உதவுங்கள் உதவிகள் கிடைக்கும் கவிஞர் இரா.இரவி ****** இது கதை அல்ல நடந்த உண்மை.

உதவுங்கள் உதவிகள் கிடைக்கும் கவிஞர் இரா.இரவி ****** இது கதை அல்ல நடந்த உண்மை. மதுரை விமான நிலையத்தில் உதவி சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி வந்தேன். ஒருநாள் இரவு கலைமாமணி கு.ஞானசம்பந்தன் ஐயா, அலைபேசியில் அழைத்து இரமேஷ்பிரபா என் நண்பர், இன்று இரவு கடைசி விமானத்தில் சென்னை செல்ல வேண்டும். அவர் வந்து கொண்டு இருக்கிறார். சற்று தாமதமாகும். போர்டிங் பாஸ் எடுத்து வைக்க சொல்ல முடியுமா? என்றார். இரவு நேரம் என்பதால் பணி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டேன். நான் விமான நிலையத்தில் இல்லை என்று சொல்லி இருக்கலாம். நான் அப்படி சொல்லவில்லை. முயற்சி செய்கிறேன் ஐயா என்றேன். எப்படியாவது அவரை விமானத்தில் அனுப்பி விடுங்கள். அவர் சென்னை சென்றாக வேண்டும் என்றார். விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் மேலாளர் நண்பர் கமல் அவர்களை அலைபேசியில் அழைத்தேன். இரமேஷ்பிரபா வந்து கொண்டு இருக்கிறார். போர்டிங் பாஸ் எடுத்து விடுங்கள், கைப்பை தவிர லக்கேஜ் எதுவும் இல்லை, எனவே வந்தவுடன் விமானத்திற்கு அனுப்பி விடலாம், எனக்காக இதைச் செய்யுங்கள் என்றேன். அவர் எனது கவிதை நூல்கள் படித்த என் ரசிகர் நண்பர் என்பதால் சரி என்று சொல்லி விட்டார். போர்டிங் பாஸ் எடுத்து விட்டால், ஒருவேளை அவர் வராவிட்டால் கட்டணம் திரும்பப்பெற முடியாது. அப்படி ஒரு விதி உள்ளது. சற்று தயங்கினார். உறுதியாக வந்து விடுவார். வராவிட்டால் நான் பொறுப்பு. தைரியமாக போர்டிங் பாஸ் எடுத்து விடுங்கள் என்றேன். எடுத்து விட்டார். விமானம் புறப்பட சில நிமிடங்கள் முன்பு போர்டிங் பாஸ் எடுப்பதை நிறுத்திவிட வேண்டும், அப்படி நிறுத்திய பின்பு வந்தால் பயணிக்க முடியாது. போர்டிங் பாஸ் எடுத்து வைத்து விட்டனர். போர்டிங் பாஸ் கொடுப்பது நிறுத்திய பின்பு இரமேஷ்பிரபா வந்தார். ஏற்கனவே எடுத்து வைத்ததை வாசலில் நின்று கொடுத்து, நேரடியாக விமானத்திற்குள் செல்ல அனுப்பி விட்டனர். இரமேஷ்பிரபா அவர்கள் விமானத்தின் உள்ளே அமர்ந்து விட்டு, எனக்கு அலைபேசியில் அழைத்து நன்றி சொன்னார். சென்னையில் இது சாத்தியமில்லை, மதுரையில் நீங்கள் சாத்தியப்படுத்தி போர்டிங் பாஸ் எடுத்து வைத்ததால் நான் விமானத்திற்குள் வந்து விட்டேன், மிக்க நன்றி. ஞானசம்பந்தன் ஐயா தங்களை கவிஞர் என்று சொன்னார். இரண்டு நாட்களில் சென்னை VGP கடற்கரைக்கு வந்து