நூல் : பள்ளி மாணவர்களுக்கான இறையன்பு சிறுகதைகள் தேர்வும் தொகுப்பும் : முனைவர் ந. முருகேசபாண்டியன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

நூல் : பள்ளி மாணவர்களுக்கான இறையன்பு சிறுகதைகள் தேர்வும் தொகுப்பும் : முனைவர் ந. முருகேசபாண்டியன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், பக்கங்கள் : 60 விலை ரூ.75 ****** இறையன்பு அவர்கள் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர். கவிதை, கதை, நாவல், கட்டுரை என எழுதிடும் பன்முக ஆற்றலாளர். அவர் எழுதிய கவிதைகளிலிருந்து முத்தாய்ப்பாக 7 கதைகளை தேர்வு செய்து தொகுத்து நூலாக வழங்கி உள்ளார். எழுத்தாளர் முனைவர் ந. முருகேசபாண்டியன். உலக அதிசயங்கள் 7, அதுபோல முத்திரைக்கதைகள் 7 தொகுத்து வழங்கி உள்ளார். பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, அனைவருமே படிக்க வேண்டிய கதைகள். இந்த நூல் குறித்து மதுரை செஞ்சுரி புத்தக வாசகர் வட்டத்தில் பேசினேன். அதனால் நூலை ஆழ்ந்து படித்து, பிடித்த காரணத்தால் கதை மாந்தர்கள் என் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டார்கள். இந்த நூலை படிக்கும்போது கதைகள் படிப்பதாகவே தெரியவில்லை. உண்மையிலேயே நிகழ்வுகளை பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தகின்றன. அவ்வளவு நுட்பமாக எழுதி உள்ளார். இதில் பல கதைகள் முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்களின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளையே கதையாக்கி இருப்பதால் மாணவர்கள் மனதில் கதையாடல் நிலைத்து விடுகின்றன. ஒவ்வொரு சிறுகதையின் மூலம் நம் மனதில் அறக்கருத்துக்கள் நன்கு பதிந்து விடுகின்றன. அறிவுரைகள் உள்ளன. முதல் கதை “வையாபுரி தாத்தா”. தாத்தா ஊதாரித்தனமாக இருக்கிறார், செலவு செய்து விடுகிறார், முதல் மனைவி மகன் சாராயக்கடை ஏலம் எடுத்து, நொடித்து கடனாளி ஆகிறான். தாத்தா, வேண்டாம் என எச்சரித்த போதும், சாராயக்கடை எடுத்து விடுகிறான், கடனுக்காக சொத்துக்களை விற்று கடனை அடைக்கிறார்கள். இரண்டாவது மனைவியின் மகன் வறுமையில் வாடும்போதும், வேண்டாமென்று மறுத்தபோதும், திருமணம் செய்து வைத்து விடுகிறார். குழந்தை பிறக்கின்றது. பால் வாங்கக் கூட பணமில்லை. வேலை பார்த்து, உழைத்து, பணம் ஈட்டி மேலே வருகிறார். பணத்தின் அருமை உணர்ந்து சிக்கனமாக உள்ளார். இப்படி வளர்ந்த தன் கதையை பேரனிடம் சொல்லி மகிழ்வதாக கதை உள்ளது. ‘வரம் தர வேண்டும்’ என்ற கதையில் வண்ணத்துப்பூச்சியின் மீதான நேசத்தை விளக்குகிறார். சிறுவயது முதல் வண்ணத்துப்பூச்சி ரசிகனான வளருபவன் கல்லூரியில் வண்ணத்துப்பூச்சியை கொலை செய்ய மறுக்கிறான். கல்லூரி பேராசிரியர் எச்சரித்ததன் காரணமாக வண்ணத்துப்பூச்சியை கொலை செய்கிறான். புழுவாக இருந்து அழகிய பூச்சியாக மாறும் வண்ணத்துப்பூச்சியை காதலிக்கும் நேசத்தை நன்கு உணர்த்தி