படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

ஆயிரங்கால் மண்டப கண்காட்சி அமைந்த கதை! +++++++++++ # செ. அபுதாகிர் # மதுரை மீனாட்சியம்மன் கோயில் செல்கிற அத்தனை பேரும் அவசியம் ஆயிரங்கால் மண்டபத்தையும், அதற்குள் கண்காட்சியையும் கண்டு வர மறப்பதில்லை. ஆனால் இங்கு கண்காட்சி உருவான கதை அலாதியானது.... மதுரை கலெக்டராக டிஎன் சேஷன் இருந்தபோது 1964ல் மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தை சீரமைக்க பிடி ராஜன் தலைமையில் குழு அமைத்தனர். அப்போதைக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்கு அவ்வளவு வருமானமில்லை. உண்டியல் வருவாயும் சொற்பம்தான். ஆனால் இந்த கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வருவாய் அதிகம். எனவே அந்த வருவாயில் மீனாட்சியம்மன் கோயிலும் நடந்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரு நிரந்தர கண்காட்சி வைத்தால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கோயிலையும் கவனிக்கலாம் என முடிவெடுத்து, நவராத்திரி காலத்தில் கண்காட்சி அமைக்க ஏற்பாடானது. முதலில் தற்காலிகமாக கண்காட்சி வைப்பது எனவும், மக்கள் ஆதரவைப் பொறுத்து நிரந்தர கண்காட்சியாக மாற்றலாம் எனவும் முடிவானது. கோயில் கலை வடிவங்களுடன், வழிபாட்டு முறை, சிலைகள், தலபுராண கதைகள் என பல்வேறு தகவல்களுடன் 15பகுதிகளாக கண்காட்சிப் பொருட்களை வைக்க முடிவாகி பணிகள் நடந்தன. இடையில் இந்தியா, பாகிஸ்தான் போர் துவங்கியதால் இப்பணியை விட்டு விடவும் முடிவானது. ஆனால் கலெக்டர் டிஎன் சேஷன் அன்றைய முதல்வர் பக்தவத்சலத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்க, ‘சண்டை நடப்பதற்காக கண்காட்சிப் பணியை நிறுத்த வேண்டாம். இரண்டுக்கும் சம்பந்தமில்லை’ என தெரிவிக்க பணிகள் மீண்டும் வேகமடைந்து கண்காட்சி திறக்கப்பட்டது. நுழைவுக் கட்டணமாக ஐம்பது காசு பெறப்பட்டது. கூட்டம் நிரம்பி வழிந்து, செலவு போக ரூ.ஐம்பதாயிரம் வருவாய் கிடைத்தது. இதன் பின்னர் இந்த கண்காட்சி நிரந்தரக் கண்காட்சியானது. அவ்ளோ தாங்க!

கருத்துகள்