நூலின் பெயர்: மாண்புமிகு மனைவி ! நூலாசிரியர்: கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை .ப. திருமலை. எழுத்தாளர்
நூலின் பெயர்: மாண்புமிகு மனைவி !
நூலாசிரியர்: கவிஞர் இரா. இரவி !
நூல் மதிப்புரை ! ப. திருமலை. எழுத்தாளர்
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com
நிஜமான தாஜ்மஹலும்.. நித்திய ஜீவனும்..
நண்பர் இரா. இரவி அவர்கள் "மாண்புமிகு மனைவி" என்ற அவரது படைப்பினை அனுப்பியிருந்தார். கையில் கிடைத்தவுடன் வாசிக்கத் துவங்கினேன். "மாண்புமிகு முதல்வர்கள்" என்ற வரலாற்று நூலினை நான் எழுதியிருக்கிறேன். 1920ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்களைப் பற்றிய விரிவான நூல் அது. அப்போதெல்லாம் "மாண்புமிகு" என்பது அதிகாரத்துக்குரிய ஒரு வார்த்தை என்றே நான் நம்பினேன். மேலும், எட்டநின்று உச்சரிக்கும் ஒரு வார்த்தைப் பிரயோகம் அது என்பது என் கணிப்பாக இருந்தது. ஆனால் இரவி அவர்களின் "மாண்புமிகு மனைவி" நூலை வாசித்து முடித்தபின்னர் "மாண்புமிகு" என்பது அன்பிற்கு உரிய வார்த்தையும்தான் என்பதோடு அது பல உள்ளடக்கங்களை, பரிணாமங்களைக் கொண்டது என்பதனை உணரமுடிந்தது. அதற்கும் மேலாக இதனைத் தமிழ்ச்செம்மல் இரவி அவர்களின் தன் வரலாற்று நூல் என்று சொல்லலாம்.
34 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தில் இணைந்திருந்த மனைவி திடீரெனச் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டதைச் சில நாட்களிலோ, சில மாதங்களிலோ, சில ஆண்டுகளிலோ மறந்துவிடமுடியாது. கடந்துவிடவும்முடியாது. ஒவ்வொரு நகர்விலும் நினைவுகளின் நிழல் தொற்றிக்கொண்டிருக்கும். அப்படித்தான் மனைவியின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து இரவி அவர்கள் வடித்ததுதான் இந்த நூல். நண்பர்களின் வேண்டுகோளையேற்றுப் படைத்திருக்கிறார். என்று சொன்னாலும் கல்சிறையில் தேக்கிவைத்த மனைவியின் மீதான அன்பு பொத்துக்கொண்டு பாய்ந்திருக்கிறது.
முழுவதுமாக வாசித்தேன். நூல் குறித்துப் பல எண்ணங்கள் மனதில் பட்டாம்பூச்சியாகப் படபடத்தன. கருத்தியல்ரீதியாக மாறுபட்ட இருவர் மனரீதியாகச் சங்கமித்துச் செம்புலப் பெயல்நீர் போல வாழ்ந்த வரலாற்றைச் சொல்கிறது இந்த நூல். கொடைக்கானலில் தேனிலவை குதிரை சவாரி, படகுப்பயணம் என மகிழ்ச்சியாகக் கொண்டாடியதாகட்டும், மாமியார்மீதான மாச்சரியம் இல்லாத அன்பாகட்டும், சமையலில் காட்டிய பக்குவமாகட்டும், குழந்தைகளைச் சீராட்டி வளர்த்ததில் நிறைந்திருந்த பாசமாகட்டும், கணவரின் உறவுகள் மீது கொண்ட பிரியமாகட்டும், மருமகள்கள் மீதான சிநேகமாகட்டும், பேரக்குழந்தைகள் மீதான பிடித்தமாகட்டும், கணவரின் நலனைக் கருணையுடன் கட்டிக் காத்த காதலாகட்டும் ஒவ்வொரு தளங்களிலும், உறவிலும் மனைவியின் ஆளுமையைக் கவிஞர் இரவி அவர்கள் வெளிச்சப்படுத்தியிருக்கிறார். அன்பையும், ஆதங்கத்தையும் சொல்லக்கூட அவர் தவறவில்லை.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த நூலினை (1) மனைவியின் மாண்பும் பெருமையும். (2). கணவனின் வாழ்க்கையில் மனைவியின் பங்களிப்பும் துணைநலமும்.(3). குடும்பம், குழந்தைகள், வளர்ச்சியில் மனைவியின் பங்கு.(4) மனைவியின் உரிமைகள், சுயமரியாதை, சமத்துவம், தனித்துவம். (5) குடும்பத்தில் மனைவி உறவுகளை இணைக்கும் பாலம் என ஐந்து தலைப்புகளின் கீழ் கொண்டு வரலாம்.
