து. கதறி அழுத நிகழ்வு, பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது. விபத்து நடந்த செய்தி, ஆஸ்பத்திரியில் அனுமதி, உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்கிற விஷயங்கள், இரா.இரவி தோழருக்கு பெரிய துன்பத்திற்கு ஆளாகும்படி நடந்தேறியது. மறக்க முடியாமல், நினைவாலே இந்த நூலை எழுதி முடித்துள்ளார்.
நிறைவாக, அவர் கூறுவது : யாராக இருந்தாலும் அவரவர் மனைவியை நேசியுங்கள், அன்பாக நடத்துங்கள், மதியுங்கள், ஒற்றுமையோடு விட்டுக் கொடுத்த சென்று, இல்லற வாழ்க்கையை வாழ்ந்து காட்டுங்கள் என்ற சிந்தனையை சொல்லி நிறைவு பெற்றிருப்பது தான் நமக்கும், மற்றவர்களுக்குமான செய்தி.

கருத்துகள்
கருத்துரையிடுக