Mehar Nithyan
AI-ஆ? மருத்துவமா? மனித சமுதாயத்திற்கு உண்மையான ஆபத்து எது?
இன்று உலகம் முழுவதும் ஒரு கேள்வி பேசப்படுகிறது:
“AI மனித சமுதாயத்திற்கு ஆபத்தாக மாறுமா?”
ஆனால் அதைவிட முக்கியமான ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டும்.
நம்முடைய மனம், மூளை, உணர்வுகள், பயம், மனஅழுத்தம் மற்றும் மனித ஆற்றலைப் பற்றி நாம் போதுமான அளவு புரிந்துகொண்டிருக்கிறோமா?
சமீபத்தில் நான் சந்தித்த ஒரு 25 வயது இளைஞரின் அனுபவம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.
அவர் குறைமாதத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் சில வளர்ச்சி தாமதங்கள் இருந்தன. அதன்பிறகு பல மருத்துவமனைகள், மருந்துகள், பல்வேறு சிகிச்சைகள், ஐந்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் என அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி உடல்நலத்தைச் சுற்றியே நகர்ந்திருக்கிறது.
ஆனால் அவரிடம் நான் பேசியபோது இன்னொரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தேன்.
பயம்.
தன் உடலைப் பற்றிய பயம்.
உடல்நிலையைப் பற்றிய பயம்.
“எனக்கு என்ன ஆகுமோ?” என்ற பயம்.
பல வருடங்களாக ஏற்பட்ட மருத்துவ அனுபவங்கள் மற்றும் உடல்நிலை குறித்த நிச்சயமின்மையால் உருவான பயம்.
Psychotherapy மூலம் அவரது பயம், பதற்றம், உடலைப் பற்றிய விழிப்புணர்வு, relaxation மற்றும் எண்ணங்களை அணுகும் விதம் ஆகியவற்றில் வேலை செய்ய ஆரம்பித்தோம்.
அடுத்தடுத்த அமர்வுகளில் அவர் மனதளவில் அமைதியாக இருப்பதாகவும், உடலை அதிக நம்பிக்கையுடன் அணுக முடிவதாகவும், சில உடல் அசௌகரியங்கள் குறைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த அனுபவம் எனக்கு ஒரு முக்கியமான உண்மையை மீண்டும் நினைவூட்டியது:
இது Medicine vs Psychotherapy என்ற போட்டி அல்ல.
அதே நேரத்தில்,
ஒவ்வொரு உடலுக்கும் பின்னால் ஒரு மனம் இருக்கிறது.
ஒவ்வொரு வலியையும் அனுபவிப்பது ஒரு மனிதன்.
ஒவ்வொரு diagnosis-ஐயும் கேட்பது ஒரு மனம்.
ஒவ்வொரு surgery-யையும் எதிர்கொள்வது ஒரு மனம்.
ஒவ்வொரு நிச்சயமின்மையையும் சுமப்பதும் ஒரு மனம்தான்.
அதனால் கேள்வி,
“Medicine வேண்டுமா? Psychotherapy வேண்டுமா?” என்பதல்ல.
கேள்வி:
“நாம் முழுமையான மனிதரை கவனிக்கிறோமா?”
இதற்கான விழிப்புணர்வு பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பாடங்களுடன் சேர்த்து,
எண்ணங்கள் எப்படி செயல்படுகின்றன,
உணர்வுகளை எப்படி கையாள வேண்டும்,
மனஅழுத்தத்தை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்,
பயம் வந்தால் எப்படி அணுக வேண்டும்,
மற்றவர்களுடன் எப்படி பேச வேண்டும்,
அன்றாட அனுபவங்கள் மனநலத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஏனெனில் அன்றாட அனுபவங்கள் முக்கியமானவை.
ஒரு கடுமையான வார்த்தை ஒரு அனுபவம்.
தொடர்ச்சியான விமர்சனம் ஒரு அனுபவம்.
அவமானப்படுத்துவது ஒரு அனுபவம்.
புறக்கணிப்பதும் ஒரு அனுபவம்.
அதேபோல்,
அன்பும் ஒரு அனுபவம்.
பாராட்டும் ஒரு அனுபவம்.
அங்கீகாரமும் ஒரு அனுபவம்.
பாதுகாப்பான உணர்வும் ஒரு அனுபவம்.
“நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று ஒருவர் சொல்வதும் ஒரு அனுபவம்.
எல்லா நோய்களையும் அன்பாலும் நேர்மறையான சிந்தனையாலும் எதிர்கொள்ள முடியுமா? கண்டிப்பாக வராமல் தடுக்க முடியும்.
ஆனால் உடலை மட்டும் பார்த்துவிட்டு மனதை மறந்துவிடுகிறோம்.
Technology வளரட்டும்.
AI வளரட்டும்.
Medicine வளரட்டும்.
அதனுடன் மனித புரிதலும் வளர வேண்டும்.
எதிர்கால Healthcare என்பது நோய்க்கு மட்டும் சிகிச்சை அளிப்பதாக இருக்கக்கூடாது.
அந்த நோயை அனுபவித்துக் கொண்டிருக்கும் மனிதரையும் புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும்.
நாம் ஒருவருக்கொருவர் கொடுக்கும் அன்பு, மரியாதை, அங்கீகாரம், பாதுகாப்பு மற்றும் நல்ல அனுபவங்களும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன.
மருந்தை மட்டும் பார்க்காதீர்கள்.
மனதையும் பாருங்கள்.
நோயை மட்டும் பார்க்காதீர்கள்.
மனிதரையும் பாருங்கள்.
அதுதான் நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய மிக முக்கியமான விழிப்புணர்வு.
உளவியல் பேசுவோம்! உடல்நலம் கொண்டாடுவோம்

கருத்துகள்
கருத்துரையிடுக