வாழ்வியல் செய்திகள்
மனைவி என்பவர் குடும்பத்தின் ஓர் உறுப்பினர் மட்டுமல்ல; தனித்துவமான ஆளுமை, அறிவு, உணர்வு, உரிமை, கனவுகள் கொண்ட வாழ்க்கைத் துணை என உணர்த்துகிறார் ஆசிரியர் இரவி அவர்கள். அத்தோடு நிற்கவில்லை. “மாண்புமிகு மனைவி” எனக்கு, கணவர்-மனைவி உறவு ரீதியான சில வாழ்வியல் செய்திகளையும் சிந்தனைகளையும் சொல்லிச் சென்றது. அவற்றில் சில..
1. அன்பும் மரியாதையும் அடிப்படையாக இருக்கட்டும்: கணவன் - மனைவி உறவு என்பது வெறும் குடும்பப் பொறுப்புகளால் கட்டமைக்கப்படுவது அல்ல. பரஸ்பர அன்பு, மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றால் நிலைபெறுவது. ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வதே மகிழ்ச்சியான இல்லறத்தின் அடித்தளம்.
2. கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளப் பழகுவோம்: கணவன், மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனைகளும் நம்பிக்கைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் பகுத்தறிவாளராகவும், மற்றவர் ஆன்மிக நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கலாம். அந்த வேறுபாடுகளை மதித்து வாழ்வதே பண்பட்ட வாழ்க்கை.
3. விட்டுக்கொடுத்தல் உறவை வலுப்படுத்தும்: எல்லா நேரங்களிலும் நமது விருப்பங்களும் கொள்கைகளுமே மேலோங்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. வாழ்க்கைத் துணையின் மகிழ்ச்சிக்காகச் சில நேரங்களில் விட்டுக்கொடுப்பதும் சமரசம் செய்துகொள்வதும் உறவை இனிமையாக்கும்.
4. வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்குச் செவிசாய்ப்போம்: மனைவியின் விருப்பங்களையும் ஆசைகளையும் பொறுமையாகக் கேட்டறிந்து, முடிந்தவரை நிறைவேற்ற வேண்டும். குடும்பத்தின் முக்கியமான முடிவுகளில் இருவரின் கருத்துகளுக்கும் சமமான இடமளிக்க வேண்டும்.
5. பகிர்ந்து வாழ்வதில் மகிழ்ச்சி காண்போம்: உணவு தயாரிப்பது, உறவினர்களுக்கு வழங்குவது, குடும்ப நிகழ்வுகளில் அனைவரையும் மகிழ்விப்பது போன்ற செயல்கள் அன்பின் வெளிப்பாடுகள். நம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வாழ்க்கையை வளமாக்கும்.
6. குடும்ப உறவுகளைப் பேணிப் பாதுகாப்போம்: கணவன் வீட்டார், மனைவி வீட்டார் என்று வேறுபாடு பார்க்காமல் இரு குடும்பங்களுடனும் அன்பாகப் பழக வேண்டும். உறவினர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்பதும், அவர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவுவதும் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும்.
7. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்: குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றில் பெற்றோர் இருவரும் அக்கறை காட்ட வேண்டும்.
8. நோயிலும் துன்பத்திலும் துணையாக இருப்போம்: வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போது அருகிலிருந்து கவனிப்பதும், மருத்துவச் சிகிச்சைக்கு உதவுவதும், மனவலிமை அளிப்பதும் மிக முக்கியம். நோயுற்றவருக்கு மருந்து மட்டுமல்ல; அன்பும் நம்பிக்கையும் தேவை.
9. ஒருவரின் உடல்நலத்தை மற்றவர் பாதுகாப்போம்: உணவுக் கட்டுப்பாடு, மருத்துவ ஆலோசனை, முறையான பராமரிப்பு போன்றவற்றில் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் நலனுக்காக உணவுப் பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளத் தயங்கக் கூடாது.
10. பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கவேண்டும்: மனைவி சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது, உறவினர்களைக் கவனிப்பது போன்ற பணிகள் தானாகவே நிகழ்பவை அல்ல. அவற்றுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கணவன் உணர்ந்து மதிக்க வேண்டும்.
11. பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவோம்: உணவு நன்றாக இருந்தால் பாராட்டுவது, மனைவியின் முயற்சிகளை அங்கீகரிப்பது, அவர் செய்யும் சிறிய செயல்களுக்கும் நன்றி கூறுவது அவசியம். குறைகளைக் கூறுவதில் காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதிலும் காட்ட வேண்டும்.
12. வீட்டு வேலைகளைக் கற்றுக்கொண்டு பகிர்ந்துகொள்வோம்: சமையல் உள்ளிட்ட அடிப்படை வீட்டு வேலைகளை ஆண்களும் கற்றுக்கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்புகள் இருவருக்கும் பொதுவானவை.
13. ஆணாதிக்கச் சிந்தனையை அகற்றுவோம்: மனைவி கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்குச் சம உரிமையை வழங்கி, அவர்களின் தனித்துவத்தையும் விருப்பங்களையும் மதிக்க வேண்டும்.
14. உறவுகளிடம் பாகுபாடின்றி அன்பு செலுத்துவோம்: உறவினர்களின் குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள் என அனைவரிடமும் அக்கறை காட்டுவது உயர்ந்த மனிதப் பண்பாகும்.
15. பிறருடைய நம்பிக்கைகளுக்கு இடையூறு செய்யாதிருப்போம்: நமக்கு விருப்பமில்லாத ஒரு செயல் மற்றவருக்கு மகிழ்ச்சியைத் தரலாம். அது தீங்கு விளைவிக்காதவரை அவர்களுடைய நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் தடுக்காமல் மதிக்க வேண்டும்.
16. குடும்ப மகிழ்ச்சியில் அனைவரையும் இணைத்துக்கொள்வோம்: விழாக்கள், பிறந்தநாள்கள், திருமணங்கள், வளைகாப்பு போன்ற குடும்ப நிகழ்வுகள் உறவுகளை நெருக்கமாக்குகின்றன. அனைவரையும் அழைத்து, ஒன்றாகச் சமைத்து, உணவருந்தி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வது குடும்ப வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கும்.
17. அன்பை வெளிப்படுத்துவோம்: மனைவியின் அருமையை அவர் மறைந்த பிறகு உணர்ந்து வருந்துவதில் பயனில்லை. அவர் உயிருடன் இருக்கும்போதே அன்பாகப் பேசவும், பாராட்டவும், நன்றி தெரிவிக்கவும் வேண்டும்.
18. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து வாழ்வோம்: வாழ்க்கையில் எப்போது என்ன நிகழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. எதிர்பாராத விபத்துகள், இழப்புகள் நம் வாழ்வையே மாற்றிவிடலாம். எனவே அன்பானவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும்.
19. வாழ்க்கைத் துணையின் நினைவுகளைப் போற்றுவோம்: ஒருவர் மறைந்தாலும் அவர் செய்த நன்மைகள், காட்டிய அன்பு, குடும்பத்திற்காக ஆற்றிய பணிகள் ஆகியவை என்றும் நிலைத்திருக்கும். அவருடைய நினைவுகளைப் பாதுகாத்து, அவர் விரும்பிய நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்வது அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.
20. இல்லற வாழ்க்கையை அன்பின் பயணமாக மாற்றுவோம்: கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகவும், நண்பர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வாழ வேண்டும். அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், புரிதல், நன்றியுணர்வு ஆகியவை இணைந்தால் இல்லறம் இனிய வாழ்க்கைப் பயணமாக அமையும்.
வித்தியாசமான நூல்
நண்பர் இரவி அவர்கள் இந்த நூல் மூலம் சொல்லவருவதெல்லாம்.. "மனைவியை மதியுங்கள்; வாழும்போதே பாராட்டுங்கள்; போற்றுங்கள். அவருடைய அருமையையும் பெருமையையும் உணர்ந்திடுங்கள். தன்னலமற்ற தியாகத்தின் திருவுருவமாகவும், தாய்க்கு அடுத்தபடியாக நம்மைப் பாதுகாக்கும் பாசமிக்க உறவாகவும் விளங்குபவள் மனைவி" என்கிறார்.
