ூல் : இறையன்பு பன்முகப் பார்வை தொகுப்பாசிரியர் : முனைவர் ந. முருகேசபாண்டியன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

நூல் : இறையன்பு பன்முகப் பார்வை தொகுப்பாசிரியர் : முனைவர் ந. முருகேசபாண்டியன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி வெளியீடு : விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001 பக்கங்கள் 1136, விலை ரூ. 1200 தொடர்புக்கு : 0422 2382614 90470 87053 ****** முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் 200 நூல்களின் ஆசிரியர். மிகப்பெரிய ஆளுமையான அவரின் பன்முகப் பார்வையை ஒரே நூலில் தொகுத்து வழங்கி உள்ளார் முனைவர் ந. முருகேச பாண்டியன். இவர் நூலகராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர், முனைவர் பட்டம் பெற்றவர், எழுத்தாளர், விமர்சகர் என பன்முக ஆற்றல் பெற்றவர். 23 நூல்களின் ஆசிரியர். சிறந்த வாசிப்பாளர். இறையன்பு அவர்களின் அனைத்து நூல்களையும் படித்து, ஆய்ந்து, ஆராய்ந்து அவற்றில் முக்கியமானவற்றைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ளார். தொகுப்பாசிரியர் முனைவர் ந. முருகேச பாண்டியன் அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது. புகழ்பெற்ற விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்கள் தரமான தாள்களில் தெளிவான அச்சில் மிகச்சிறப்பாக பதிப்பித்து உள்ளார். இந்த ஒரு நூல் படித்தால் இறையன்பு அவர்களின் ஒட்டுமொத்த நூல்கள் படித்த மனநிறைவைத் தருகின்றது. இறையன்பு அவர்களின் படைப்பு மட்டுமன்றி நேர்காணல்கள், வாழ்க்கைக் குறிப்புகள், விருதுகள், அரசுப்பணியில் அவரது செயல்பாடுகள், அவரது நூல்களின் பட்டியல்கள் இறுதியில் இருப்பது கூடுதல் தகவல்கள். பொதுவாக நமது தமிழ்ச்சமுதாயம், ஒருவர் இறந்தபின்பு தான் அவரைக் கொண்டாடும். வாழும் காலத்திலேயே முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் படைப்புகளை வகைப்படுத்தி, சிறப்புகளை வெளிப்படுத்தி படைப்பாளியை கொண்டாடும்வண்ணம் நூலகர் முனைவர் ந.முருகேச பாண்டியன் அவர்கள் இறையன்பு அவர்களுக்கு மகுடம் சூட்டி உள்ளார். நூலாசிரியர் இறையன்பு மனம் போன போக்கில் எழுதிய நூல்களை வரலாறு, இலக்கியம், வாழ்வியல் நூல்கள், அறிவியல் நூல்கள், தகவல் தொடர்பு சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், உருவகக் கதைகள், கட்டுரைத் தொகுப்புகள், பிரதிபலிப்புக்ள், இளைஞர் நூல்கள், அனுபவங்கள், வானொலி உரைகள், வழிகாட்டி நூல்கள், கடித நூல்கள், நகைச்சுவை, சிறுவர் நூல், ஆன்மிகம், கேள்வி-பதில், ஆங்கில நூல்கள், குறுநூல்கள், நேர்காணல்கள், பின்னிணைப்புகள் இப்படி 24 தலைப்புகளில் தொகுத்து உள்ளார். தொகுப்பாசிரியர் நூலகர் என்பதால் நூலகத்தில் நூல்களை வகைப்படுத்தி அடுக்கி வைப்பது போல இறையன்பு அவர்களின் படைப்புகளை அடுக்கி வைத்து இலக்கிய விருந்து வைத்துள்ளார். இறையன்பு அவர்கள் எழுதாத, பேசாத தலைப்புகளே இல்லை என்னும் அளவிற்கு