நூல் : மாண்புமிகு மனைவி! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூலாய்வு : முனைவர் ஞா. சந்திரன்!

நூல் : மாண்புமிகு மனைவி! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூலாய்வு : முனைவர் ஞா. சந்திரன்! வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com . ******* மனைவி என்பவர், ''பிறர் நம்மைப் பாராட்டும் போது அதைக்கண்டு புன்னகை புரிவார். உதாசீனப்படுத்தும்போது நம் கரம் பிடித்து ஆறுதல் சொல்லுவார். நம் முகம் பார்த்தே நம் அகக்குறிப்பை அறிவார். நமக்காக அவரது ஆசைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நம் கனவுகள் நனவாக உழைப்பார். வீட்டிற்கு விளக்காய் நம் வாழ்க்கைக்கு வெளிச்சத்தைத் தருவார்'' இத்தகைய பண்புகளை இயல்பாகக் கொண்டவர் நண்பர் கவிஞர் இரா.இரவி அவர்களின் மனைவி திருமதி சித்ரா அவர்கள். ''ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார்" என்பார்கள். அப்படியே நண்பர் இரவி அவர்களின் மாபெரும் வெற்றிக்குப் பின்னால் இவரின் மனைவி இருக்கிறார். அரசுப்பணி, இலக்கியப்பணி, சமுதாயப்பணி என அனைத்திலும் இவர் தொய்வின்றி இயங்கிக் கொண்டே இருந்ததற்குக் காரணம் இவரின் மனைவியே. நான் பலமுறை நண்பர் இரவி அவர்களின் இல்லத்திற்கு சென்றுள்ளேன். எப்போது சென்றாலும் முதல்முறை சென்றது போல் நம் அகம் மலர முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரிப்பார். கலகலவென பேசக்கூடியவர். இரவி அவர்களுக்கு கடவுள் பக்தி தான் இல்லை. ஆனால் மனைவி மீது அதிகமான பக்தி உண்டு. மனைவியை அதிக அளவு நேசித்தவர், இவரின் மனைவி மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். இவர் இல்லம் எப்போதும் பக்திமயமாகக் காட்சி அளிக்கும், சிறந்த இல்லத்தரசியாக வாழ்ந்தார். இவரின் விபத்துச் செய்தியை முனைவர். இறையன்பு அவர்கள் மூலம் அறிந்து அரசு மருத்துவமனை விரைந்தேன். இரவி அவர்கள் மனம் உடைந்து தளர்ந்து போயிருந்தார். ஆறுதல் கூறிவிட்டு அவ்வப்போது தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். ஆனால் திடீரென, அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதம் அதிர்ந்து போனேன். 24 மணி நேரமும் கடவுளையே நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ஏன் இந்த நிலை? என்று கடவுள் மீது கோபம் வந்தது, சில கேள்விகளுக்கு விடையே இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். இரவியின் இல்லம் சென்று அஞ்சலி செலுத்திய போது இரவி அவர்கள், கதறி அழுதது இன்னும் கண்முன்னே காட்சியாக நிற்கிறது. தன் மனைவியின் நினைவுகளையும் அவர் மீது கொண்ட அன்பையும், 'மாண்புமிகு மனைவி' என்ற நூலாக உருவாக்கி உள்ளார். இந்நூல் இரவி அவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாகும். தன் மனைவியோடு வாழ்ந்த பல நினைவுகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளார். இந்நூலை வாசிப்போருக்கு வழிகாட்டலாக இருக்கும். இல்லறத்தை நல்லறமாக வழிநடத்த உறுதுணையாக பல நிகழ்வுகள் உள்ளன. நூலின் இறுதியில் உள்ள புகைப்படங்கள் இருவரின் அன்புணர்வும் அழகுற எடுத்துக்காட்டுகின்றது. மாண்புமிகு மனைவி நூலின் மூலம் மனைவிக்கு மரியாதை செய்திருக்கிறார் அன்பு நண்பர் இரவி. - முனைவர் ஞா. சந்திரன்

கருத்துகள்