வெ.இறையன்புவின் 'இலக்கியத்தில் மேலாண்மை' மதிப்புரை: கோ.பத்மாவதி
இலக்கியத்தில் மேலாண்மை நூலாசிரியர்: வெ.இறையன்பு மதிப்புரை: கோ.பத்மாவதி akshyaakshya85@gmail.com
பக்கங்கள்: 92 விலை:ரூ.80 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 050 தொடர்பு எண்: 044-26251968, 26258410, 48601884 .
மேனாள் தலைமைச் செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற இப் புத்தகத்தின் அருமையை உணர்ந்து மேல்நிலை மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் தமிழ்நாடு அரசு இணைத்துள்ளது மிகவும் பாராட்டிற்குரியது. இந்த புத்தகத்தில் 15 தலைப்புகளில் மிகவும் அருமையான கருத்து செறிவுடன் வியக்கும் வகையில் படைத்துள்ளார்
அறிவும், அறிவுரையும் வழங்கும் ஆசான் திரு.வெ.இறையன்பு அவர்கள். உலகப் புகழ் பேச்சாளராகத் திகழும் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் வெற்றிப் பயணத்திற்கான வெற்றியின் விதை அவரின் பேச்சில் மிளிரும் இலக்கிய நடையே காரணம் ஆகும். ஒரு நிலத்தின் பாதுகாப்பு வளையம் வரப்பு. அவ்வகையில் மொழிக்கு வரப்பு போன்றது இலக்கணம். அவ்வாறாக எதுகை, மோனையுடனும், இலக்கண வரம்பிற்குட்பட்டும் இலக்கியப்படைப்புகளைப் படைத்து வரலாறு படைத்து வரும் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களுக்கு வணக்கங்கள், நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்
. காலத்தைக் காட்டும் கண்ணாடியாகிய இலக்கியத்தை அழகுபடுத்திப் பார்ப்பதில் அறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும் அதிக விருப்பமுண்டு. அந்த வகையில்'இலக்கியத்தில் மேலாண்மை' என்னும் இந்தப் அழகியப் புத்தகத்தைப் படைத்துள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். 'மனித இனம் தொடங்கியபோதே மேலாண்மையும் துளிர்க்க ஆரம்பித்தது' என்ற மிகப் பெரிய உண்மையோடு புத்தகத்தை ஆரம்பித்து ஒரு நிறுவனத்தை, வீட்டை,நாட்டை மேலாண்மை செய்யும் நிலையில் இருக்கும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள்.
'இன்சொல் விளைநிலமாய் ஈதலே வித்தாக வன்சொற் களைக்கொட்டு வாய்மை எருவூட்டி அன்புநீர்ப் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்' அதாவது இனிய சொற்களை விளைநிலமாகக் கொண்டு, பிறருக்குக் கொடுப்பதை விதையாக ஊன்றி, கடுஞ்சொற்கள் என்னும் களையை நீக்கி, உண்மையை எருவாக இட்டு, அன்பை நீராகப் பாய்ச்சி, அறம் என்னும் பயிரை இளமைப் பருவத்திலே செய்து வளர்க்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்தும் அறநெறிச்சாரம் செய்யுளை நூலாசிரியர் கூறி மேலாளர்களும், நிர்வாகிகளும் தம்மிடம் பணி புரிபவர்களிடம் பணிகளை எவ்வாறு பெறலாம் என்பதை மிக அருமையாக உணர்த்தியுள்ளார்.
மேலாண்மை என்பது படித்து அறிவதோடு சிறு குழந்தை முதலே அவர்களுக்கு குடும்பத்தில் பொறுப்புகளையும், கடமைகளையும் கற்றுத் தருவதில் தொடங்குகிறது என்பதே உண்மையாகும். 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற புத்தகத்தில் 'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்ற புறநானூற்றுப் பாடலை முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் பதிவிட்டு நாட்டை ஆளும் அரசன் நீர் நிலைகளை பாதுகாப்பதின் அவசியத்தை அருமையாக உணர்த்தியுள்ளார். 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற இப்பத்தகத்தின் 22 ஆம் பக்கத்தில் 'கட்டுமானம் என்பது பலவித கணித நுட்பங்களையும், மேலாண்மைத் தத்துவங்களையும் உள்ளடக்கியது' என்ற மிகப்பெரிய உண்மையை ஊருக்கு உரைத்துள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். சாதாரணமாக வீடு கட்டும்போது காண் பறிப்பதிலும், கலவை போடுவதிலும், கம்பி கட்டுவதிலும், கான்கிரீட் போடுவதிலும், பெயிண்ட் கலப்பதிலும் இது போன்ற பல நடவடிக்கைகளின் கணித நுட்பங்களையும், பணியாளர்களை மேலாண்மை செய்தலையும் மட்டுமே அனைவரும் அறிவர். ஆனால் முதுமுனைவர் அவர்களோ ஒரு கோயில் கட்டும் கலைநுட்பத்தில் ஒரு மேலாளராக அருகில் நின்று அருமையாக நிர்வாக நடவடிக்கைகளை அருதியிட்டுக் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார். '
இலக்கியத்தில் மேலாண்மை' என்ற இந்தப் புத்தகத்தில் கலீல் கிப்ரான், ஷேக்ஸ்பியர், லாவோட்சு, திருவள்ளுவர், பவணந்தி முனிவர், முனைப்பாடியார் போன்றவர்களோடும், கம்ப இராமாயணம், புறநானூறு, அகனாநூறு, நற்றிணை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்று பலதரப்பட்ட இலக்கிய வளங்களையும் எடுத்தாண்டுள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. (குறள்.382) என்ற குறட்பாவை முன்னாள் தலைமைச் செயலாளர் எடுத்துக் கூறி, துணிவு, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருப்பவனே தலைமைப் பண்பு உடையவனாக இருக்க முடியும் என்பதை திருவள்ளுவர் வழி நின்று விளக்கியுள்ளார
. 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற இந்தப் புத்தகத்தில் 'முயற்சி செய்; முடிச்சு அவிழும்', உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், மனதில் உள்ளது கைகளின் திறன்' போன்ற தலைப்புகளில் பல கதைகளை கூறி வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டியுள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். 'இலக்கியத்தில் மேலாண்மை' என்ற இந்த புத்தகம் மனித மனத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் பல மேலாண்மைச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகவே வீட்டிற்கு ஒரு புத்தகம் வாங்கி குழந்தைகளையும், மாணவர்களையும் படிக்க வைத்தால் சிறந்ததொரு சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்பதில் ஐயமே இல்லை.
உரையிலும், இலக்கியத்திலும் சிறந்த இலக்கண, இலக்கிய நடையைப் பின்பற்றும் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அடுத்த இலக்கியப் படைப்பை தமிழ் கூறும் நல்லுலகு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆகச் சிறந்த அருமையான 'இலக்கியத்தில் மேலாண்மை' இயற்றிய மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.
.


கருத்துகள்
கருத்துரையிடுக