: மாண்புமிகு மனைவி! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் கருத்துரை : பேரா. முனைவர் இ.கி.இராமசாமி, பகுத்தறிவு சிந்தனையாளர்.
நூல் : மாண்புமிகு மனைவி!
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் கருத்துரை : பேரா. முனைவர் இ.கி.இராமசாமி,
பகுத்தறிவு சிந்தனையாளர்.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com
******
தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவியின் “மாண்புமிகு மனைவி” என்னும் நூல் மேற்படி கவிஞரின் சுயசரிதையின் ஒரு பகுதி. படிக்கும்போதும், படித்து முடித்த பின்னும் என்னமோ செய்கின்றது. இதற்குக் கருத்துரை எழுதுவது அத்துணை எளிதல்ல. “தாபத நிலை”, “மனைத்தக்க மாண்புடையவள்” என்பன மனைவியின் அருமைப்பாட்டை உணர்த்துவன.
பக்தி முற்றிய மனைவியும், பகுத்தறிவு நேர்ந்த கணவனும் சேர்ந்து வாழ. “புரிதலும், விட்டுக் கொடுத்தலும், அன்பின் பிணைப்பும் அடிப்படை” என்னும் வாழ்வியல் தத்துவத்தை உலகிற்குத் தருகின்றது இந்த நூல்.
“சாமி சாமி என்று பக்தியோடு வாழ்ந்தவளைச் சாலை விபத்தில் அகாலமரணம் அடைந்தபோது அவள் வணங்கிய ஆயிரம் சாமியில் ஒரு சாமி கூட அவளை ஒரு நிமிடம் நிற்க வைத்துக் காப்பாற்றவில்லை. கடவுள் இல்லை என்பதால் உறுதியாக இருந்த எனக்கு சித்ராவின் மரணம் என்பது கடவுள் இல்லவே இல்லை என்பதை மிகவும் உறுதிப்படுத்தியது” (ப.27) – இதுதான் நூலாசிரியர் நமக்குச் சொல்லும் பாடம்.,
“ஒருவருக்கு நோவும், விபத்தும், கவலையும், இழப்பும், சாவும் எப்போது வேண்டுமாயினும் வரும்” அவற்றுக்கு முந்திக்கொண்டு நாலுபேருக்கு நல்லது செய்யுங்கள்” என்பது பெரியாரின் பொன்மொழி.
தந்தை பெரியாரின் கொள்கையை உள்வாங்கி இடும்பைக்கு இடும்பை கொடுத்து. துன்பத்திற்கே துன்பம் கொடுத்து வாழ்ந்து காட்டுகின்றார் சாதனையாளர் நம் இரவி. எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல்லாமல் வாழும் மாமனிதர்.

கருத்துகள்
கருத்துரையிடுக