படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

(‘ வாசிப்போம்- தமிழ் இலக்கியம் வளர்ப்போம் ‘ குழுவில் எழுதியது) செந்தமிழ்க் காவலர் அ. சிதம்பரநாதனார் - ம.பெ. சீனிவாசன் வெளியீடு : சந்தியா பதிப்பகம், சென்னை - 600083 மாணவர்கள் மனத்தில் தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகள் எந்நாளும் உண்டு. எழுத்தாளுமைகள் அந்நினைவுகளைப் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். நிறைய உதாரணங்கள் இருந்தாலும் உடனே நினைவுக்கு வருபவர் உ. வே. சா - தான். தன் ஆசிரியரான மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குறித்து விரிவான நூலைத் தந்திருக்கிறார். இதே பெயர் கொண்ட தெ.பெ. மீனாட்சிசுந்தரனாருக்கும் அந்தப் பெருமை வாய்த்திருக்கிறது.அவரது மாணவர்கள் அவரைப்பற்றி ' அறிவுலகக் குருதேவர் ' என்னும் நூலைக் கொண்டுவந்திருக்கிறார்கள். தற்காலத்தில் வந்த நூல்களுள் நமக்கு நினைவுக்கு வருவது எழுத்தாளர் பெருமாள்முருகனைப் பற்றி அவரது மாணவர்கள் எழுதிய ' எங்கள் ஐயா' நூலாகும். செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரநாதனார் என்னும் தமிழறிஞரைத் தமிழ் கூறும் நல்லுலகம் நினைக்கும் பொருட்டு, அவரது மாணவரும் வாழும் தமிழறிஞருமான ம.பெ.சீனிவாசன் ஐயா எழுதிய 'ஆசிரியர் நினைவுகளே' இந்நூலாகும். அ.சிதம்பரநாதனார் அவர்கள் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது ம.பெ.சீனிவாசன் ஐயா அவரிடம் கல்வி பயின்றுள்ளார். அ.சிதம்பரநாதனார் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர். சட்டம் பயின்றவர்.பன்முகத் திறம் வாய்ந்த பேரறிஞர். பேராசிரியர்கள் செ.வை.சண்முகம்,ச.மெய்யப்பன், இராம.இருசுப்பிள்ளை, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோரும், அறிஞர் அண்ணாவின் பேரியக்கத் தளபதிகளான நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோரும் அவரது பெருமைக்குரிய மாணவர்களே. முன்னோர் உரைகளை ஏற்றும் மறுத்தும் சிலப்பதிகாரக் காப்பியத்தை அ.சிதம்பரநாதனார் அவர்கள் வகுப்பறையில் கற்பிக்கும் திறத்தை நூலாசிரியர் நினைவுகூர்ந்துள்ளார். "அவருடைய வகுப்பு முன்பின் தொடர்பும் ஒப்புமையும் காட்டுவதாக இருக்கும் " என்கிறார் நூலாசிரியர். ' ஆசிரியர்கள் கவிஞர்களுடைய உணர்ச்சிகளை மாணவர்கள் பெற்று விடுமாறு தூண்டும் கடமையுடையவர்கள் ' என்ற அவரது வார்த்தைகள் தமிழிலக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டியவை. அவரது ' இளங்கோவின் இன்கவி' என்ற நூலை மட்டுமே நான் படித்திருக்கிறேன். சிலப்பதிகாரத்தைத் திறனாய்வு அடிப்படையிலேயே அதில் விளக்கி எழுதியிருப்பார். சிலப்பதிகாரத்தின் தொடக்க நிகழ்வான கோவலன் - கண்ணகி திருமணத்தைக் கூறும்போது இப்பகுதி உரையாடலாக இருந்தால் இவ்வாறு இருக்கும் ; செய்யுளாக இருந்தால் இவ்வாறு இருக்கும் ; கவிதையாக இருப்பதால் இவ்வாறு இருக்கிறது என்று இளங்கோவடிகளின் வரிகளைக் கொண்டே விளக்கியிருப்பார். " முன்னோர் விளக்கத்தில் மட்டுமன்றித் தம் காலத்து அறிஞர்களின் உரை விளக்கத்திலும் ஏற்கவியலாதவற்றைக் கண்டு தயக்கமின்றித் தம் கருத்தினைத் தெரிவித்தவர் அவர் " என்று தம் ஆசிரியரின் நேர்மைக்கு அவரது எழுத்திலிருந்தே பல சான்றுகளைக் காட்டியிருக்கிறார் ம.பெ.சீ ஐயா. அ.சிதம்பரநாதனார் அவர்கள் ஷேக்ஸ்பியரின் ' ஒத்தல்லோ' நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நவீன இலக்கியத்திலும் அவர் ஆர்வமிக்கவர் என்பதற்குச் சாகித்ய அகாதமிக்காக அவர் தொகுத்தளித்த ' சிறுகதைக் களஞ்சியமே' சான்றாகும். அவரது சிறப்புகளை ' ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று', சுட்டிக் காட்ட வேண்டிய இடங்களை ஆசிரியர் சுட்டிக் காட்டிச் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பாகும். இந்நூலைப் படிக்கும்போது ஆசிரியர் பெருமையையும் அதைக் கூறும் மாணவர் பெருமையையும் உணராமல் இருக்கமுடியாது. ஆராய்ச்சியாளர், அகராதி இயல் அறிஞர், திறனாய்வாளர், மொழியியல் அறிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாசிரியர் , வாழ்க்கை வரலாற்றாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட அ.சிதம்பரநாதனார் என்னும் பேரறிஞரைத் தமிழார்வம் கொண்டோர் தேடிக் கற்க, சந்தியா பதிப்பகத்தின் ' சிறுநூல் வரிசை' யில் வந்துள்ள இந்நூல் வழிகாட்டியாக உதவும். நன்றி. மணி மீனாட்சிசுந்தரம். கு

கருத்துகள்