கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம் !
நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி!
மதிப்புரை: கோ.பத்மாவதி!
கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம் நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி மதிப்புரை: கோ.பத்மாவதி
பக்கங்கள்: 68 விலை: ரூ.70/- வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. தொடர்பு எண்:044-24342810/24310769
'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற நூலானது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் 9 புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதி அதை புத்தகமாக கவிஞர் இரா.இரவி அவர்கள் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் நகைச்சுவையோடு நம் குடும்ப நபர் ஒருவர் பேசுவதைப் போல பார்வையாளர்களை உடன் அழைத்துச் சென்று பேசுவதில் வல்லவர். மனதோடு கலந்துரையாடுவார் என்பதே உண்மையாகும். அவர் இலக்கியங்கள் பற்றி பேசும்போது அது தொடர்பாக தனக்கு துணையாக நின்ற புத்தகத்தையும், நூலாசிரியரையும் அழகாக குறிப்பிடுவார்.
ஆய்வு மாணவர்களுக்கு ஆகச் சிறந்த ஆய்வாளர்களை அறிமுகம் செய்த பெருமை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களைச் சாரும். 'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற இந்த நூலில் 'உன்னோடு போட்டிப் போடு' என்ற புத்தகத்திற்கு விமர்சனமாக, 'வேறு யாருடனும் போட்டிப் போட வேண்டாம். உன்னுடன் போட்டிப் போடு. உனது முந்தையசாதனைகளை நீயே முறியடித்து முன்னேறு என்ற விதமாக தன்முன்னேற்றம் விதைக்கும் விதமான கட்டுரைகள்' என்று வாழ்க்கையின் வெற்றி இரகசியத்தை முனைவர் கு.ஞானசம்பந்தன் வரிகளை மேற்கோள் காட்டியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
வெற்றி இரகசியங்களை யாரும் வெளியிட விரும்பாத இன்றைய சூழலில் கவிஞர் இரா.இரவி அவர்கள் 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் உயரிய நோக்கில் உரைத்துள்ளார். 'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற இந்த புத்தகத்தில் 'இலக்கியச் சாரல்' என்ற புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, 'இலக்கணம், இலக்கியம், ஆய்வு, ஆன்மீகம், தமிழர் மரபு, வாழ்வுக்கு வழிகாட்டுதல், வரலாறு' போன்றவற்றை சுவையாகவும், எளிமையாகவும் அமைத்துள்ளாதாக இரா.இரவி அவர்கள் பதிவிட்டுள்ளார். 30 வருடங்களுக்கும் மேலாக தமிழாசிரியராக/பேராசரியராகப் பணியாற்றிய கு.ஞானசம்பந்தன் அவர்கள் மாணவர்களின் மனம் அறிந்து, மாணவர்களுக்கு புரியும் வகையில் 'இலக்கியச் சாரல்' புத்தகத்தைப் படைத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது
. 'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற நூலின் 32 ஆம் பக்கத்தில் 'கடவுளிடம் பக்தர்கள் எப்படி வேண்டினார்கள் என்பதை, 'வேண்டத்தக்கது அறிவாய் நீ' 'வேண்ட முழுவதும் தருவோய் நீ' (திருவாசகம் மாணிக்கவாசகர்) 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' (இராமலிங்க வள்ளலார்) இவ்வாறாக பல உயரியவர்களின் வேண்டுதல்களை பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். இன்றைய இளைய தலைமுறையினரின் வேண்டுதல்களைக் கேட்டால் சாமியே குழம்பிவிடுவார். 'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற நூலை படிப்பதால் முனைவரின் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது என்றால் மிகையில்லை.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய ‘ஜெயிக்கப் போவது நீ தான்!’ என்ற புத்தகத்தில் என்ன வளம் இல்லை நம் இலக்கியத்தில்? ஏன் கையை ஏந்த வேண்டும் பிற இலக்கியத்தில்? என்று சொல்லும் விதமாகத் தன்னம்பிக்கை என்றால் சிலர் அமெரிக்காவில் அவரைப் பார், ஜெர்மனியில் இவரைப் பார் என்று எழுதிவரும் இக்காலத்தில் தன்னம்பிக்கை வேண்டுமானால் திருக்குறளைப் படி. அவ்வையின் ஆத்திச்சூடி படி. சங்க இலக்கியம் படி என்று கூறும் விதமாக நூல் உள்ளது’ (கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம், ப.25) என்று கவிஞர் இரா.இரவி அவர்கள் குறிப்பிட்டுள்ளதிலிருந்து தன்னம்பிக்கையை ஊட்டுவதோடு தமிழ் இலக்கிய வளங்களையும் எடுத்துரைக்கும் நூல் என்பதை வாசகர்களுக்குப் புரிய வைத்துள்ளார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் 'எந்தையும் தாயும்!' என்ற புத்தகத்தில் அவரின் தந்தையாரின் வாழ்க்கையை வரலாறாகப் படைத்து தந்தையாருக்கு மகுடம் சூட்டியுள்ளாதாக கவிஞர் இரா.இரவி அவர்கள் பதிவிட்டுள்ளார். னது கிராமத்தில் சொத்தாக சொந்த மண் ஆயிரம் இருந்தாலும் இருந்தாலும் கல்வி கற்கும் ஆர்வத்தோடு மதுரையில் பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்து படித்ததை பதிவிட்டுள்ளார். இன்றும் சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் பலரும் எவ்வளவு பணம் கட்டினாலும் விடுதி சாப்பாட்டை விட கோவில் பிரசாதம் உடல்நலத்துக்கு ஊறு விளைவிப்பதில்லை என்றும், உணவகங்களில் விலை மிகவும் அதிகம் என்பதையும் கூறுவதைக் கேட்க முடிகின்றது. 'மேடைப் பயணங்கள்' என்ற புத்தகத்திற்கான விமர்சனத்தில் 'மேடையில் பேசுகின்ற பெருமக்கள் சில உயர்ந்த குறிக்கோள்களை உடையவர்களாக இருக்க வேண்டும். பேசுகின்ற போது கீழான சொற்களையோ, வேறு பொருள் தரும்படியான வார்த்தைகளையோ, பிறர் மனம் புண்படும்படியான செய்திகளையோ ஒருபோதும் கூறக் கூடாது என எங்கள் பேராசிரியர் கூறிக் கொண்டே இருப்பார் என்று நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
இந்த வைர வரிகளை ஒவ்வொரு பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ (கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம், ப.20) என்று கவிஞர் இரா.இரவி குறிப்பிட்டிருப்பதிலிருந்து மேடைப் பேச்சாளராக உருவாக வேண்டும் என்ற உத்வேகம் கொண்டவர்கள் முதலில் அறிய வேண்டிய மேடை நாகரிகத்தை உணர்த்தியுள்ளார். 'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற இந்தப் புத்தகத்தை ஆய்வு மாணவர்கள் படிக்கும் போது பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களைப் பற்றியும் அவரது நூல்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. தமிழ்ச் செம்மல் கவிஞர் இரா இரவி அவர்கள் தமிழன்னையின் தகைசாலராக விளங்கும் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு 'பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற புத்தகம் மூலமாக மகுடம் சூட்டியமைக்கு வாழ்த்துகள், நன்றிகள், பாராட்டுகள்.
--
.

கருத்துகள்
கருத்துரையிடுக