படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நூறு சாமி..-பா.மகாலட்சுமி- எத்தனை சாமிகள் இருந்தாலும் பெண்வாழ்வை துளியும் மாற்றமுடியாத, மாறவைக்க முடியாத இடத்திலிருந்து ஒரு படைப்பு அதிர்வோடு ஒட்டுமொத்த சமூகத்தை அதிர வைத்திருக்கிறது, பேச வைத்திருக்கிறது என்றால் கலை என்பது மக்களுக்கானது என்பதே மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.. திரையில் நான் செல்வியைப் பார்க்கவில்லை, எனது ஊர்களில் கணவனை இழந்து கேட்பாரற்றுக் கிடக்கும் ரத்தமும் சதையுமாக, உணர்வுகளை மென்று ஜீரணிக்க முடியாமல், மனம் அழுந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் பெண்களை பார்க்கிறேன்.. பெண்வாழ்வை அதன் வலியை எந்த முகப்பூச்சும் இல்லாமல் அசல் முகங்களாக காட்டியிருப்பதே இதுவரை இருந்த சினிமாவின் கட்டமைப்பை உடைப்பதாகும். . வயர்கூடையோடு வேலைக்குச் செல்லும் செல்வியும், கரும்புக்காட்டில் அரிவாளோடும் எளிய வாழ்விலும் மகிழ்ச்சியோடு இருக்கும் எழுமலையும், தனித்துவாழும் பெண்ணால் வளர்க்கப்படுகிற இரண்டு மகன்களும் தான் கதையின் நாயகர்கள்.. செல்வியை பகலில் நோட்டமிடுவதும், இரவில் தன்வசப்படுத்தவும் ஆண்செளகர்யங்களால் நிறைந்திருக்கும் சமூகமும் ஊரும் வீடும்தான் இன்னமும் இருக்கிறதென்றால் " இப்பலாம் யாரு சாதி பாக்குறா " எனக்கேட்கும் அபத்தங்கள் கேள்விகளாகும்.. திருமண உறவு என்பதே உணர்வுகளுக்கு வடிகாலாக கட்டமைப்பட்ட சடங்கு என்பதையே மறந்து , உணர்வுகளை அடக்கி ஆளுவதையே சட்டமாக்கிய குடும்ப நிருவனங்கள் பெண்களின் உழைப்பை மட்டுமல்ல அவள் உணர்வையும் தன் தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறது.. மறுமணம் என்பது இருபாலருக்குமானது என்கிற பொதுச்சிந்தனை இன்னமும் கூட பார்க்கமுடியவில்லை, அது வசதிப்படவர்களுக்கும் , விதி மீறுபவர்களுக்கும் மட்டுமே விதித்தது என்கிற போக்கை படம் முழுக்க செல்வி படும் பாட்டை வைத்தே இயக்குநர் சசி மனசாட்சி உலுக்க காட்சிப்படுத்திருக்கிறார்.. இதில் முக்கியமான காட்சிகளாக நான் பார்ப்பது, வேலை.பார்க்கும் இடத்தில் பொட்டு வைத்தே ஆகவேண்டிய சூழலில் வேறுவழியின்றி பொட்டு வைக்கிறாள் , வீடு திரும்பும்போது அதை எடுத்துவிடுகிறாள். அவசரத்தில் ஒருநாள் மறந்துபோயி பொட்டோடு வீடு திரும்பி மகனைப் பார்த்து பேசும்போது மகன் கோபமாக " உன் மூஞ்சியை கண்ணாடியில போயி பாரு " என ஆவேசமாக திட்டும் காட்சியில் ஆண்களின் பிரதிநிதியாக நிற்கிறான் மகன்.. "அடுத்த தலைமுறைப் பெண்களுக்காகவாவது நீ மறுமணம் செய்துக்கனும் " என தேவாலயத்தில் கன்னியாஸ்த்ரி ஒருவரின் போதனையால் அம்மாவின் துயர்துடைக்க மனம் மாறிவிடும் பையனின் இந்த வார்த்தைதான் ஒட்டுமொத்த கதைக்கான கரு.. "நமக்கு அடங்கிக் கிடக்கும் வரைக்கும் பொம்பளங்க நம்மளோட வாழ்வாங்க, பயம் போயிடுச்சுன்னா பிடிச்சவனைத் தேடி கல்யாணம் பன்னிக்குவாளுக " வெள்ளை வேட்டியோடு ஊருக்குள் திரியும் பிற்போக்குத்தனமான பெரிய மனிதர்கள் நம்முடன் உலவிக்கொண்டே இருக்கிறார்கள் பெண்களின் வாழ்வை அழித்துக்கொண்டே.. காதல் திருமணங்களை