மாண்புமிகு மனைவி.. நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை திரு .சிவக்குமார் ,பொறியாளர் ,சமூக ஆர்வலர் .திருமங்கலம் .

மாண்புமிகு மனைவி.. நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை திரு .சிவக்குமார் ,பொறியாளர் ,சமூக ஆர்வலர் .திருமங்கலம் . வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com . என்னவள் என பெருமையுடன் கூறும் மனைவியோடு திருமண நாளிலிருந்து இறுதிவரை தொடர்ந்த கருத்து வேறுபாடுகளோடு காதலித்துக்கொண்டே வாழ்ந்ததை குறிப்பிடுகிறார் கவிஞர். மறைவு மனதை வாட்டுகிறது என்கிற உணர்வுடன், ஒளி வீசி வாழ்வதன் வெளிப்பாடே இந்த நூல். மாதா, பிதா, குரு என்கிற வரிசையில் பேரறிஞர் இறையன்பு அவர்களை தம் வாழ்நாள் குருவாக எண்ணி அவரைப் பற்றி பதினாறு செய்திகள் குறிப்பிட்டு வணங்கி இந்நூலை தொடங்குகிறார். அசைவ உணவு பழக்கத்துடன், இறைவன் மறுப்பு கொள்கைகளுடன் வளர்ந்த ஆத்மாவும், சைவ உணவு பழக்கத்துடன், மிகுந்த இறைசக்தியுடன் வளர்ந்த ஒரு ஆத்மாவும், கணவன் மனைவியாக 34 ஆண்டுகள், ஆரம்ப காலத்தில் இருந்து மேன்மையான குணங்களாகிய பொறுமை, சகிப்புத்தன்மை, ஏற்றுக் கொள்ளுதல், ஒத்துழைப்பு, விட்டுக் கொடுத்தல் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய பயிற்சியை அறியாமலேயே வெற்றிகரமாக மேற்கொண்டு மேன்மை நிலையில் உயர்ந்தவர்களின் வரலாறே. மாண்புகள் மிக்கவள் மனைவி, தன்னலமற்ற தியாகத்தின் திருவுருவம், தாய்க்கு அடுத்த தாய் என மனைவிக்கு புகழாரம் சூட்டுகிறார். ஐந்து தங்கைகளுடன் வளர்ந்த மூத்த சகோதரிக்கு மகனாய் பிறந்து அனைவருக்கும் செல்ல குட்டியாய் நன்கு வளர்ந்த கவிஞரும், நான்கு சகோதரர்கள், மூன்று அக்காக்களுடன் கடை குட்டியாய் பிறந்து வளர்ந்த தன் மனைவியும் அளவற்ற பாசம் நேசமும் பகிர்ந்து வாழ்ந்துள்ளார்கள் என்பது ஏற்புடையதே. சராசரி மனிதனுக்குரிய "தான்" எனும் ஆணாதிக்க எண்ணங்களுக்கு இடையே, ஊடல் வராமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தது, கோயிலுக்கு அழைத்துச் சென்று வணங்கி வரும் வரை வெளியில் காத்திருந்து அழைத்து வந்தது, பண்டிகை நாட்களின் முகத்தில் வேறுபாடு காட்டாமல் மனைவி பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடியது, ஒவ்வொரு திருமண நாளன்று மனைவி விருப்பத்திற்காக பட்டாடை உடுத்தி கோவிலுக்கு சென்று வந்தது என அனைத்து ஒத்துழைப்பும் கணவனின் தியாக உணர்வுகள் என்றே நாம் கருத வேண்டும். தன் உறவினர்களுக்கு சமமாக கணவன் உறவினர்களிடமும் உரிய மரியாதையுடன் பழகியது. தான் உண்ணா விட்டாலும் கணவனுக்கு பிடித்த அசைவ உணவுகளை ருசியாக சமைத்துக் கொடுத்தது, கொள்கை வேறுபாடாக மனதில் கொண்டிருக்கும் கணவனிடம் பரிவாய் பேசி, பிள்ளைகள் மகிழ்ச்சிக்காக அவர்களுடன் மட்டும் உறவினர்கள் யாரும் இல்லாமல் கணவருடன் 60-ஆம் கல்யாணம் நடத்தி சிறப்பு செய்தது. கணவரின் முற்போக்கு