நூல்: மாண்புமிகு மனைவி நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: கோ.பத்மாவதி

நூல்: மாண்புமிகு மனைவி நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: கோ.பத்மாவதி வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com கவிஞர் இரா.இரவி அவர்கள் தனது இல்லாள் மறைவைத் தாங்க முடியாத துயரத்தை ‘மான்புமிகு மனைவி’ நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். கவிஞரின் இளமைக் காலம் முதல் இன்று வரை மனைவியோடு வாழ்ந்த வாழ்க்கையைப் பதிவிட்டுள்ளார். ‘NO LIFE WITHOUT WIFE’ என்று கூறுவார்கள். உண்மைதான். கவிஞருடைய ஒவ்வொரு வரிகளும் அவரின் வெறுமையை வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் சித்ரா அம்மா தனது பிறந்த வீட்டு சொந்தங்களுடனும், புகுந்த வீட்டு சொந்தங்களுடன் மிகவும் இனிமையாக இருந்ததை கவிஞர் நினைவு கூர்ந்துள்ளார். அவர் தன் இல்லாள் தெய்வத்திருமதி ஜெயசித்ரா அம்மாவுடன் வாழ்ந்த இனிய நாட்களை கூறுவதிலிருந்து மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற பகுத்தறிவுவாதியான கவிஞர் அவர்கள் திருக்கடையூர் கோயிலில் திருமணம் செய்து கொண்ட நிகழ்வையும், ஒவ்வொரு ஆண்டு திருமண நாளன்றும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றதையும் பதிவிட்டுள்ளதிலிருந்து இன்னும் பல ஆண்டுகள் அண்ணியார் அவர்கள் சகோதரர் திரு.இரா.இரவி அவர்களுடன் இருக்காமல் போய்விட்டாரே என எண்ணத் தோன்றுகிறது. கவிஞன் யானோர் காலக் கணிதம் கருபடு பொருளை உருப்பட வைப்பேன் எனத் தொடங்கும் கண்ணதாசன் கவிதையில் இறைவன் படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிகின்றான். நானும் கவிதையைப் படைத்தல், மக்களுக்கு நல்லறிவுப் புகட்டுதல், மக்களின் மனதில் உள்ள தீய சிந்தனைகளை அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கின்றேன்’ என்று கவிஞர்களை இறைவனுக்கு நிகரெனப் புகழ்ந்து பாடிய கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு புகழ் வணக்கமாக கவிஞர் இரா.இரவி படைத்த கவிதையில் கீழ்க்காணும் வைர வரிகளை எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தைத் திரைப்பாடலில் வைத்தாய் சாமானியருக்கும் புரிந்திடப் பாடல் படைத்தாய்! கம்ப இராமாயண கருத்துகளையும் கவிச்சாறாகப் பாட்டில் பிழிந்தவன் நீ! ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பிய பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரனாருக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் புகழ் வணக்கம் செய்துள்ளார். பாட்டாளியாகப் பல தொழில் பார்த்துணர்ந்து பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வைத்தவர்! எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென இனிய பொதுவுடைமைக் கருத்தை விதைத்தவர்! திருக்குறளுக்கு எளிய உரை எழுதியதுடன் தொலைக்காட்சியின் வாயிலாக சிறு குழந்தைகள் மனதிலும் திருக்குறளை உரையுடன் கொண்டு சேர்த்த தமிழன்னையின் தகைசாலர் சாலமன் பாப்பையா என்பதே உண்மை. பட்டிமன்றம் என்றவுடன் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைவருக்கும் நினைவிற்கு வரக்கூடிய உலகப்புகழ் சாலமன் பாப்பையா அவர்களுக்கு புகழ் வணக்கமாக தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அவர்கள் எழுதியுள்ள கவிதையை மிக அருமையாகப் படைத்துள்ளார். அணிந்துரைக்காக ஆயிரம் காசோலை வந்ததை அறமன்று திருப்பி அனுப்பிடச் சொன்னாய்! அறத்தோடு வாழ்ந்திட அறுமனச் செம்மல் அறம் பொருள் இன்பம் தினமும் சொன்னாய்! சிந்தனை மிக்க நூல்கள் பல எழுதினாய் சிந்திக்க வைத்து சிந்தனை விதைத்தாய்! தமிழ்ச் செம்மல் கவிஞர் இரா.இரவி அவர்கள் சமுதாயத்தில் வாழும் அனைத்து நிலை மக்கள் மனதிலும் நிலைத்து நிற்கின்ற ஆளுமைகளுக்காக இந்நூலில் கவிதைகளை வடித்து பாமாலை சூட்டியுள்ளார். ‘நானும் அவளும்’ என்னும் கவிதையில் இல்லதென் இல்லவள் மாண்போடு விளங்கிய கவிஞரின் இல்லாள் தெய்வத்திருமதி. ஜெயசித்ரா அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையின் பல நினைவுகளை (வேற்றுமைகளை) கூறி ஒற்றுமையுடன் வாழ்ந்ததை அழகாகப் பதிவிட்டுள்ளார். எங்களுக்குள் பத்துப் பொருத்தம் இருப்பதாகச் சொன்ன எங்கள் ஊர் சோதிடன் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. பல தம்பதிகளும் கூறக்கூடிய இந்த வரிகளை கவிஞர் இரா.இரவி அவர்கள் அழகாகப் பதிவிட்டுள்ளார். இழப்புகள் வரலாம் சோகங்கள் நிகழலாம் எதையும் தாங்கிடும் உள்ளம் வேண்டும்! கவிஞர் அவர்களின் இல்லாள் ஜெயச்சித்ராவாக சென்று சித்ரனாக திரும்பி வந்த உறவே கவிஞர் ஐயாவின் கைகளிள்ள பெயரன். குழந்தையின் முகத்தில் இல்லாளைப் பார்த்து தொய்வின்றி தமிழ்ப்பணி ஆற்றிடுங்கள் ஐயா

கருத்துகள்