கவிஞர் இரா.இரவியின் 'இறையன்பு கருவூலம்' மதிப்புரை: கோ.பத்மாவதி இறையன்பு கருவூலம் ! நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி! மதிப்புரை: கோ.பத்மாவதி

கவிஞர் இரா.இரவியின் 'இறையன்பு கருவூலம்' மதிப்புரை: கோ.பத்மாவதி இறையன்பு கருவூலம் ! நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி! மதிப்புரை: கோ.பத்மாவதி akshyaakshya85@gmail.com பக்கங்கள்:152 விலை: ரூ.110/- வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017. தொடர்பு எண்: 044-24342810/24310769 உலகப் புகழ் நம்பிக்கை உரையாற்றும் பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய வரலாற்றில் 200 மேற்பட்ட புத்தகங்களை எழுதி வரலாறு படைத்துள்ள முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் 16 புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதி கவிஞர் இரா.இரவி அவர்கள் மிக அருமையாக 'இறையன்பு கருவூலம்' என பெயர் சூட்டி, வாசகர்களுக்கு அருமையான புத்தகத்தை வெளியிட்டமைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள். கவிஞர் இரா.இரவி அவர்கள் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் எழுத்துகளோடு இனிமையாக பயணம் மேற்கொண்டு அனுபவித்து 'இறையன்பு கருவூலம்' படைத்துள்ளார் . 'இறையன்பு கருவூலம்' என்ற இந்தப் புத்தகத்தில் இளம் தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரம் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய 'மூளைக்குள் சுற்றுலா' என்ற புத்தகம் பற்றி கவிஞர் இரா.இரவி கூறும்போது, 'மருத்துவம் பயின்ற மருத்துவரால் கூட இப்படி நுட்பமாக எழுத முடியாது. மருத்துவம் பயிலாத முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் உடல் குறித்து, மூளை குறித்து, நரம்பு குறித்து, எலும்பு குறித்து மிக விரிவாக எழுதி உள்ளார்' என்ற பேருண்மையைக் கூறியுள்ளார். மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் காரணமாகிய மூளையைப் பற்றி அறிவியல் நோக்குடனும், பேரறிஞரின் கருத்துகளோடும், வரலாற்றுப் பார்வையுடனும், மற்ற உயிரினங்களின் மூளைகளின் செயல்பாடுகள் குறித்தும் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் தனக்கே உரிய தனி நடையில் மிக அருமையாகப் படைத்துள்ளதை எடுத்துரைத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். முன்னாள் தலைமைச் செயலாளர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் தலைமைப் பண்பு, ஆளுமைத் தன்மை பற்றி எழுதுவது போல யாராலும் எழுத முடியாது என்பதை 'வையத் தலைமை கொள்!', 'முடிவு எடுத்தல்' 'பணிப் பண்பாடு' போன்ற பல நூல்களால் நன்கு அறியலாம். இந்நூல்களைப் பற்றி மிக விரிவாக வாசகர்களுக்கு தெரிவித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பரிசாகக் கொடுக்க வேண்டிய மிக முக்கியமான நூல்கள் இவை. இலக்கை நிர்ணயித்தல், திட்டமிடுதல், இலக்கை நோக்கிப் பயணிக்கையில் சந்திக்கும் பிரச்சனைகள், அவற்றை களைதல், நம்மை சுற்றி இருப்பவர்களை நன்கு சிந்திக்க வைத்து செயல்பட வைத்தல், பண மேலாண்மை போன்றவை நிர்வாகத்திற்கு மட்டுமல்ல தனிமனித வாழ்விற்கும் மிகவும் அவசியமானவையாகும். இவற்றைப் பற்றியெல்லாம் மிக அருமையாக பேசுபவை தரணிப் புகழ் வெ.இறையன்பு ஐயாவின் புத்தகங்கள் என்பதை கவிஞர் இரா.இரவி அவர்கள் உணர்த்தியுள்ளார். 'உலகை உலுக்கிய வாசகங்கள்' என்ற முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் புத்தகமானது, 'தகவல் களஞ்சியமாக உள்ளது. பல்வேறு தகவல்களை ஒரே நூலில் அறிந்து கொள்ள முடிகின்றது. பத்து நூல்கள் படித்த மனநிறைவு ஒரு நூலில் கிடைக்கின்றது, வாசகர்களுக்குத் தகவல் விருந்தாக நூல் உள்ளது' என்ற உண்மையை ஊருக்கு உரைத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். பல மேநாட்டு அறிஞர்களையும் அவர்களின் கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் என்பதைப் பதிவிட்டுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். மேல் நாட்டு அறிஞர்களை அறிமுகம் செய்வதில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் வல்லவர். அதற்கு அவருடைய வாசிப்புப் பழக்கமே காரணமாகும். