ஹலோ பண்பலை வானொலி நிகழ்ச்சி கேட்டுவிட்ட வடித்த கவிதை கவிதாஞ்சலி / சித்ராஞ்சலி கவியாக்கம் முனைவர் பேராசிரியர் ச. சந்திரா
ஹலோ பண்பலை வானொலி நிகழ்ச்சி
கேட்டுவிட்ட வடித்த கவிதை
கவிதாஞ்சலி / சித்ராஞ்சலி
கவியாக்கம் முனைவர் பேராசிரியர் ச. சந்திரா
******
எழுதுகோலை எடுத்து மைத்துளிகளை நிரப்பினேன்
என் கண்ணீர்த்துளிகளோடு நிரம்பியது எழுதுகோல்!
உள்ளக்குமுறலுடன் உதித்தது சித்ராஞ்சலி
பிறந்தநாள் அன்றே மறைந்த பிரபலங்கள் சிலருண்டு!
அந்த சிலரின் பட்டியலில் என் சித்ராவும் இணைந்தாளோ?
ஏழையாய்ப் பிறந்தாலும் இளையவளாய்ப் பிறக்காதே!
இம்மொழியைப் பொய்மொழியாக்கினாள் என் சித்ரா!
ஆம்! அன்னை தந்தை அதிக செல்லம் உன்னிடம்!
எழுவரில் இளையவளாய்ப் பிறந்த சித்ராவே!
அக்காமார்களோ அளவுக்கு மீறிய செல்லம்!
அண்ணன்மார்களோ தங்கத் தாம்பாளத்தில் ஏந்தினர் உன்னை
வசதி வாய்ப்புக்கள் இருந்தும் சித்ராவே! உன் அகராதியில்
ஆடம்பரம் ஏது? அலட்டல் ஏது? அதிகாரத் தொனி ஏது?
நடையில் வேகம்! நடத்தையில் விவேகம்! கர்வம்
எனும் சொல்லுக்கு உனக்கு அர்த்தம் தான் தெரியுமா?
அரவணைக்கும் கணவர்! அன்புச் செல்வங்கள் இரண்டு!
பெருந்தன்மையின் பெட்டகம் நீ! சைவக்காரி நீ!
முகங்கோணாமல் சமைத்து தருவாய் அசைவம் எங்களுக்கு!
பக்குவமாய பலகாரம் செய்வதில் உனக்கு நிகர் நீயே!
பாசிப்பயிறோடு பாசத்தையும் கலந்து உருட்டுவாயே லட்டு!
பாரபட்சமின்றி பகிர்வாயே புகுந்த வீடு - பிறந்த வீடு என்று இருவர்க்கும் சரிசமமாய்!
மறக்கத்தான் முடியுமோ? உன் கலகலப்பையும் பரபரப்பையும்
உபசரிப்பில் உனக்கு இணை யாரோ? இறுதிக்கட்டத்தில்
உபசரிக்கிறேன் என்ற பெயரில் உயிரை விட்டவளும் நீ தானே!
அன்று மலர்ந்த மலர்களை அன்றே சரமாய்க் கட்டி
அழகு பார்ப்பாயே அம்மனுக்கு!
வருடந்தோறும் வரலெட்சுமி நோன்பு இருப்பாயே!
இத்துணை சீக்கிரம் சுமங்கலியாய் எங்களை விட்டுச் செல்ல எப்படி மனது வந்தது!
இம்மையில் நன்மை தருவார் கோவில் சென்று சென்று
மறுமைக்கு இப்படி வழி தேடுவாய் என
எண்ணித்தான் பார்த்தோமோ?
நவக்கிரகத்தை நடை பிசகாமல் வலம் வருவாயே!
கிரிவலம் வருவது உனக்கு பிரியமான ஒன்றல்லவா!
எட்டுத்திக்கும் சுற்றி இறைவனைத் துதிப்பாயே!
கோயில் கோயிலாகச் சென்ற நீ
அவசர அவசரமாய் கடமைகள் முடித்து காசிக்கும்
இந்த சிறு வயதிலேயே சென்று, இன்று என்ன ஆயிற்று?
கண்ணாடி சட்டத்திற்குள் முன்அறையில் காட்சியளிக்கிறாயே!
ஆயிரம் பேர் சூழ திருமணம் முடித்தோம் – நாத்திக வழியில்
நல்லவர் நால்வர் சூழ அறுபதாம் கல்யாணம் முடித்தோம்!
உன் விருப்பத்திற்குத் தான் ஏதேனும் தடை விதித்தோமோ!
திருமண நாளை வருடந்தோறும் கொண்டாடுவாய்!
திருப்பரங்குன்றத்தில் நன்கொடை வழங்குவாய்! நல்ல நாட்களில்
எளிமையின் சொபம் நீ சித்ரா, நீ அடக்கத்தின் மறுஉருவம்
என் ஆருயிர்த் துணைவியே! உன்னில் பிடிவாதம் எது?
மறுப்பு ஏது? வெறுப்பு ஏது? பொழுதை வீணாகப் போக்குவாயா?
அதுவும் இல்லை, அதட்டலும் இல்லை,
நற்குணங்களின் நாயகியே, என்ன அவரசம் உனக்கு?
அடுத்த வாரிசைக் கூட கண்ணில் காணாமல்
உதிரத் துளிகள் சொட்டச் சொட்ட விட்டுப் போனாயே!
108 முறை கடவுளுக்கு மந்திரம் உச்சரித்தாயே! தினமும்
இறுதியாக 108ல் ஏறி எங்களைப் பரிதவிக்க விட்டாயே!
அரசு மருத்துவமனையில் அடைக்கலமான நீ!
ஐந்தே நாட்களில் பஞ்சாகப் பறந்தாயே! என் அருந்துணையே!
பிரதோஷத்தில் மறைந்தால் பிறவி கிடையாது
என்றறிந்து நன்னாள் தேர்ந்தெடுத்து பிரிந்தாயே!
பிள்ளைகள் பெயரைச் சுருக்கி தினந்தினம்
செல்லமாய் அழைப்பாயே! இருவரையும் இருவர்
கரங்களில் ஒப்படைத்து விட்டு காற்றோடு கலந்தாயே!
சித்ரா! உன்னில் நான்! என்னில் நீயென வாழ்ந்தோமே!
இன்று அணுஅணுவாய்ச் சிதைந்து உறைந்து நிற்கிறேன்!
சித்ரா! நீ இவ்வுலகம் விட்டு அவ்வுலகம் சென்றாய்!
உன் உன்னத குணங்களின் வார்ப்பாய் அடுத்த
வாரிசுகள் நம் குடும்பத்தில் உருவாகட்டும்!
நீ எங்கிருந்தாலும் உன் பேர் சொல்லும்படி குடும்பம் வாழும்
நம்பிக்கையில் நான் நாட்களை நகர்த்துகின்றேன் கண்ணீருடன்!

கருத்துகள்
கருத்துரையிடுக