அனைத்தும் எழுதி உள்ளார். திருக்குறள் போல இறையன்பு அவர்கள் அனைத்தும் எழுதி உள்ளார். எல்லாவற்றையும் தலைப்புகளுக்குள் வகைப்படுத்தி தந்துள்ளார் தொகுப்பாசிரியர். விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் ஐயா அவர்களும் சிறந்த பதிப்புரை எழுதி உள்ளார். "இந்த அறிவுக் களஞ்சியத்தை வாசகர்களுக்கு அளித்து மகிழ்கிற வாய்ப்பை எங்கள் விஜயா பதிப்பகத்திற்கு நல்கியிருக்கிற திரு. இறையன்பு அவர்களுக்கு எங்கள் நன்றி" என்று குறிப்பிட்டு நன்றி பாராட்டி உள்ளார். முனைவர் பட்டம் பெற்றுள்ள தொகுப்பாசிரியர் ந.முருகேச பாண்டியன் அவர்கள், அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலரின் முனைவர் பட்ட ஆய்வுக்கு உதவியவர் என்பதால் முனைவர் பட்ட ஆய்வுபோல் இந்நூலையும் தொகுத்து உள்ளார். ஆய்வு செய்திடும் ஆய்வு மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல். அறிவுக்களஞ்சியம் என்பது உண்மையிலும் உண்மை. அள்ளஅள்ளக் குறையாக அறிவுப் பெட்டகமாக நூல் உள்ளது. இறையன்பு ஐயாவின் நூல்கள் படித்து இறையன்பு கருவூலம் ஒன்று, இரண்டு நூல்கள் எழுதியவன் நான். இருப்பினும் இந்த நூல் படிக்கும் போது, புதிதாகப் படிப்பது போன்ற உணர்வையே தந்தது. இறையன்பு ஐயா அவர்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரு நூலில் எழுதியதை மறுநூலில் எழுத மாட்டார். கூறியது கூறுதல் அவரிடம் இருக்காது. அள்ள அள்ள வரும் அமுதசுரபி போன்றது அவரது மூளை. நாளும் புதுப்பது கருத்துக்களை, அறக் கருத்துக்களை எழுதியும் பேசியும் வருபவர். இறையன்பு ஒருவரைத் தவிர, வேறு எவரும் கதை, கவிதை, நாவல், கடடுரை என பன்முக ஆற்றல் பெற்றவர் யாருமில்லை, அதைப்போல பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் தனிமுத்திரை பதித்து சகலகலா வல்லவராக விளங்கி வருகிறார். நினைவாற்றல் மிக்கவராகவும் உள்ளார். சங்க இலக்கியப் பாடல் வரிகளைக் கூட, கையில் ஒரு குறிப்பு இல்லாமல் பேசும் ஆற்றல் மிக்கவர். மிகப்பெரிய ஆளுமையான இறையன்பு அவர்களின் படைப்புகளை, 24 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி தொகுத்து வழங்கி உள்ளார் நூலாசிரியர் முனைவர் ந.முருகேச பாண்டியன் அவர்கள். வேறு எந்தவொரு எழுத்தாளருக்கும் வாழும் காலத்திலேயே இதுபோன்று ஒரு பெரிய நூல் வந்தது இல்லை. இறையன்பு அவர்களின் படைப்புகளில் உள்ள சிறந்த பக்கங்களை தொகுத்து வழங்கி உள்ளார். ஆங்கில நூல்களையும் தொகுத்துத் தந்துள்ளார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஒரே நூலில் 24 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தி உள்ளார். வகைப்படுத்தி இருப்பதைக் கண்டு வியந்து போனேன். 'இறையன்பு அவர்களின் என்சைக்ளோபீடியா இது' என்றால் மிகை இல்லை. தொகுப்பாசிரியர் முனைவர் ந.முருகேசபாண்டியன் அவர்கள் இரண்டாம் பாகம் எழுதுவதற்கும் இறையன்பு அவர்களின் படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இருவருக்கும் பாராட்டுகள்.

கருத்துகள்