"எந்தக் கலைஞனைப் பார்த்து வளர்ந்தேனோ அதே கலைஞனை நான் இயக்கும் வாய்ப்பு அமைந்தது.அதுதான் முதல்மரியாதை.அவரைச் சந்தித்து படத்தின் "அவுட்லைன்"மட்டும் சொன்னேன்."முழுக்கதையை சொல்லுடா"என்றார்."கதை எனக்கே தெரியாது.Shooting spot-ல் சொல்றேன்."என்று சொன்னேன்.
என்னை நம்பி அந்த மகா கலைஞன் கதை கேட்காமலே நடிக்க ஒப்புக்கொண்டு மைசூருக்கு வந்தார்.
"ராசா நான் எப்புடி நடிக்கனும்னு சொல்லுடா"என்றார்.அவர் விக் மற்றும் மேக்கப் போட்டிருந்தார்.அதில் எனக்கு உடன்பாடில்லை.இருந்தாலும் நான் சொன்னபடி நடித்தார்.நான்"ok அண்ணே"என்று சொன்னேன்.அதற்கு அவர் "என்னடா,நான் நடிக்கவே இல்லே"என்றார்.
"அண்ணே...நீங்க நடிக்கவே வேண்டாம்னே...நீங்க நார்மலா இருந்தா போதும்.அதுலேயே பத்து வீணைகளோட, பத்து சரஸ்வதி இருக்காங்க...எனக்கு ஒரு வீணை ஒரு சரஸ்வதி போதும்."என்று சொன்னேன்.
அதன்பின் நான் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு "ராசா நான் லைப்ரரி மாதிரி உனக்கு என்ன வேணுமோ அத எடுத்துக்கோ"என்று கூறி மிகச்சிறந்த முறையில் நடித்துக்கொடுத்தார்.
படம் முடிந்து அவருக்கு படத்தை போட்டுக்காட்டினேன்.முழுப்படத்தையும் ரசித்து பார்த்து விட்டு"டேய் ராசா...நீ கேமரா எங்க வச்ச...ஏன் வச்ச...எதுக்கு வச்சேன்னு அப்போ தெரியலே...படம் பார்த்தப்பிறகுதான் தெரியுதுடா,கை,கால் எல்லாம், எதுக்கு காட்றேன்னு,It's world classic film. கடவுள் உனக்கு நீண்ட ஆயுளைக்கொடுப்பான்"என்றார்.
"எனக்கு இப்படியொரு படத்தை கொடுத்ததுக்கு வாழ்க்கை பூரா உனக்கு நன்றி சொல்றேன்",என்று சொன்னார்.
"இதைக்காட்டிலும் எனக்கு என்ன பாராட்டு வேணும்.ஆஸ்கர் விருதே கொடுத்திருந்தாலும் சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்".
அந்த மாபெரும் கலைஞனுக்கான மரியாதையை இந்திய அளவிலும் உலகளவிலும் தரப்படவில்லை என்பது எனக்கொரு வருத்தம்.
-இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள்,முனைவர் மருதுமோகன் எழுதிய 'சிவாஜிகணேசன்"நூலிலிருந்து.
நடிகர்திலகத்தின் நடிப்பு காட்டாற்று வெள்ளம் மாதிரி அதை அணைபோட்டு தடுத்து ஆண்டவர்கள் சில இயக்குநர்கள் மட்டுமே.
இயக்குநர் ஸ்ரீதர்,A.பீம்சிங்,B.R.பந்துலு,தாதாமிராஸி,A.P.நாகராஜன்,பாரதிராஜா போன்ற இயக்குநர்கள் மாதிரி அவருக்கு தொடர்ந்து கிடைத்திருந்தால் பல சிறந்த படங்கள் தமிழ்சினிமாவிற்கு கிடைத்திருக்கும்.
மலையாள நடிகர் ஒருவர் உலகநாயகன் கமல் அவர்களிடம் இப்படி சொன்னாராம்"சிங்கத்திற்கு தயிர் சாதம் போட்டே சாகடித்து விட்டீர்கள்",என்று.
நூறுசதவீதம் உண்மைதானே.
நடிகர்திலகத்தின் 99-வது பிறந்தநாள் இன்று!
சே மணிசேகரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக