நூல் : இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம் நூல் ஆசிரியர் : கவிதாயினி பா, மகாலெட்சுமி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
நூல் : இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்
நூல் ஆசிரியர் : கவிதாயினி பா, மகாலெட்சுமி
நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
9, பிளாட் எண் 1080A,
ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், மேற்கு, சென்னை-600 028. அலைபேசி : 93414 46650 பக்கங்கள் : 100 விலை ரூ.130
******
நூலாசிரியர் கவிதாயினி பா. மகாலெட்சுமி அவர்கள். த.மு.எ.க.ச. மேடைகளில் கவிதை முழங்குவதைக் கேட்டு இருக்கிறேன். எப்போது கவிதை பாடினாலும் தந்தை பெரியார் பற்றி பாடாமல் இருக்க மாட்டார். பகுத்தறிவாளர், அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூல் இந்நூல், புதுக்கவிதை விருந்து வைத்துள்ளார்.
காத்திரமான கவிதைகள், சிந்திக்க வைக்கும் சொற்கள், விசித்திரமான உவமைகள், கிராமிய மொழிகள், காதல், கனிவு என எல்லாம் உள்ளன. கவிதைகளில் வித்தியாசமான புதுக்கவிதைகள். யார் போலவும் இல்லாமல் தனிக்கென தனிபாணி அமைத்து புதுமையாக எழுதி உள்ளார். சில கவிதைகள் பிடித்துப்போய் திரும்பவும் வாசிக்க வைக்கும் ஈர்ப்புடன் உள்ளன சொற்கள்.
“செய்வதறியாத சில நேரங்கள்” என்ற முதல் கவிதையின் முடிப்பில் உள்ள வைர வரிகள் இதோ!
மானிடர்களின் வாழ்வென்பது
சமரசம் கொண்டது
தூண்டிலில் சிக்கிய மீனுக்கும்
பசி கொண்ட தூண்டில்காரனுக்குமாக!
வாழ்க்கை பற்றி சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.
கனவானவைகள்
இப்போதெல்லாம் / அம்மா அடிக்கடி கனவில் வருகிறாள் /
விற்றுவிட்ட பூர்வீக வீட்டின் அடுப்படித்தனலில் /
முற்றிய கத்தரிக்காய் சுடுகிறாள்
அப்பாவுக்கு பிடித்த புளித்தொக்குக்காக! /
ஈன்ற பசுவின் / வீடு சென்று / சீம்பால் வாங்கி
வெல்லமிட்டு காய்க்கின்றாள்
இப்படியே வளரும் கவிதை இப்படி முடிகின்றது.
ஏனோ கேட்க மனமில்லை
அவள் உத்திரத்தில் தொங்கிய
கதையை மட்டும்.
கனவில் அம்மா வருவது, விற்றுவிட்ட வீடு எல்லாம் வரும் கனவில். நடந்த நிகழ்வுகளை அசைபோட்டு முடிப்பில் சோகத்தைச் சொல்லி நிமிர வைக்கிறார். சீம்பால் பற்றி இன்றைய நகரத்து மக்களுக்கு தெரிவதில்லை. அதனை உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் சுவை. அவற்றை நினைவுபடுத்தி வெற்றி பெறுகின்றார். நூலாசிரியர் கவிதாயினி பா. மகாலெட்சுமி அவர்கள்.
‘இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக வைத்துள்ளார். கவிதைகளும் அறியாமை இருட்டிலிருந்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சுவதாக உள்ளன. பாராட்டுகள்.
தேவதைகளின் வேண்டுகோள்
பெரும்பாலும் / இவர்கள் மௌனித்தே இருக்கும் /
கடவுள்களின் சாயல் கொண்டவர்களாகவே
சித்தரிக்கப்பட்டவர்கள் பாவம்!