மட்டுமல்ல, பெண்கள் மறுமணம் செய்ய நினைத்தால் கூட " ஆணவக்கொலை " செய்ய குடும்பங்கள் தயாராக இருக்கிறது என்பதை காட்டும் காட்சி நெஞ்சை அப்படியே உலுக்கி விடுகிறது.. " இந்த வயசுல உனக்கு கல்யாணம் கேக்குதா, இன்னும் அடங்கலியா " என கேட்கும் அம்மாவிடம், " அறுபது வயசுலயும் எனக்கு துணையா இருன்னு சொன்னா வரமாட்ற, உன் புருசனோட தான இருக்க , உனக்கு இன்னும் அடங்கலியா .." என கேட்டுவிடும் செல்வியை கழுத்திருக்கி கொல்லத் துணியும் காட்சியில் பெத்த அம்மாவே கொலைக்கு துணைபோகத் துணிந்து கத்தவிடாமல் வாயை மூடுகிறாள், ஆனால் நம் மனசாட்சியின் குரல் மட்டும் சத்தமாகப் பேசுகிறது, இந்த இடத்தில் செல்வியின் கேள்விக்கு திரையங்கில் இளைஞர்களின் விசில் பறந்ததைப் பார்த்தேன், நான் நிம்மதியடைந்த இடம் இது. இங்கே எல்லோருக்கும் மனசாட்சி இருக்கிறது, அதை யாராவது தூண்டிவிட வேனும் அவ்வளவுதான்.. நூற்றுக்கணக்கான வருசங்களாக ஆயிரக்கணக்ககான லிட்டர் எண்ணெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றப்படுகிற கார்த்திகை விளக்குகள், ஒருநாளும் ஒருபொழுதும், பெண்வாழ்வை இருட்டறையிலிருந்து வெளிச்சத்திற்கு வரவைக்க முடியவில்லை, ஆனால் ஒரே ஒரு படைப்பு எங்கோ ஒரு பெண்ணின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவருமெனில் அந்த படைப்பாளனின் கதையெழுதிய கைகளை தொட்டு வணங்கலாம்.. இன்னும் இன்னும் தனித்த பெண்களின் வலிமிகுந்த பகுதிகள் நிறைய இருக்கு. சினிமாவில் இவ்வளவுதான் சொல்லமுடியுமென்பதால் விடுபட்ருக்கலாம்.. ஏழுமலை என்கிற விஜய் ஆண்டனி ப்பா.. மனுசனை திரையில் பார்த்ததுமே ஒரு நம்பிக்கை வந்தது பாருங்க, கொடுத்த கதாபாத்திரத்தை சாதாரணமாக போகிற போக்கில் வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்காக மகன் வந்து பேசும் இடத்தில் " அப்பா , எங்களுக்கெல்லாம் நீங்கதான்பா இப்ப சாமியா இருக்கனும் " என சொல்லும் இடத்தில் ஒரே ஒரு வார்த்தை " பாத்துக்கலாம் பா " என கைத்தட்டல் வாங்குகிறார்.. ஹீரோயிசம் என்பது வில்லன்களிடம் சண்டையிடுவது, பேருக்கு ஹீரோயினியை காண்பித்து ,இடுப்பைக் கிள்ளுவது, நூறுபேரு வந்தாலும் அடுச்சு துவம்சம் செய்வது இல்லை, சக மனிதர்களின் கண்ணீரைத் துடைப்பது, நம்பிக்கையை காப்பாற்றுவது என்பதே உண்மையான ஹீரோவின் பங்கு என்பதை விஜய் ஆண்டனி பாத்திரம் சத்தமில்லாமல் உணர்த்தியிருக்கிறது.. செல்வி என்ற ஸ்வாதிகா , அப்படியே நம்மோடு வாழும் பக்கத்துவீட்டுப் பெண்ணாக நெகிழ வைத்துவிட்டார், பேரன்போடு இவரை தமிழ்த் திரைப்பட நாயகியாக ஏற்றுக்கொள்ளலாம்.. இரண்டு மகன்களாக நடித்திருக்கும் குழந்தைகள் அப்படியே என் இரண்டு பிள்ளைகளின் சாயல், செல்வியின் வாழ்வைப்போலவே.. நிறைய இடங்களில் கண்கலங்க வைத்த ஒரு திரைக்காவியத்தை இவ்வளவு எளிமையாக நமக்களித்த இயக்குநர் சசி அவர்களுக்கும், தயாரித்த விஜய் ஆண்டனி குடும்பத்திற்கும் எனது பேரன்பு நன்றியும் மகிழ்ச்சியும்..🙏💐💐 இப்படத்தை திரையங்கில் இன்னும் கூட ஓட வைக்கலாம், நம் சமூகத்தின் சாஸ்திரக்கட்டுடைப்புகள் ஓடும் வரைக்கும் ஓடவைக்கலாம்.. -பா.மகாலட்சுமி-

கருத்துகள்