நூல் : வேப்பந்தோப்பில் விரிந்த வள்ளுவம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இ.கி. இராமசாமி ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
நூல் : வேப்பந்தோப்பில் விரிந்த வள்ளுவம் !
நூல் ஆசிரியர் : பேராசிரியர் இ.கி. இராமசாமி !
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
வெளியீடு : பெண்டகன் எண்டர்பிரைசஸ்,
மந்தைவெளி, சென்னை.
பக்கங்கள் 128, விலை ரூ. 150
******
வேப்பந்தோப்பில், பொறியாளர் அகமுடை நம்பி அவர்கள், திருக்குறள் கருத்தரங்கம் நடத்தி, பெற்ற கட்டுரைகளை நூலாக்கி விடுவார். நூலாக்கிட நூலாசிரியார் பேராசிரியர் இ.கி. இராமசாமி அவர்களும் உதவி வந்தார். வருடாவருடம் ஒரு நூல் வந்துவிடும். மீனாட்சி பதிப்பகம் நூலை வெளியிடுவார்கள். பொறியாளர் அகமுடைநம்பி காலமாகி விட்டார். நூலாசிரியர் பேராசிரியர் இ.கி. இராமசாமி அவர்கள், எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.
நூலின் தொடக்கத்தில் நூலாசிரியர் இ.கி. இராமசாமி அவர்களின் வாழ்க்கைத் தகவல்கள் உள்ளன. படித்தால் பிரமிப்பாக உள்ளது. வாழ்வாழ்ந்து வாழ்ந்து, வாழ்வில் பல சாதனைகள் நூல்கள் எழுதிய பெருந்தகையாளர். இந்த நூலில் 14 கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் வேப்பந்தோப்பு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்.
திருக்குறளை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யும் விதமாக சிறப்பான தலைப்புகளை வழங்கி, கட்டுரைகள் பெற்று, கருத்தரங்கம் நடத்தி, வருகை தந்த அனைவருக்கும் மதிய விருந்து அளித்து, உபசரித்து, விழா நடத்தி வந்தவர் பொறியாளர் அகமுடை நம்பி. அவர் பொறியாளராக இருந்தபோதும், திருக்குறள் அறிஞராக இருந்தார். நூலாசிரியர் பேராசிரியர் இ.கி. இராமசாமி, முனைவர் வா.நேரு போன்றவர்களும் துணைபுரிந்து விழா நடத்தி நூல்கள் வெளியிட்டு இருந்தனர். நானும் 4 கட்டுரைகள் தந்து நூலாக வந்தன. நானும் என்னுடையி நூலில் அந்தக்கட்டுரைகளையும் சேர்த்துக் கொண்டேன். பசுமை நினைவுகளை மலரும் நினைவுகளை மலர்வித்தது இந்த நூல்.
இந்த நூலில் உள்ள கட்டுரைகளின் தலைப்பை இங்கே பட்டியலிடுகிறேன். அதை வைத்தே கட்டுரையின் தரத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
(1) திருக்குறளில் பொதுமை (2) தலையாய அறம் (3) குறள் கூறும் குடிமை - சமன்மை (4) விற்றுக்கோள் தக்கது (5) வள்ளுவர் கண்ட தவமும் துறவும் - ஒரு புதுப் பார்வை (6) விதியும் முயற்சியும், ஊழும் ஊக்கமும் (7) முப்பாலில் காமநோக்கு
(8) திருக்குறளில் உயிர்ச்சூழலியல் திறனாய்வு (9) திருக்குறள் - நெஞ்சோடு கிளத்தல், நெஞ்சோடு புலத்தல் (10) ஆய்வு நோக்கில் முப்பால் பாயிரம் என்ற முன்னுரை (11) வள்ளுவம், காந்தியம் ஒரு பருந்துப் பார்வை (12) குறட்பாவும் அருட்பாவும்
(13) திருவள்ளுவர் கண்ட நூலறிவும் வாலறிவும் ஓர் ஒப்பீட்டு அணுகுமுறை (14) வள்ளுவரும் ஜே.கே.யும்.
இப்படி 14 தலைப்புகளில் நூலாசிரியர் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்து தமிழின்பால், திருக்குறளின்பால் ஆழ்ந்த புலமையும் பற்றும் மிக்கவர் என்பதால் தலைப்பிற்கு பொருத்தமான கருத்துகளை தேடிஎடுத்து கடடுரைகள் வடித்துள்ளார். இந்த நூல் படித்தால் திருக்குறளில் இவ்வளவு பொருள்கள் உள்ளனவா என வியந்து போவது உறுதி. கருத்துக் களஞ்சியமாக உள்ள ஒப்பற்ற திருக்குறளை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் கட்டுரைகளை வடித்துள்ளார்.
திருக்குறளின் சிறப்புகளை பல கட்டுரைகளில் சொல்லிவிட்டு, திருவள்ளுவரையும் காந்தியத்தையும் ஒப்பிட்டு அருட்பாவும் ஒப்பிட்டு அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களோடு ஒப்பிட்டு வடித்த கட்டுரைகள் சிறப்பு.
பொருத்தமான திருக்குறள்களை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரைகள் நனிநன்று. ‘ஷேக்ஸ்பியரின் நாடகங்களை விட அவற்றைப் பற்றி எழுந்த திறனாய்வுகள் அவருக்கும் அவருடைய படைப்புகளுக்கும் பெருமை சேர்த்தன. அதுபோல் திருக்குறள் ஆராய்ச்சி கட்டுரைகளும் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்ப்பன என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அறத்தை திருக்குறள் வலியுறுத்திய அளவிற்கு உலகில் வேறு எந்த இலக்கியமும் வலியுறுத்தவில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். அந்த அளவிற்கு உச்சமாக வலியுறுத்திய அறம் பற்றிய 'தலையாய அறம்' கட்டுரை சிறப்பு. அறம் என்றால் என்ன? என்ற விளக்கவுரை நன்று.
நிறைவுரையில், "மனமாக இல்லாது இருப்பது அறம். பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் இருப்பது அறம். மறுமை இன்பத்தை நாடாமல் செய்வது அறம். வறியவர்க்கு ஈதல் அறம். துறவறத்தை விட இல்லறத்தார் செய்வதே தலையாய அறம். பல உயிர்களும் வாழும்படி மனிதநேயத்தோடு பகுத்துண்டு வாழ்வதே நூலோர் தொகுத்துக் காட்டிய அறங்களிலெல்லாம் உயர்ந்த அறம் நல்லறம்". அறத்திற்கான முடிவுரை விளக்கம் அற்புதம்.
பதச்சோறாக அறத்தை எழுதி உள்ளேன். 14 கட்டுரைகளிலும் முக்கியமான ஆசிரியரின் முத்திரைக் கருத்துக்கள் நிரம்ப உள்ளன. திருக்குறளின் மேன்மையை விளக்கும்வண்ணம் கட்டுரைகள் உள்ளன.
மிகப்பெரிய அறிஞர் ஜே. கிருஷ்ண மூர்த்தியோடு திருக்குறளை ஒப்பிட்டு வடித்த கட்டுரையில் நூலின் இறுதியில் உள்ள கட்டுரை- இந்த நூலின் தொடக்கம் அறம். முடிவு ஜே.கே. இந்த இரண்டை மட்டும் எழுதி உள்ளேன். மற்றவற்றை நூலை வாங்கிப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
வினாவிடைப் பாங்கு
வள்ளுவர் இகழ்வாரை நோவது என்ன? எங்ஙனம் ஆளும் அருள? வென்யோகலோ வன்சொல் வழங்குவது என்றெல்லாம் வினாக்கள் கேட்டு விடையும் விளக்கமும் தருவார். அதுபோல ஜே.கே. தமது சொற்பொழிவுளின் போது தாமே வினாக்களைக் கேட்டு விடையும் விளக்கமும் தந்தார். பொழிவுகளின் முடிவில் உரையாடல்கள் நிகழ்ந்த அனுமதித்தார். அன்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையும் விளக்கமும் தீர்வும் சொன்னார். இந்த உறுதி இருவரிடத்தும் இயல்பாக இருந்தது.
இ.கி .இராமசாமி அவர்கள் நூலாசிரியர், பேராசிரியர், சிறந்த கட்டுரையாளர், எழுத்தாளர் மட்டுமல்ல, பிறமொழிச் சொல் கலப்பின்றி நல்ல தமிழில் உரையாற்றும் ஆற்றல் மிக்கவர். பொதுவாக பேசும்போதும் பிறமொழிச் சொல் கலக்காதவர். தூய தமிழ்ப் பற்றாளர். திருக்குறளின் அருமை பெருமையை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து வடித்த இந்நூல் திருக்குறளுக்கு சூட்டிய ஆபரணமாகவே விளங்குகின்றது. பாராட்டுகள்.
--


கருத்துகள்
கருத்துரையிடுக