கொள்கைகளை, சொற்பொழிவு எழுத்து மூலம் மக்களுக்கு அவர் செய்யும் சேவைகளை உற்சாகமாகப்படுத்தியது என எண்ணற்ற வகையில் தன் தியாக உணர்வுகளில் மேலோங்கி வாழ்ந்து வந்தார் என்றால் அது மிகை அல்ல. இறை சக்தியில் வாழ்ந்து வந்த என் மனைவியை இறைவன் மரணத்திலிருந்து காக்கவில்லை என நினைத்து கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து வந்த எனக்கு கடவுள் இல்லவே இல்லை என்பது உறுதியா க்கப்படுகிறது என கூறும் கவிஞர் இன்றென்றும் கூறுகிறார் ...மரணம் உறுதிப்படுத்தப்படும் முன் குருவாக நினைத்து இருக்கும் பேரறிஞர் இறையன்பு கூறியதையும் நினைவில் கொள்கிறார். "ரவி எதற்கும் தயாராக இருங்கள்,, மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்." என்பதுதான். அதன் பொருள் மனிதன் பிறந்த பொழுதிலிருந்து நூறு வயது என்றாலும் இன்ன வயதில் மரணம் வராது என்பதை கூற முடியாது வாழ்வில் நம்மை சுற்றிலும் மரணச் செய்தி வருவதை கேட்போம். செய்திகளில் படிப்போம் , ஆனால் அதில் நாம் விதிவிலக்கு அல்ல என சிந்திக்க மறந்து விடுகிறோம். ஏனெனில் அவைகளை நாம் காட்சியை பார்க்கிறோம். நம் குடும்பத்தில் நடக்கும் போது சாட்சியாய் பார்ப்பதால் தாங்வோண்ணா வேதனைப் படுகிறோம் ஆகையால் அனைத்தையும் சிந்தித்து "மனதை பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்" எனக் கூறியிருப்பார் என கருதுகிறேன். எந்த சூழலிலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் மனதை ஈடுபடுத்தி அதற்கானவற்றில் கவனம் செலுத்தும் போது வேதனை வலி தெரியாது என்பதால், "எதற்கும் தயாராய் இருங்கள்" என கூறியிருப்பார் என நம்புகிறேன். அவரவர் வாழ்வு, வாழும்போது அனுபவங்கள் மூலம் பெறுகிற ஞானம் , மேன்மை குணங்களை முழுமையாக வெளிப்படுத்தி வாழவதற்கே.. அந்தவகையில் தன் ஆத்ம பிரயாணத்தில் இப்பிறவியின் பயனை தன் வாழ்வின் மூலம் அடைந்ததினால் , அன்னை சித்ராவின் ஆத்மா, உடலை பிரிந்து, வேறுபட்ட சூழலில் வாழும் பயிற்சிகளுடன் ஒளிவீசி வாழ, அன்பு கணவர் கவிஞருக்கு சக்தி கொடுத்து சென்றுள்ளது. தமிழ் உலகச் சான்றோர்கள் அனைவரும் நேரில் வந்து ஆறுதல் கூறியது கவிஞர் தமிழுக்கு செய்த தொண்டின் பிரதிபலிப்பாகும். அறிஞர்கள் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும் என்றபோது இறையன்பு கருவூலம், ஞானசம்பந்தன் கருவூலம் என்கிற நூல்கள் இரண்டையும் வெளியிடுவதில் காட்டிய ஆர்வம் கவிஞரின் தமிழ் வளர்க்கும் தொண்டின் மகிமையை காட்டுகிறது. மேலும் மாண்புமிகு மனைவி என்னும் நூலில் மனைவியை மதித்து பாராட்டி வாழ வேண்டும் என்றும், மனைவி சொல் மந்திரங்கள் என்றும், புகழ் வணக்க கவிதைகளுடன், தமிழ் உலகில் கலை, இசை, திரைப்பட வல்லுநர்களின் சிறப்பு, கவிஞரின் தொடர்பு பற்றியும் கூறி " மனைவியை நேசிப்போம் அவளும் ஒரு தாய் தான்" எனக் கூறி நூலை சிறப்பு செய்து முடிக்கிறார் நம் கவிஞர்

கருத்துகள்