நடிகர் திலகத்தின் பிறந்தநாள்*
சிவாஜிதான் இந்திய சினிமாவின் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் என்பார்கள். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்க, அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.
நாடகத்தில் சிவாஜி முதன் முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்று கொண்டு ராமனை வெட்கத்தோடு பார்க்கும் சீதையின் வேடம் தான் அவருக்கு முதலில் கிடைத்தது. அதை அற்புதமாகச் செய்து அத்தனை பேரின் கவனத்திற்கும் உள்ளானார். அதுவரை வி.சி.கணேசன் என்ற பெயரில் தான் இருந்தார். சத்ரபதி சிவாஜி படத்தில் நடித்ததைப் பார்த்தார் பெரியார். ’நீ இன்று முதல் சிவாஜி கணேசன்’ என அன்போடு கட்டியணைத்துச் சொன்னார் ஈ.வெ.ரா.
அன்று முதல் வி.சி.கணேசன் சிவாஜி கணேசன் ஆனார்.
வ.உ.சி-யாக சிவாஜி நடித்ததைப் பார்த்துவிட்டு வ.உ.சி-யின் மகன் எங்க அப்பாவைப் பார்த்தது போல் இருக்கிறது என்று சிவாஜியிடம் சொன்னார். அதையே கடைசி வரை தன் வாழ்நாளுக்கான பாராட்டாக நினைத்தார் சிவாஜி.
பல நூறு படங்களில் நடித்திருக்கிறார். ஒரு நாள்கூட படப்பிடிப்புக்குத் தாமதமாகச் சென்றதில்லை. வீட்டில் இருந்தே மேக்கப் போட்டுக்கொண்டு சரியான நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்தடைவார். அந்தக் காலம் தவறாமையை
இப்போதுவரை மற்ற நடிகர்கள் தொட முடியவில்லை என்பது உண்மை.
தெய்வமகன், கௌரவம், பாசமலர், பலே பாண்டியா, வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள், ஆலயமணி, சிவந்த மண், பாரத விலாஸ் என்று, நடிப்புக்காக, அப்பாத்திரமாகவே வாழ்ந்த சிவாஜியின் படங்களில் எதைச் சொல்வது என்று தெரியவில்லை.
ஆனால்..,
வெள்ளை வேஷ்டி, தோளில் ஒரு துண்டு, அரைக்கை சட்டையுடன் ஊர் தலைவராக மலைச்சாமியும்,
தும்பை பூ வெள்ளையில் பருத்தி வேஷ்டி, சட்டையோடு கம்பீரமாகவும், யதார்த்தமாகவும் வலம் வரும் பெரிய தேவரும் தான், இன்றளவும் எனது மனதை விட்டு நீங்காத பாத்திரங்கள்.
இங்கிலாந்திலிருந்து,
சங்கர்

கருத்துகள்
கருத்துரையிடுக