மாண்புமிகு மனைவி
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூலாய்வு கவிஞர் கு. பால் பேரின்பநாதன் )
அலைபேசி எண். 9655 640 326
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com .
*******
வீரபாண்டியத் தென்னவனார் தோற்றுவித்த மாமதுரைக் கவிஞர் பேரவை மூலம் கவிஞர் இரா.இரவி அவர்கள் எனக்கு அறிமுகமானார். நல்ல நண்பர். பல சங்கங்களின் மூலம் தமிழ்த் தொண்டாற்றி வருபவர். 'ஐக்கூ மன்னன்' என்று தென்னவனார் அவர்களால் பெரிதும் போற்றப்பட்டவர். 39 நூல்கள் எழுதிய பெருமை பெற்றவர். அன்னைத் தமிழ் மீது அளவிடற்கரிய பற்றுக் கொண்டவர்.
அன்னார் எழுதிய "மாண்புமிகு மனைவி" என்னும் நூலை வாசித்தேன். மெழுகுவர்த்தி தன்னை உருக்கி, உருக்குலைந்து, குறைந்து, கரைந்து, பிறருக்காக ஒளிதந்து, இல்லாமல், காணாமல் போகிறது. பின்னர் அந்த இடத்தை இருள் கவ்வுகிறது. அதுதந்த ஒளியில் கண்ட காட்சிகள் உள்ளத்தில் வலம்வந்து கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையைத்தான் "மாண்புமிகு மனைவி" என்னும் நூலில் ஆரம்பம் முதல் இறுதி வரை இனிதாய், நினைவாய், இன்ப துன்பக் காட்சிகளை படமாய்க் காட்டுகின்றார். வாசிப்பது போல் இருக்காது. நம்மோடு உரையாடுவது போல் இருக்கும்-
"சாமி சாமி" என்று சாலையில் உள்ள கற்சிலைகளை, கோவில், குளங்களில் வீற்றிருக்கும் சிலைகளை எல்லாம் போக்குவரத்திலும் கரங்கூப்பித் தொழுவாள். அல்லும்பகலும் ஆன்மீக சிந்தனை கொண்டாள். காலனாய் வந்த இருசக்கர ஓட்டியோன் வீழ்த்திட, தலை மோதியதும் பெருங்கல் மீது தானே! அவள் வணங்கிய அந்த சாமி எங்கே போனது? தனது அடியாரைக் காப்பாற்றத் தவறியது ஏன்? என்று நான் உணர்ந்தபோது, என்னில் இருந்த நாத்திகம் மேலும் வளர்ந்தது என்கிறார். அவர் சிந்திய கண்ணீர் வெள்ளம் நமது கண்களிலும் பாய்ந்து செல்லுவதாய் உணரலாம்.
ஆன்மீகமும் நாத்திகமும் ஒன்றுசேர்ந்து அரவணைத்துச் செல்லுமோ? இரண்டு தண்டவாளங்கள் இணையக் கூடுமோ, ஆனாலும் விட்டுக்கொடுக்கும் அன்பு எங்களை இணைத்தது என்கிறார்.
"கோவிலுக்கு அழைப்பாள், செல்லுவேன். ஆயினும், கோவிலுக்குள் செல்லாமல், கோயில் நுழைவாயில் நிற்கும் காவல் தெய்வம் போல், வாசலிலேயே நின்று, என் அலைபேசி பார்த்து பொழுதுபோக்கி அவள் வருகைக்காகக் காத்திருப்பேன். திருமணநாள் மட்டும் அவள் விருப்பத்தின்படி திருப்பரங்குன்றம் சென்று, வள்ளி தெய்வானை, கார்த்திகேயனுக்கு மாலை போட்டுத் திரும்புவோம்" என்று நினைவுறுத்துகின்றார்.
வள்ளுவப் பெருந்தகை, "இவர் மனைவி சித்ராவைப் போன்றோரை எண்ணித்தான் அன்றே,
"தற்காத்துக் கொண்டாற் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்"
என்று பாடினாரோ, என நாம் எண்ண வேண்டியுள்ளது. அந்த அளவிற்குத் தனது மனைவி இருந்தாள்" என வருந்திப் புலம்புகின்றார்.
விக்கல் நோயால் அவதிப்பட்ட தனக்கு, "திரு.இறையன்பு அவர்கள் காட்டிய கனிவும், பரிவும், உதவியும், ஆலோசனையும் எனது இல்லாள் என் மீது கொண்ட பக்தியும், அவளின் அயராத தொண்டும் என்னைக் காத்தது" என்கிறார்.
"நான் பகுத்தறிவாளன். ஆகவே எங்கள் திருமணத்தை அய்யர் வேதம் ஓதாமலே நடத்தினேன். என் போன்ற கொள்கையோர் வாழ்த்தி பேசினார்கள். வீட்டிற்கு வந்து கல்யாணம் எப்படி நடந்தது? என்று கேட்டேன். என் மனைவியோ படக்கென்று, வந்தவர்கள் பேசிப்பேசி அறுத்து விட்டார்கள்" என்றாராம்.
"வடதுருவமும் வடதுருவமும் சேராது, அது இயற்கை நியதி. ஆனாலும் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். ஆம், அது அன்பின் நியதி" என்கிறார். "நான் இலக்கியத் துறையில் ஈடுபட காரணம் அவள் கொடுத்த சுதந்திரம் தான்" என்கிறார்.
இறுதியாய், "மனைவி எங்கிருந்தோ வந்தவள். அவள் வீடு, பெற்றோர், உறவினர் விட்டு வந்து நம் பெற்றோர், வீடு, உறவினர்களைத் தனதாய் ஏற்று வாழும் அற்புத, தியாகப் பிறவி தான் மனைவி என்றும், உயிரோடு இருக்கும் போதே இதயத்தில் கோவில் கட்டி மனைவியை என்றும் வாழ்த்துங்கள்" என்று நமக்கும் அன்பாய் அறிவுறுத்துகின்றார்.
நண்பர் குழாமும், அவர் இலக்கியத் தொண்டும், திட மனதும் இந்தப் பேரிழப்பை மறக்கச் செய்யட்டும், காலமும் அவருக்குத் துணையாய் இருப்பதாகுக.

கருத்துகள்
கருத்துரையிடுக