கடவுள் போலவே தேவதைகளும் மௌனமாகவே இருப்பார்கள். நல்ல உவமை. கடவுள் பேசுவதில்லை, தேவதைகளை பேச விடுவதில்லை, நுட்பமாக சிந்தித்து சொற்களைப் பயன்படுத்தி உள்ளார்.
சந்திப்பின் களம்
வலிக்க வலிக்க / வழியனுப்பி வைக்கையில்
படபடக்கிறது / முடிவு செய்யப்படாத
அடுத்த சந்திப்பிற்காக / நம்மிருவர்
கண்களும்
காதலர் இருவர் பிரியும் தருணத்தை கண்ணியமான சொற்களின் மூலம் விவரித்து கண்களில் கண்ணீர் வரவழைக்கும் ஆற்றல்மிகு வரிகள்.
குறுங்கவிதைகளும் நூலில் உள்ளன.
இருப்பைத் தக்க வைக்க
எச்சலில் கட்டிய கூடு
எதிரிகளை வீழ்த்த / எழுப்பிய வீடு
இது சிலந்தியின் வீடல்ல
சிறு பூச்சியின் பெருங்காடு!
சிலந்தி வலையை சிறுபூச்சியின் பெருங்காடு என்கிறார். இதுவரை யாருமே இவ்வாறு சொன்னதில்லை. வித்தியாசமாக சிந்திக்கிறார், சிறுபூச்சிக்கு பெருங்காடு தான் சிலந்தி வலை. பூச்சியின் கண்ணோட்டத்தில் சிலந்தி வலையைப் பார்த்த பார்வை சிறப்பு.
வெற்றி என்பதெல்லாம்
வீரத்துக்கு அழகு
காதலில் விழுவதெனும்
மேன்மை பழகு!
சுருக்கமான சொற்களின் மூலம் காதலின் மேன்மையை மென்மையாக உணர்த்தி விடுகிறார். வீரத்திற்குத் தான் வெற்றி அழகு, காதலுக்கு வீழ்வதே அழகு என்கிறார். காதலில் விழுவதும் மேன்மை என்கிறார்.
இன்று
புதிதாய் துளிர்விட்ட
வெற்றிலைக்கு
உன் முகச்சாயல்!
எங்கு, எதைப் படித்தாலும் நீயாகவே தெரிகிறாய் என்பார்கள். அதுபோல் துளிர்விட்ட வெற்றிலையில் உன்முகம் என்கிறார். வெற்றிலைக்கும் முகத்திற்கும் தொடர்பில்லை என்றபோதும் காதல்வயப்பட்டால் காட்சிகள் மாறும், கற்பனை கூடும் என்பதை உணர்த்தி உள்ளார்.
நிலவைக் காட்டி
சோறூட்ட யாரும் வராததால்
வருத்தப்பட்டே இரவைச் சுமக்கிறது
நிலவு
நிலவைக் காட்டி சோறூட்டியது அக்காலம். அடுக்கக வாழ்க்கையில் நிலாவே தெரிவதில்லை. நிலாவைக் காட்டி சோறூட்ட அம்மாக்களுக்கும் பொறுமை இல்லை. அலைபேசியைக் கொடுத்து சோறூட்டி விடுகின்றனர். இதனால் வருத்தத்தில் நிலா என்கிறார்.
என் கவிதைகள் என்பது
வேறோன்றுமில்லை
மரக்கால் அளவு
பத்திரமாய் வைத்து விட்டுப்போன
என் முன்னோர்களின்
விதைச் சொற்கள்!
நூலின் இறுதியில் தன் கவிதைக்கான விளக்கத்தை விளக்கி உள்ளார். மரக்கால் என்னவென்று தெரியாது இன்றைய இளையதலைமுறைக்கு முன்னோர்களின் விதைச்சொற்கள் விதைத்து புதுக்கவிதைத் தோட்டம் செய்துள்ளார். பாராட்டுகள், வாழ்த்துகள், தொடர்ந்து எழுதுங்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக