நூல் : காதல் எனும் ஆன்மாவின் தியானம் நூல் ஆசிரியர் : கவிஞர் கருமலை பழம் நீ நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
<
நூல் : காதல் எனும் ஆன்மாவின் தியானம்
நூல் ஆசிரியர் : கவிஞர் கருமலை பழம் நீ
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : நூலேணி பதிப்பகம்,
28/11, கன்னிக்கோவில் பள்ளம்,
அபிராமபுரம் முதல் தெரு,
சென்னை - 600 018.
பக்கங்கள் 124, விலை ரூ. 150
******
நூலாசிரியர் கவிஞர் கருமலை பழம் நீ அவர்கள், சகலகலா வல்லவர். ஹைக்கூ, புதுக்கவிதை, வசனகவிதை என அனைத்தும் அத்துபடி. அனைத்து வகையிலும் நூல்கள் எழுதி பரிசும், பாராட்டும், விருதும் பெற்றுள்ள மூத்த படைப்பாளி. இந்த நூலின் மூலம் கஜல் வடிவத்தில் கவிதைகள் வடித்து காதல் விருந்து வைத்துள்ளார்.
இந்த நூலை கவிக்கோ அப்துல் ரகுமான், கவியருவி ஈரோடு தமிழன்பன் இருவருக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார். நூலேணி பதிப்பகம் கன்னிக்கோவில் இராஜா சிறப்பாக வடிவமைத்து பதிப்பித்து உள்ளார். கோ.வசந்தகுமாரன் அவர்களும். விமர்சக வித்தகர் சேலம் பொன்.குமார் அவர்களும் அணிந்துரையை சிறப்பாகத் தந்துள்ளனர். தமிழில் முதன்முதலில் கஜல் கவிதைகளைக் கொண்டு வந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான் என்ற தகவலை என்னுரையில் குறிப்பிட்டுள்ளார். கஜல் எனும் புதுமுயற்சியில் கவிதைகள் வடித்து இருப்பது சிறப்பு. நூல் முழுவதும் ‘காதல்!’ ‘காதல்!’. காதல் தவிர வேறில்லை. தலைவன் பாடுவது போலவே பல கவிதைகள் உள்ளன. தலைவி பாடுவது போல சில கவிதைகள் உள்ளன.
உள்ளத்தில் உள்ளது கவிதை, மனதில் பட்டதை அப்படியே எழுத்தாக்கி கவிதையாக எழுதி காதல் விருந்து வைத்துள்ளார். சலிக்காமல், சளைக்காமல் காதலை மட்டுமே பாடி உள்ளார். கவிஞர்களுக்கு முதல் கவிதை நூல் தான், காதல் கவிதையாக இருக்கும். ஆனால் நூலாசிரியர் கவிஞர் கருமலை பழம் நீ அவர்கள் முதிர்ந்த வயதிலும் இளமை துள்ளும் காதல் கவிதைகள் வடித்து இருப்பது பாராட்டுகள்.
‘காதல் எனும் ஆன்மாவின் தியானம்’ என்ற பெயருக்கு ஏற்றபடி காதலைப்பற்றி, காதலியைப் பற்றி மட்டுமே சிந்தித்து கஜல் கவிதைகள் வடித்துள்ளார். வித்தியாசமாகவும் வியப்பாகவும், ரசனை மிக்கதாகவும் கவிதைகள் உள்ளன. பதச்சோறாக சில கவிதைகள் மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ!
காதலி / காதல் மொழி பேசி / கட்டுண்டுக்
கிடப்போம் / காலமெல்லாம் நாம் கண்களில்
வாழ்வோம் / காதலை எவரேனும் அவமதித்தால்
அவதாரம் எடுப்போம் / அடிமைப்படுத்தினால்
எதிர்வினை புரிவோம் / இன்னும் நாம் கயிற்றால்
கட்டப்பட்ட மாடுகள் அல்ல மனிதர்கள்!
ஆம்! ஐந்தறிவு மாடுகள் அல்ல ஆறறிவு மனிதர்கள் என்பதை நினைவூட்டி காதலுக்காக கொடி பிடித்து கவிதைகள் எழுதி உள்ளார். காதலை யாரும் அவமானப்படுத்தக் கூடாது என்கிறார். அவதாரம் எடுப்போம் என்கிறார்.
உன் விழி விளக்கை ஏற்று / இந்த அறை
முழுவதும் / நிறைந்த இருள் அகலட்டும் / உன்
புன்னகையைக் கொஞ்சம் புலரச் செய் /
இது ஆனந்த இரவாகட்டும்!
காதலியின் கண்களை ஒளிவிளக்கு என்கிறார். ‘விழி விளக்கை ஏற்று இருள் அகன்று ஒளி பிறக்கட்டும்’ என்கிறார். ‘ஒளி படைத்த கண்கள் கொண்டவள் காதலி’ என்கிறார்.
முதல் சந்திப்பில் / உன் தோற்றம் / உன் பேச்சு
உன் சிரிப்பு / இன்னும் என் மனத்தில் / வண்ணம்
சித்திரங்களாய் / உன் மனத்திலும் பதிந்துள்ளதா!
‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவான காதலியின் தோற்றம். சிரிப்பு என அனைத்தும் மனதில் வண்ண ஓவியங்களாகப் பதிந்ததாம், காதலியே உனக்கும் என்னைப் பற்றிய நினைவு பதிந்ததா? என கேள்வி கேட்கிறார்.
கண்ணே! காதலெனும் ஆன்மாவின்
தியானம் தொடரட்டும்! / அதுதான் உண்மையில்
வெளிச்ச வாழ்க்கையில் விலாசமாகும்!
இந்த நூலின் தலைப்பிற்கு எழுதப்பட்ட கவிதை இதுதான். ஒளிமயமான, வாழ்க்கைக்கு முகவரியாக. காதல் தியானம் அமையும் என்கிறார். தியானத்தால் பலன் கிடைக்கும் தானே!
ஒரு வெண்மதி முகம் / மலர் போன்ற கண்கள் /
இரண்டு வில்கள் / இடமும் வலமும் / வளைந்த
புருவம் / கார்முகில் கூந்தல் / கொண்டவள்
வருகிறாள் / மார்கழி வைகறையில் / கொதிக்கும்
என் மனத்தை / குளிரச் செய்வாளோ?
நிலா போன்ற முகம், மலரெனக் கண்கள், வில் போன்ற இரண்டு புருவம், கார்முகில் கூந்தல் என காதலியை வர்ணித்து விட்டு, சூடான என் மனத்தை குளிர வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றார்.
உன் / குறுந்தாடி உறுத்தல் செய்கிறது
மீசை என்னை இம்சிக்கிறது / இருந்தாலும்
அதில் ஓர் / சின்னதாய் மின்தூண்டல்
காதல் தீர்ப்பாய் / காமமும் தேனாகிறதே!
தலைவி, தலைவனைப் பார்த்துப் பாடுவது போல சில கஜல் கவிதைகள் உள்ளன. அவற்றில் ஒன்று இது, காதலியின் தாடி. மீசை குத்தி இம்சித்தாலும் அதில் சின்ன மின்தூண்டல் உள்ளதாக காதலியே உரைப்பது போனறு உரைத்தது சிறப்பு.
பார்க்கும் போதெல்லாம் / முகத்திரையுடன்
இருப்பவளே / உன் கண்கள் / என்னை மட்டும்
பார்த்தால் போதுமா? / நான் காணக் கூடாதா?
காதலி எப்போதும் முகத்தை மறைத்தே இருப்பவள் போலும், முகத்திரையிலிருந்து கண்கள் வழியே என்னை நீ பார்க்கிறாய். உன்னை நான் காண்பதற்கு முகத்திரையை விலக்கு என வேண்டுகோள் வைக்கிறார்.
காதலி உன்னிடம் / வேண்டுவது / பெரிதாய்
ஒன்றும் இல்லை! / உணவு வேண்டி
பசித்தவனின் எதிர்பார்ப்பு / மழை வேண்டி
விவசாயியின் கோரிக்கை / அவ்வளவுதான்,
காதலியிடம் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. பசித்தவன் உணவு கேட்பது போல உழவன் மழை கேட்பது போல கேட்கிறேன், அவ்வளவு தான் என்கிறார்.
நீ தானே / மழையில்/ நனைந்து வருகிறாய்!
என் உடல் ஏன் / இப்படி நடுங்குகிறது!
காதலி மழையில் நனைந்து வருவது கண்டு, காதலன் உடல் நடுங்குகிறதாம், அந்த அளவிற்கு ஒற்றுமை என்கிறார். இப்படி ரசனை மிக்க கஜல் கவிதைகள் நூல் முழுக்க உள்ளன. நூலாசிரியர் கவிஞர் கருமலை பழம் நீ அவர்களுக்கு பாராட்டுகள். காதல் ரசம் சொட்டச் சொட்ட பாடி உள்ளார்.


கருத்துகள்
கருத்துரையிடுக