முதுமுனைவர் வெ.இறையன்பு 'மேடையில் தவழ்ந்தவை' நூல் மதிப்புரை - கோ.பத்மாவதி
நூல்: மேடையில் தவழ்ந்தவை நூலாசிரியர்: வெ.இறையன்பு நூல் மதிப்புரை: கோ.பத்மாவதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 050. தொடர்பு எண்: 044-26251968, 26258410. பக்கங்கள்: 200 விலை: ரூ.190/- *********** 'மேடையில் தவழ்ந்தவை' என்ற இந்த புத்தகத்தில் பத்து தலைப்புகளில் முத்து முத்தான குழந்தைகளை முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் தவழ விட்டுள்ளார்கள். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் எப்பொழுதும் இலக்கண முறைபடியும், இலக்கிய வளம் இணைந்தும் உரையாற்றும் வல்லமை படைத்தவர். அவருடைய உரைகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே கட்டுரையாக எழுதி விட முடியும். ஏனெனில் வல்லினம், மேல்லினம் முதற்கொண்டு சிறு குழந்தை கூட பிரித்தறியும் வகையில் மிகவும் அருமையாகப் பேசும் ஆற்றல் மிக்கவர். தற்பொழுதைய பேச்சாளர்கள் பலர் வாசகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்துடன் பேசுவதைக் காண முடிகின்றது. ஆனால் அரங்கத்திற்கு வரும் சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான கருத்துகளை வாரி வழங்கும் விதமாக மேனாள் தலைமைச் செயலாளரின் உரை எப்பொழுதும் அமைந்திருக்கும். முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அனைத்து உரைகளுக்கும் நேரில் சென்றோ, மின்னணு சாதனம் வழியாகக் கேட்டாலோ மனதை சென்றடைவதை விட 'மேடையில் தவழ்ந்தவை' என்ற இந்த புத்தகம் வாசிக்கும் போது அனைத்துக் கருத்துகளும் மனதில் பசுமரத்தாணி போல பதிகின்றன. மதுரையில் லெனின் நூல் வெளியீட்டு விழாவில் முதுமுனைவர் வெ.இறையன்பு தவழவிட்ட உரையில் தன்னுடைய எட்டாம் வகுப்பில் கார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்த தனது அனுபவத்தோடு ஆரம்பித்து, கோவையில் வேளாண்பல்கலைக் கழகத்தில் நண்பர்களுடன் கவிதைப் புத்தகங்களைப் பகிர்ந்த அனுபவத்தைக் கூறுவதிலிருந்து மாணவர்கள் புத்தகங்களைப் பற்றி அலவலாவினால் உலகப் புகழ் பெற்றவர்களாக வலம் வர முடியும் என்பதை அறிய முடிகின்றது. தனது அனுபவத்தோடு எழுதும் எழுத்துகளும், ஆற்றும் உரைகளும் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லவே முடியாது. 'அருவி தொடங்குகிற இடத்திலே தூய்மையாக இருந்தால் தான் கையேந்திக் குடிக்கிற இடத்தில் அது சுத்தமாக இருக்கும். அதேப் போல தொடக்கத்திலிருந்தே லெனின் என்கின்ற அந்த மனிதர் எப்படி வாழ்ந்தார் என்பதை இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும்' என்று கூறி மாணவர்களை சிறந்த மாமனிதர்களின் புத்தகங்களைப் படிக்க ஊக்குவித்துள்ளார். முனைவர் அப்துல் காதர் அவர்கள் எழுதிய நூலை வெளியீடு செய்த நிகழ்வில் ஆற்றிய உரையில் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் சாதனைப் படைத்த பல பெண்களை பட்டியலிட்டு அடையாளம் காட்டி பெண்கள் சாதனை படைக்க முன் வர வேண்டும் என்ற ஊக்கத்தை அளித்துள்ளார். மேலும் இப்பகுதியில் கருப்பு ஆடுகள், வெள்ளை ஆடுகள் என்ற ஒரு சிறு கதையைக் கூறி 'நாம் எல்லோரும் ஒன்றுதான். எனவே பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை' என்று தேச ஒற்றுமையை ஓங்கி உரைத்துள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். 'மேடையில் தவழ்ந்தவை' என்ற இந்த புத்தகத்தில், ‘மேடையில் ஏறிப் பேசுங்கள். கலை நிகழ்ச்சிகளில் நடியுங்கள். பாட்டு பாடுங்கள். பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அப்போது தான் மேடைப் பயம் இல்லாமல் பேசுவதற்கான, பழகுவதற்கான சூழல் உருவாகும்’ என்று மாணவர்களை அனைத்துக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் ஊக்கப்படுத்துகிறார். 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில், 'திருக்குறள் விண்ணாக இருக்கிறது. நாம் விழிகளாக இருக்கிறோம். அது கடலாக இருக்கிறது. நாம் படகாக இருக்கிறோம். அது குளமாக இருக்கிறது. நாம் குவளையாக இருக்கிறோம். அது பூங்காவாக இருக்கிறது. நாம் பூங்கொத்தாக இருக்கிறோம். அது கடற்கரையாக விரிந்திருக்கிறது. நாம் கிளிஞ்சல்களாக இருக்கிறோம்' என்று அடுக்கு மொழியில் அவருக்கே உரிய நடையில் மிக அருமையாக முதுமுனைவர் விருந்து படைத்துள்ளார். 'மேடையில் தவழ்ந்தவை' என்ற புத்தகத்தைப் படிக்கும் போது, முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்களின் 10 நிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்று அள்ளிப் பருகிய அமுதத்தைப் போன்ற அனுபவம் கிடைக்கிறது என்றால் மிகையில்லை. கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையில், 'ஒரு காலத்தில் எவையெல்லாம் கசப்பாக இருக்கின்றனவோ அவற்றைக் காலம் தாண்டி நினைக்கின்ற போது அது கற்கண்டாக இருக்கும் என்பது தான் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகின்ற பாடம்' (ப.163) என்று வாழ்க்கையின் உண்மையை ஊருக்கு உரைத்துள்ளார் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள். 'மேடையில் தவழ்ந்தவை' என்ற இந்த நூலானது நம் அறிவைப் பெருக்குவதற்கு அளிக்கும் முதலீடு. ஆகவே அனைவரும் வாங்கிப் படித்து வாழ்வில் வெற்றி பெறுங்கள். இலக்கியவாதிகளும், இளைஞர்களும், மாணவர்களும், சமுதாயமும் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அடுத்தடுத்தப் படைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்றால் மிகையில்லை. இளைஞர்களை எழுச்சியூட்டி சாதனைப் படைக்க வைக்கும் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்களுக்கு நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்.


கருத்துகள்
கருத்துரையிடுக