உள்ளார். வண்ணத்துப்பூச்சியின் வனப்பு அனைவருக்கும் பிடிக்கும், அதுபோல் நூலில் உள்ள கதைகள் வாசகர்களுக்கு பிடித்து விடுகின்றன. நரிப்பல் கதை முனைவர் இறையன்பு வாழ்வில் நடந்த உண்மைக் கதையாக இருக்க வேண்டும். உருக்கமாக எழுதி உள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் நரிக்குறவர்கள் சங்கத் தலைவர் பழனி உடனான நட்பு கதையாக உள்ளது. நரிப்பல் கொண்டு வந்து பழநி கொடுக்கும்போது வாங்க மறுத்து விடுகிறார். சில மாதங்கள் கழித்து பழநி மற்றவர்கள் தந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் ஊதாரித்தனமாக செலவழித்து விடுகிறார். இது வெளியில் தெரியவர பழநியும் அவரது மனைவியும் தற்கொலை செய்து இறந்து விடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் துக்க வீட்டிற்கு சென்று வருகிறார். சில நாட்கள் கழித்து பழநியின் அண்ணன் மகன் பாபு அலுவலகம் வந்து நரிப்பல் கொடுப்பான், ஆட்சியர் மறுக்காமல் வாங்கி வைத்துக் கொள்வார். “திருஷ்டி கழிய அல்ல, பழநியின் ஞாபகார்த்தமாக” என்று கதை முடியும். மிக உருக்கமான கதை, பழநி நம் மனக்கண்ணில் வந்து விடுகிறார். அத்தைகள் கதை படிக்கும் போது வாசகர்களின் அத்தைகள் நிறைவிற்கு வருவது உறுதி, அப்பா அம்மா இருவரும் பணக்கார அத்தையை பரபரப்பாக வரவேற்று உபசரிப்பதும், ஏழை அத்தையை அலட்சியம் செய்வதையும் உணர்த்தி, இது தவறு அனைவரையும் சமமாகவே மதிக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் கதை. “சிறகுகள் வேண்டும்” கதை சிறகுகள் வெட்டப்பட்ட கிளியை வாங்கி விடுகிறார். மனைவி எதற்கு வாங்கினிர்கள் என்று திட்டுகிறார். அவரது மகள் நேசிக்கின்றது, கிளி பேசுவதைக் கேட்டு மனையும் கிளியை நேசிக்கத் தொடங்கி விடுகிறாள். சிறகு முளைத்ததும் கிளி பறந்து சென்று விடுகிறது, பாசமாக வளர்த்த கிளி பறந்து சென்றதும் அனைவரும் சோகத்தில் மூழ்குகின்றனர். பறவை நேசத்தை உணர்த்திடும் கதை. நின்னினும் நல்லன் கதை நெகிழ்ச்சியான கதை, ஒருவர் கடன்பட்டு தவிக்கும்போது 3 இலட்சம் தந்து உதவுகிறார். அதற்கு பதிலாக நிலத்தை விற்று விடுகிறார். நிலத்தை சில ஆண்டுகள் கழித்து, ஒரு கோடிக்கு விலைக்கு கேட்டார்கள். இவருக்கு மனசாட்சி ஒத்துக் கொள்ளாமல் நிலத்தை விற்றவரிடம் நீங்களே வாங்கி ஒரு கோடிக்கு விற்று எனக்கு 3 இலட்சம் கொடுங்கள் என்கிறார். அவரோ கோபம் கொண்டு விற்றது விற்றது தான். நிலம் பற்றி பேசிட இங்கு வராதீர்கள் என்று சொல்லி நம் மனதில் நிற்கிறார். அரிதாரம் கதை, நாய்கள் பற்றி கதை என்றாலும், குறியீடுகளாக நாய்கள் உள்ளன. நான் நாய்களுக்கு பதிலாக மனிதர்களையே கற்பனை செய்து கொண்டேன். மொத்தமாக மறக்க முடியாத கதைகள் எழுதிய முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களுக்கும், தொகுதிட்ட முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்களுக்கும் பாராட்டுகள் -- .

கருத்துகள்