விடுங்கள், தங்களை நேர்முகம் நானே கண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒலிபரப்புகின்றேன் என்றார். இரமேஷ்பிரபா அவர்கள், அப்போது கலைஞர் தொலைக்காட்சியில் பொறுப்பில் இருந்தார். எனக்கு இன்ப அதிர்ச்சி. அவர் அழைத்தபடியே இரண்டுநாள் கழித்து சென்னை VGP கடற்கரைக்கு சென்றேன். இரமேஷ்பிரபா அவர்கள் என்னை வரவேற்று உபசரித்து நேர்முகம் கண்டார். ஹைக்கூ கவிதைகள் பற்றி, இலக்கியம் பற்றி, அனுபவம் பற்றி பல கேள்விகள் கேட்டு, இரண்டு மணி நேரத்தில் சந்திப்பு முடிந்து, கலைஞர் தொலைக்காட்சியில் 1 மணி நேரம் சிறப்பாக ஒளிபரப்பானது. பலரும் பாராட்டினார்கள். ஒளிபரப்பும் தேதி முன்கூட்டியே இரமேஷ்பிரபா அவர்கள் சொல்லிவிட்ட காரணத்தால் மதுரையில் உள்ள என் நண்பர், புகைப்படக் கலைஞர் மோகன் அவர்களிடம் சொல்லி, நிகழ்ச்சியை பதிவு செய்து, யூடியூப்-ல் ஏற்றி விட வேண்டினேன். அவரும் அதனை பதிந்து யூடியூப்-ல் ஏற்றி விட்டார். அது நிரந்தரமாக இணையத்தில் உள்ளது. இன்றும் பார்க்கலாம். அடிக்கடி எனது முகநூலில், வலைப்பூவில் பதிந்து வருகிறேன். ஜெயா தொலைக்காட்சி, பொதிகை தொலைக்காட்சியும் பதிந்து யூடியூப்-ல் ஏற்றினார். தமிழ்ஆதர்ஸ் டாட் காம் இணைய ஆசிரியர் அகில் அவர்களும் இணையத்தில் ஏற்றி உதவினார். https://www.youtube.com/watch?v=tHTWsX0hfZo இரமேஷ்பிரபா அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாக உள்ளது எனது உதவியாளர் எண் அனுப்பி உள்ளேன். அவருக்கு உங்களுடைய இலக்கிய நண்பர்கள் எண் மட்டும் அனுப்பி வையுங்கள். அவர் அழைத்து அவர்களை பேட்டிக்கு ஏற்பாடு செய்து விடுவார். கலைஞர் தொலைக்காட்சியில் அனைவரின் நேர்முகம் ஒளிபரப்பாகும், எனக்கும் உதவியது போல், அதே நேரத்தில் உங்கள் நண்பர்களுக்கும் உதவியது போல் ஆகும் என்றார். மகிழ்ச்சி அடைந்தேன். கரும்பு தின்ன கூலியா வேண்டும் என்று சம்மதம் சொல்லி நண்பர்களின் எண்களை வரிசையாக அறிமுகம் செய்து வைத்தேன். 50 நண்பர்களின் நேர்முகம் கலைஞர் தொலைக்-காட்சியில் ஒளிபரப்பானது. தமிழ்த்தேனீ இரா.மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன், பொதிகைத் தென்றல் ஆசிரியர் வசீகரன், கன்னிக்கோவில் இராஜா என வரிசையாக எண்கள் கொடுத்து அழைக்க வைத்தேன். அன்று நான் சோம்பேறித்தனப்பட்டு, இரமேஷ்பிரபாவிற்கு உதவாமல் இருந்திருந்தால் இவை நடந்து இருக்காது. ஒரே ஒரு அலைபேசி மூலம் செய்த உதவி இவ்வளவு நன்மைகள் உதவிகள் பெற காரணமாக இருந்தது. எனவே யாருக்கும் உதவி செய்ய தயங்காமல் உதவுங்கள்.

கருத்துகள்