: மாண்புமிகு மனைவி ! நூலாசிரியர்: தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் இரா. நீல மணிவண்ண கண்ணன்

நூலின் பெயர்: மாண்புமிகு மனைவி ! நூலாசிரியர்: தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் இரா. நீல மணிவண்ண கண்ணன் ! வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com வகை: நினைவஞ்சலிக் கவிதைகள் / வாழ்வியல் மற்றும் நட்பியல் கவிதைகள் தொடக்கம் : ஐயா ரவி அவர்கள் ஹைக்கூ கவிதைகளின் அறங்காவலர். ஆம், மூன்று வரிகளில் முற்று பெற்றாலும் மூன்றாவது வரியால் முதிர்ச்சி பெறும் அழகான ஹைக்கூ கவிதைகளை வடிப்பதில் வல்லவர். கவிஞர் இரா. இரவி அவர்களின் மிக உருக்கமான படைப்பு "மாண்புமிகு மனைவி". இந்த நூல் வெறும் கவிதை தொகுப்பு மட்டுமல்ல; வாழ்வின் பாதியை இழந்து தவிக்கும் ஒரு கணவனின் ஆழமான தவிப்பும், அவர் தன் வாழ்வில் கடந்து வந்த உன்னதமான மனிதர்களுக்குச் செலுத்தும் நன்றியறிதலும் கலந்த ஒரு வாழ்வியல் ஆவணம். கருப்பொருள் மற்றும் நூலின் சுருக்கம் இந்த மாண்புமிகு மனைவி என்ற அவரது நூலில் அவர் ஹைக்கூவை தவிர்த்து முற்றிலும் வேறு நடையில் பயணித்திருக்கிறார். ஆம் இதில் பெரும்பாலும் அவர் உரைநடையையும் கவி நடையையும் பயன்படுத்தி இருக்கிறார். இந்த மாண்புமிகு மனைவி என்ற ஒற்றைக் புத்தகம் இரண்டு விதமான விடயங்களை இரண்டு பகுதிகளாக சொல்லி இருக்கிறது. முதலாவது பாதியில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தில் ஏறக்குறைய 34 ஆண்டு காலம் பயணித்து மண நாள் முதல் இயற்கைக்கு எதிராக இன்னுயிர் நீத்த நாள்வரையிலும், அதன் பிறகும் தன் நினைவுகளில் பயணித்துக் கொண்டிருக்கின்ற தனது மனைவியை, அவர்கள் இருவருக்கும் ஆன அழகிய அனுபவங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் எதார்த்தமாகவும் அள்ளி வழங்கியிருக்கிறார். மேலும் இருவருக்கும் இடையிலான வாழ்வியல் நிஜங்களின் எதார்த்தங்களை இயல்பாகச் சொல்லி அதில் நியாயம் செய்கிறார். இரண்டாம் பாதியில் புகழ் வணக்க கவிதைகளை வடித்திருக்கிறார். இந்த புகழ் வணக்க கவிதைகளை தொடங்கும் போதும் முதலாவதாக தன்னுடைய மாண்புமிகு மனைவியிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார். முதல் கவிதையில் தன்னவளை மன்னவளாக முடிச்சுட்டி அழகு பார்த்திருக்கிறார் நானும் அவளும் என்று. அடுத்து வரும் கவிதைகளில் நான் ஏற்கனவே சொல்லியது போல தன் உடன் பயணித்த ஆழமான நட்புகளையும், அறம் பாடிய சான்றோர்களையும், ஸ்வரம் கூட்டிய சான்றோர்களையும், சிந்தனையை தூண்டிய சிகரங்களையும், நட்பாய் பழகிய நல்லவர்களையும் இவை அனைத்தையும் மொத்தமா செய்த மனைவியும் மிக நேர்த்தியாக சுவையைக் கூட்டி சலிப்பு தட்டாமல் நாம் பருகிட அமிர்தம் என இந்நூலின் வாயிலாக தந்துள்ளார். 3. அலசல் மற்றும் மொழிநடை உணர்ச்சிப் பூர்வமான வரிகள்: மனைவி என்பவள் மற்றொரு அம்மா" என்ற உன்னத தத்துவத்தை வாசகர்களின் மனதில் கடத்துவதில் கவிஞரின் வரிகள் வெற்றி பெற்றுள்ளன. பகுத்தறிவுக் கொள்கை கொண்ட கவிஞர், ஆன்மீகப் பற்றுள்ள தன் மனைவியின் விருப்பங்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்த அழகிய வாழ்வியல் நிகழ்வுகளும் கவிதைகளாக மலர்ந்துள்ளன. மேலும் கவிஞர் தன்னுடைய மனைவியின் உடனான இல்லற வாழ்வையும் அவர்கள் வாழ்வில் அவர்களின் குழந்தைகளின் மீது கொண்ட பேரன்பும் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான உணர்ச்சிகரமான நிகழ்வுகளை ஆங்காங்கே நமக்கு அடிக்கோடிட்டு காட்டும் வண்ணம் வரிகளில் வசியம் செய்திருக்கிறார் உதாரணமாக இரண்டு மூன்று இடங்களை என்னால் கோடிட்டு காட்ட முடியும், முதலாவதாக தன் மனைவி முழு ஆன்மீகவாதி என்றும் தான் அதற்கு எதிர்மறையான நாத்திகவாதி என்றும் பெரியார் கொள்கையில் பிடிப்பு கொண்டவன் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக அவர் முழு அசைவ பிரியர் என்றும் ஊர்வன பரப்பன முதற் கொண்டு அசைகின்ற அனைத்தையும் உட்கொள்ளும் அசைவ விரும்பி என்றும் தன்னுடைய இணையாள் சுத்த சைவ பிரியர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மூன்றாவதாக தன்னுடைய ஆசை மனைவிக்காக தன் கொள்கையை விட்டுவிட்டு ஒவ்வொரு பிப்ரவரி திங்கள் இரண்டாம் நாளும் அதாவது அவருடைய திருமண நாளில் திருப்பரங்குன்றத்தில் குடியிருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க தன்னுடைய மனைவியுடன் தவறாமல் சென்று வந்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேற்கூறிய மூன்று நிகழ்வுகளை வைத்து பார்க்கின்றபோது ஐயா ரவி “மனைவி ஒரு மூன்று எழுத்து மந்திரம் என்றும் அதை உணர்ந்து உச்சரிப்போருக்கு அவள் அனைத்தும் வழங்கும் அட்சய பாத்திரம் என்றும் மணம் கொண்ட தினம் முதல் அவள் மரணம் கொண்ட தினம் வரை அணு அணுவாய் அனுபவித்த காதலையும் ஆங்காங்கே ஆட்கொண்ட நினைவுகளும் உருக்கமாக சொல்லி உருகச் செய்திருக்கிறார்.” ஆம், “ எதிரும் புதிரும் உதிரம் ஒன்றி உலகம் அதிர இல்லறம் நடத்திட்ட பெருமை இந்த தம்பதிகளுக்கு உண்டு “ என்பதை இந்த நூலின் வாயிலாக உணர முடிகிறது எவ்வாறென்றால், “நாம் அனைவருமே அறிவியலில் காந்த விசை கோட்பாட்டினை அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த கோட்பாட்டின் தத்துவம் என்னவென்றால் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அவ்வாறுதான் இங்கும் ஆத்திகமும் நாத்திகமும் காதலால் ஈர்த்திருக்கிறது.” அதுபோலவே கணிதத்தில் பெருக்கல் குறியீட்டில் “ நேர்மறையை நேர்மறையால் பெருக்க கிடைக்கும் விடை நேர்மறையே மற்றும் எதிர்மறையை எதிர்மறையால் பெருக்க கிடைக்கும் விடையும் நேர்மறையே. இங்கு அசைவம் நின்ற எதிர்மறையும் சைவம் என்ற எதிர்மறையும் ஒன்றை ஒன்று காதலால் பெருக்கிக் கொண்டு நேர்மறையாக நிமித்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. “ மேலும் இன்னொரு விடயம் நமக்கு புலப்படுவது என்னவென்றால் “ முருகப்பெருமானே கவிஞர் ரவி அவர்களின் தரிசனம் பெற வேண்டுமானால் அவர் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி திங்கள் இரண்டாம் நாள் வரை காத்து கிடக்க வேண்டும் என்பதும். அந்த தரிசனம் கூட அவரின் மாண்புமிகு மனைவி ஜெயசித்ரா அவர்களால் மட்டுமே ஆண்டவனும் அருள் பெறுகிறார் என்பதும்.” ஆக, “ ஒன்றோடு ஒன்று கூட்டி விடை இரண்டு ஆகுமேயானால் அது கணிதம் ஒன்றோடு ஒன்றைக் கூட்டி விடை ஒன்றே ஆகுமேயானால் அது காதல் “ன்று சொல்லி முதல் பாதிக்கான எனது எனது வாழ்த்துரையை முடிக்கிறேன். மனிதநேயப் பதிவுகள்: இரண்டாம் பாதியிலும் புகழ் வணக்க கவிதைகளை வடித்திருக்கிறார். இந்த புகழ் வணக்க கவிதைகளை தொடங்கும் போதும் முதலாவதாக தன்னுடைய மாண்புமிகு மனைவியிடம் இருந்தே தொடங்கி இருக்கிறார். முதல் கவிதையில் தன்னவளை மன்னவளாக முடிச்சுட்டி அழகு பார்த்திருக்கிறார் நானும் அவளும் என்று. அடுத்து வரும் கவிதைகளில் நான் ஏற்கனவே சொல்லியது போல தன் உடன் பயணித்த ஆழமான நட்புகளையும், அறம் பாடிய சான்றோர்களையும், ஸ்வரம் கூட்டிய சான்றோர்களையும், சிந்தனையை தூண்டிய சிகரங்களையும், நட்பாய் பழகிய