தமிழில் பெண்மை குறித்தும், பேராற்றல் மிக்கப் பெண்கள் குறித்தும், பெண்களின் நிலை குறித்தும் அனுதினமும் ஏராளமான நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன. நானும் அந்த வகையில் சில நூல்களை எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் கூடத் தமிழகப் பெண்கள் குறித்துப் பல நூல்கள் வந்திருக்கலாம். அவ்வாறு வந்த இரண்டு நூல்களை நான் அறிவேன். தமிழ்க் குடும்பத்தில் நிலவும் அன்பு, பாசம், உறவுகள், திருமண வாழ்க்கை, கணவன்-மனைவி உறவு, குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை மார்கரெட் ட்ராவிக் ( (Margaret Trawick) என்னும் அமெரிக்க மானுடவியல் ஆய்வாளர் ஆராய்ந்து எழுதிய Notes on Love in a Tamil Family தமிழ்நாட்டில் ஒரு தமிழ்க் குடும்பத்துடன் நெருங்கிப் பழகி, அவர்களுடைய வாழ்க்கை முறையை நேரடியாகக் கவனித்து இந்த நூலை உருவாக்கியுள்ளார். தமிழ்க் குடும்பத்தில் அன்பு, கணவன்-மனைவி உறவு, குடும்பப் பாசம் ஆகியவற்றை மானுடவியல் பார்வையில் ஆராய்கிறது.
இன்னொரு நூல் Mary Elizabeth Hancock எழுதிய Womanhood in the Making இதற்குப் பெண்மை உருவாக்கப்படுதல் அல்லது பெண்ணாக உருவாகும் வாழ்க்கைப் பயணம் என்று பொருள் கொள்ளலாம். இந்தியாவின் தென்னிந்திய நகர்ப்புறச் சூழலில், குறிப்பாகச் சென்னை நகரை மையமாகக் கொண்ட பெண்களின் வாழ்க்கை, பண்பாடு, சமயச் சடங்குகள், குடும்ப உறவுகள், சமூக அடையாளங்கள் ஆகியவற்றை இந்த நூலின் ஆசிரியர் ஆராய்கிறார்.
இவையெல்லாம் ஆய்வு நூல்கள். தகவல்கள் மற்றும் முடிவுகள் அடிப்படையிலும், புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் எழுதப்படுபவை. ஆனால் 34 ஆண்டுகள் ஒரு ஜீவனுடன் வாழ்ந்து ஏற்ற இறக்கங்களை அருகிலிருந்து உன்னிப்பாகக் கவனித்து உணர்ந்தவர் எழுதிய நூல் ஏதேனும் வந்திருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. நான் அறிந்து வாசித்ததில்லை. இந்த வரிசையில் கவிஞர் இரா. இரவி அவர்களின் மாண்புமிகு மனைவி முதல் நூலாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.
எனவே. கவிஞர் இரவி அவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை, மனைவி குறித்தான உங்கள் நினைவுப் பகிர்வுகளை மட்டுமே கொண்ட நூலாக இதனை விரிவுப்படுத்துங்கள். இன்றைய சூழலில், விழுமியங்களைத் தொலைத்து, நிழல்களை நிஜமென நம்பிக்கொண்டிருக்கும் சமூகத்தின் கணிசமானோருக்கு விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு, தனது இணையரை எவ்வாறு நடத்திடவேண்டும் என்ற புரிதலை அந்த நூல் ஏற்படுத்தட்டும். இல்லறம் என்பது நல்லறமாவது எவ்வாறு..? எப்போது? என்ற கேள்விக்கான விடையாக உங்கள் விரிவாக்க நூல் அமையட்டும். தாய்வழி சமூகமான தமிழ்சமூகம் தலைநிமிர, மாண்புடன் நடத்தப்பட அந்த விரிவாக்கநூல் வித்தாகட்டும்.
இல்லறம் என்பது ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வது மட்டுமல்ல; ஒருவரின் கனவுக்கு மற்றவர் துணையாகவும், ஒருவரின் துயரத்திற்கு மற்றவர் ஆறுதலாகவும், ஒருவரின் வளர்ச்சிக்கு மற்றவர் ஊக்கமாகவும் வாழ்வதாகும். அன்பு, அறம், சமத்துவம், புரிதல் ஆகியவை நிறைந்த இல்லறமே மகிழ்ச்சியான குடும்பத்தையும், நல்ல தலைமுறையையும், சிறந்த சமூகத்தையும் உருவாக்கும் என உங்கள் நூலின் உள்ளடக்கமும் உங்கள் உள் உணர்வும் லட்சக்கணக்கானோரின் உள்ளத்தை நெம்புகோலாகப் புரட்டிப்போடட்டும். இந்த நூலை நீங்கள் பேனாவால் எழுதவில்லை... உயிரால் உயிர்பித்திருக்கிறீர்கள். இதுவே நிஜமான தாஜ்மஹல். நித்திய ஜீவன். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி

கருத்துகள்
கருத்துரையிடுக