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் புத்தகங்களைத் தொடர்ந்து படித்தால், படைப்பாற்றல் திறன் சிறிது சிறிதாக நம்முள் நுழைவதை நாமே உணரலாம் என்பதே உண்மையாகும். 'வைகை மீன்கள்' என்ற புத்தகத்தில் கவிதை வடிவில் மிக அருமையான கதையைப் படைத்துள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். கதைக் காப்பியம் படைப்பவர்கள் தற்காலத்தில் மிகவும் குறைவு. ஏனெனில் மொழி வளம் அதிகமாக இருந்தால் மட்டுமே படைக்க இயலும். அதுவும் எளிய மொழிநடையில் 'வைகை மீன்கள்' என்ற கதைக் காப்பியத்தைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்த முதுமுனைவரை வெ.இறையன்பு அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள். கவிஞர் வெ.இறையன்பு ஐயாவின் கவிதைப் புத்தகங்களை விரும்பும் இலக்கியவாதிகள் பலரும் இருக்கின்றனர். ஒரு எழுத்தாளருக்கு வெற்றி புத்தகத்தை வெளியிடுவதில் இல்லை. அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் வாசகரின் திருப்தியில் உள்ளது. அந்த வகையில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதியப் புத்தகங்கள் வாசகர்களுக்கு முழு திருப்தியையும், வாழ்க்கையின் வெற்றி வழிகளையும் உணர்த்துவதால் தான் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குவது என்றால் உடனே நினைவிற்கு வருவது முதுமுனைவர் வெ.இறையன்பு ஐயாவின் புத்தகங்கள் தான். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய 'அவ்வுலகம்' என்னும் நாவல், 'மரணம் பற்றிய பயம் போக்கும் அற்புத நாவல். இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் ஒரு நாள் இறப்பது உறுதி' என்று எடுத்துரைப்பாதாகவும், 'குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே முக்கியம்' என்பதை உணர்த்துவதாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கூறியுள்ளார். மூட நம்பிக்கைகளிலிருந்து வெளி வருவதற்காகவே கல்வி கற்பது என்பதை நன்கு உணர வேண்டும். 'பேய் என்பது உண்மை அல்ல. வதந்தி, கட்டுக்கதை என்பதை உணர்த்தியுள்ளார் ஆசிரியர்' (ப.54) என்று கவிஞர் இரா.இரவி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 'கேள்வியும் நானே! பதிலும் நானே!' என்ற கேள்வி-பதில் முறையில் அமைந்த புத்தகத்தில் 'நிழல் அனைவருக்குமே கறுப்பு என்பது சமத்துவம் தான். ஆனால் மனம் கருப்பாக இல்லாமல் வெள்ளையாக இருக்க வேண்டும். புற அழகை விட அக அழகே முக்கியம்' (ப.59) என்பது என்னை மிகவும் கவர்ந்த வரிகள். முதுமுனைவர் வெ.இறையன்புவின் 'இல்லறம் இனிக்க' என்ற புத்தகமானது இன்றைய இளைய தலைமுறை தம்பதியினர் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தமாகும் என்பதை அருதியிட்டுக் கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். குடும்ப வாழ்க்கையில் சரியான முறையில் பயணித்தால் தான் சுற்றமும், நட்பும், சமுதாயமும் மதிக்கும் என்பதை முதலில் உணர வேண்டும். தொழிலில் இலக்கை நோக்கி திட்டமிட்டு சரியாக செயல்பட வேண்டுமானால் குடும்ப நபர்களை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருந்தால் மட்டுமே முடியும் என்பதே உண்மையாகும். கட்டிடத்தின் உறுதி பயன்படுத்தும் செங்கல், சிமெண்ட், மணல் மற்றும் தொழிலாளர்களின் திறன் போன்றவற்றாலான அஸ்திவாரத்தால் அமைகின்றது. முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அடுக்கி வைக்கப் பட்ட இலக்கியப் படைப்புகளாகிய தரமான பொருட்களின் உதவியோடு அஸ்திவாரமாக வைத்து 'இறையன்பு கருவூலம்' என்னும் இனிய இல்லத்தை கட்டமைத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள் . முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து விடயங்களை பற்றியும் பல நூறு புத்தகங்களைப் படைத்துள்ளார். அவற்றை வாங்கி படித்தால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்பதில் ஐயமில்லை. விளக்கு எறிவதற்கு தூண்டுகோல் அவசியம். அதுபோல் சிறந்த தூண்டுகோலாக முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை கவிஞர் இரா.இரவி அவர்கள் 'இறையன்பு கருவூலம்' என்னும் நூலின் வாயிலாகப் புரிய வைத்தமைக்கும் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.

கருத்துகள்