நல்லவர்களையும் இவை அனைத்தையும் மொத்தமா செய்த மனைவியும் மிக நேர்த்தியாக சுவையைக் கூட்டி சலிப்பு தட்டாமல் நாம் பருகிட அமிர்தம் என இந்நூலின் வாயிலாக தந்துள்ளார். அதில் · நட்பிற்கு இலக்கணம் எழுதிக் கொண்டிருக்கின்ற முதுமுனைவர் இறையன்பு இந்திய ஆட்சிப் பணிகள் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு மடல் வரைந்திருக்கிறார். · இசைக் குயிலுக்கு வாழ்த்து இசைத்திருக்கிறார். · சின்ன கலைவாணருக்கு சிறப்பு செய்திருக்கிறார். · இயக்குனர் இமயத்திற்கு இதயத்தின் மையத்தில் வைத்து முதல் மற்றும் இறுதி மரியாதை செய்து இருக்கிறார். · எஸ்பிபி அவர்களுக்கு தனது சொற்களால் பாலாபிஷேகம் செய்திருக்கிறார். · ராஜனுக்கு ராஜன் அந்த ரங்கராஜன் வாலி அவர்களை வாயார வாழ்த்தி காலம் கொண்டு போனதை என்னை வருத்தம் செய்திருக்கிறார். · அபூர்வராகங்கள் பாடிய வாணி ஜெயராம் அவர்களின் குரலை வருணித்திருக்கிறார். · கவியரசை தத்துவங்களுக்கு புவியரசு என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். · பட்டுக்கோட்டையாரை தன் மனக்கோட்டையில் கட்டி அரியனையில் அமர்த்தி அழகு பார்த்து இருக்கிறார். · கலைவாணரை கர்ணனோடு ஒப்பிட்டு கரவொளிப் பெறுகிறார். · வீரபாண்டிய தென்னவனே வீடு பேரு அடையும்வரை போற்றி புகழும் முடிவில் இருந்திருக்கிறார். · இயக்குனர் பாலு மகேந்திரா அவர்களுக்கு சொற்களால் சொர்க்கத்தில் விழா எடுத்து மகிழ்ந்திருக்கிறார். · இன்னுயிர் நீத்தபின்னும் ஈழக் கொடி உடுத்தி இறுதி யாத்திரை சென்ற அய்யா மணிவண்ணனின் ஈர (ழ) மனத்தை அறிய வைத்திருக்கிறார். · கரிமேடு காமராசு யார் என்று நம்மிடம் தெளிய வைத்திருக்கிறார் . · இளங்குமரனார் தமிழ் பற்றை இவ்வுலகம் அறிய வைத்திருக்கிறார். · தமிழ்த்தேனீ ஐயா ரா. மோகன் அவர்களின் உதவும் மாண்பினை உரக்க சொல்லி வியந்திருக்கிறார். · பட்டிமன்றத்தால் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற பாப்பையா அவர்களுக்கு அறமனச் செம்மல் என்று ஆசை தீர வார்த்தைகளால் விருது வழங்கி இருக்கிறார் . · இறுதியாக படித்ததில் பிடித்தது என்று அவளை நீ என்றும் தன்னை நான் என்றும் விழித்தது முதல் இரவில் கண் அயரும் வரை தன்னவளை பெருமைப்படுத்தி கொண்டேயிருக்கிறார். நிறைகள் மற்றும் தனித்துவம் உண்மைத் தன்மை: கவிஞர் தன் சொந்த வாழ்வியல் அனுபவங்களை கற்பனைகள் இன்றியும் தனது இதயத்தின் துடிப்பாய் இருந்த மனைவியின் இழப்பின் வலியை கவிதைகளாக படித்துள்ளதால் வாசிக்கின்ற வாசகர்களின் இதயத்தில் மெல்லிய வழியோடு காதலின் ஆழத்தை அறியச் செய்திருக்கிறார் . எளிமையான தமிழ்: சொற்களை கையாளும் விதத்தில் எளிமையான அதே நேரம் ஆழமான வாழ்வியல் நிஜங்களை நமக்குள் நிறைய வைக்கிறார். முடிவுரை: இறுதியாக இந்த உலகம் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு நியாயம் செய்திருக்கிறது. ஆம் இனியவள் இறந்த நான்காம் நாளில் இனியவன் பேரன் வடிவில் சித்திரனாய் பிறந்து ஐயா ரவி அவர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்ய தொடங்கி விட்டான். எனவே ஐயா ரவி அவர்கள் மாண்புமிகு மனைவி என்ற நூலில் தன் மனைவியின் மதிப்பினை வரிகளில் கூட்டி “மதிப்புக் கூட்டு வரி “ செய்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ஆகவே இந்த புத்தகத்தை வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகரும் வாசிக்கும்போது நிச்சயம் புத்தாக்கம் பெறுவார்கள் என்பதே இந்த ‘‘மாண்புமிகு மனைவி என்ற நூலை வாசித்ததில் ‘‘ கிடைத்த நிதர்சனம்.

கருத்துகள்