நூலின் பெயர்: சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம். நூலாசிரியர்: கவிஞர் இரா இரவி மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( காவல் கண்காணிப்பாளர் பணிநிறைவு )
நூலின் பெயர்: சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றி முழக்கம்.
நூலாசிரியர்: கவிஞர் இரா இரவி
மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் ( காவல் கண்காணிப்பாளர் பணிநிறைவு )
வெளியீடு புகழ்பெற்ற வானதி பதிப்பகம்.
23, தீனதாளு தெரு, தியாகராய நகர், சென்னை – 600 017. விலை : 100 பக்கங்கள் : 102
சிலர் எவரெஸ்ட் ஏறி சாதனை புரிந்திருப்பார்கள்.
ஆனால் எவரையும் எவரெஸ்ட் ஏற வைத்து சாதனை படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இந்நூலின் கருப்பொருளுக்குச் சொந்தக்காரரான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் தானும் உயர்ந்து தனது பேச்சுகளைக் கேட்பவரையும் எழுத்துக்களைப் படிப்பவர்களையும் வாழ்வில் உயர்த்தியவர் என அறிந்து பெருமையுற்றேன்.
கவிஞர் இரா இரவி தானாக யாரிடமும் பழக மாட்டார். பழகிவிட்டால் அந்த நட்புக்கு பயனுள்ளவராக இருப்பார்.
கவிஞர் இரா இரவி ஒருவர் எழுதிய நூல்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து கருத்துரை வழங்குகின்றார் என்றால் அந்த நல்வாய்ப்பினைப் பெறுகின்றவர்கள் நுண்மான் நுழைப்புலத்தில் உயர்ந்தவர்களாகவே இருப்பர் என்பது உறுதி.
ஆனால் நான் தேர்ந்தெடுத்த பணியின் காரணமாகவோ அல்லது எந்தக் காரணத்தாலோ கவிதாசன் அவர்களை இதுகாறும் அறியாமலேயே காலம் தள்ளியுள்ளது கண்டு கவலையுற்றேன்.
கவிதாசன் அவர்களது இயற்பெயர் வேறாக இருக்கக்கூடுமென நினைக்கின்றேன்.
கொங்கு மண்டலத்தினர் தமிழின் மேல் சற்று கூடுதலாகத் காதல் கொண்டவர்கள் என்பதால் இப்பெயரை ஏற்று வாழ்வது நம் தமிழ்த்தாய்க்குச் சேர்க்கப்பட்ட அணிகலனாக எண்ணுகின்றேன்.
கவிதாசன் அவர்களை நேரடியாகச் சந்தித்து அளவளாவி பழக வாய்ப்பு இல்லையென்றாலும் அவருக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
அவரும் நானும் அருந்தமிழ் மற்றும் அப்துல் கலாம் அய்யாவின் ரசிகர்கள்.
மேலும் இளைஞர்கள் உயர்ந்தால் இந்த இந்தியா உயரும் என்ற கொள்கையில் நூறு விழுக்காடு நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இளைய வயதில் எனக்கு கவிதாசன் போன்ற அறிஞர்களின் அறிமுகம் கிடைத்திருந்தால் இன்னும் உயர்ந்து வளர்ந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதனை அவரது நூல்கள் வழியாக அறிந்து ஆதங்கப்பட்டேன்.
அந்த வாய்ப்பு கிடைத்திட்ட இன்றைய இளைஞர் சமூகம் கவிதாசன் அவர்களின் நூல்களைப் படித்தும் பேச்சுக்களைக் கேட்டும் அதன்படி உயர் வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
கவிஞர் இரா.இரவி வாயிலாக மாமதுரையில் பல நல்ல அறிஞர்களை அறிந்து பழகி பயனடைந்து வரும் நான் கொங்கு மண்டலத்தில் இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றும் கவிதாசனின் வெற்றி முழக்கத்தை இனி நான் அறிந்த நண்பர்கள் சிறு குழாமில் முழங்குவேன் என்பதனைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
கவிதாசன் மற்றும் கவிஞர் இரா இரவி ஆகியோரின் " வெற்றி முழக்கங்கள் " தொடரட்டும். இருவருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும். மிக்க நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக